வியாழன், 8 பிப்ரவரி, 2024

விஜயகாந்தின் தேமுதிக ஆரம்ப புள்ளி பாஜக -- மக்கள் நலக்கூட்டணியும் பாஜக உபயம்தான்!

May be an image of 3 people and text
May be an image of 2 people and dais
விஜயகாந்தின் தேமுதிகவின் ஆரம்ப புள்ளி பாஜக -- மக்கள் நலக்கூட்டணியும் பாஜகவின் உபயம்தான் .. பாஜகவின் முன்னாள் ஆதரவாளர் பொன்ராஜ் .. வாக்குமூலம்  
Ponraj Vellaichamy  :  மனித நேயம் கொண்ட மாமனிதன் காலமானார்.
தேமுதிக தலைவர் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களது மரணம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
நல்லவர்களை இறைவன் சீக்கிரமாக அழைத்துக்கொள்கிறான் என்பது வருத்தத்திற்குரியதாக இருக்கிறது.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திருமதி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள், மைத்துனர் திரு சுதீஸ்  அவர்களுக்கும், தேமுதிக நண்பர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
கேப்டன் அவர்களோடு எனது நினைவலைகள்
கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களோடு எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்து அவரை நினைவு கூற விரும்புகிறேன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடிகர்கள் 11 வது இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை சந்திப்பதற்காக டெல்லி வந்திருந்தார்கள்.
அப்பொழுது நான் குடியரசு தலைவர் மாளிகை செயலகத்தில் டைரக்டர் (தொழில்நுட்பம்) என்ற பொறுப்பில் Dr APJ அப்துல் கலாம் அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அன்றுதான் திரு விஜயகாந்த் அவர்களை நான் முதன் முதலாக சந்தித்தேன் அன்றைக்கு வந்திருந்த அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்லி புரா திட்டத்தை பற்றி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் விஜயகாந்த் மற்றும் நடிகர்களுக்கும் விளக்கி கூறினார். எப்படி ஒரு தற்சார்புபெற்ற கிராமத்தை உருவாக்குவது, அதற்கு  நடிகர்களின் பங்கு என்ன என்ற ஆலோசனையை டாக்டர் கலாம் அவர்கள் திரு விஜயகாந்த் அவர்களுக்கு கொடுத்தார்.
அப்பொழுது புரா பற்றிய விவரங்களை திரு விஜயகாந்த் அவர்களுக்கு கொடுத்து விளக்குமாறு என்னிடம் சொன்னார். அந்த சூழலில் தான் திரு விஜயகாந்த் அவர்களை நான் சந்தித்தேன்.
அப்பொழுது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. இதன் தொடர்பாக அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பொழுது அவரது இல்லத்தில் திரு விஜயகாந்த் அவர்களையும் அவரது துணைவியார்  திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் சந்தித்து கட்சியின் கொள்கைகளைப் பற்றியும் தேர்தல் அறிக்கையை பற்றியும் விரிவாக விவாதிக்க கூடிய வாய்ப்பு எனது வெளிநாட்டு நண்பர்கள் மூலம் உருவானது. அதற்கு அனுமதியும் டாக்டர் அப்துல் கலாம் கொடுத்தார்.
ஒரு நாள் முழுவதும் அரசியல் கொள்கைகளைப் பற்றியும் தேர்தல் அறிக்கையை பற்றியும் திரு விஜயகாந்த் அவர்களோடும் திருமதி பிரேமலதா அவர்களோடும் விவாதிக்க கூடிய வாய்ப்பும், அவர்களோடு மதிய உணவு உண்ணக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து அவரோடு அடிக்கடி சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது அரசியல் பேசக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது.
2011 தேர்தலில் தேமுதிக,  அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.    செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக பதவி ஏற்றவுடன் அன்று மதியம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மதிய உணவு விருந்திற்கு என்னையும் வருமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அழைத்திருந்தார்கள்.‌
அங்கு அன்றைய குஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடி, திரு விஜயகாந்த், திரு சோ மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள்  செல்வி ஜெயலலிதாவோடு அமர்ந்திருந்தார்கள்.
நான் சென்றவுடன் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் என்னைய அனைவருக்கும் அறிமுகப்படுத்தினர், பொன்ராஜ் தான் அஇஅதிமுகவிற்கு தேர்தல் அறிக்கை பண்ணி கொடுத்தார் நமது வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லி அனைவருக்கும் அறிமுகம் செய்தார்.
அப்பொழுது திரு விஜயகாந்த் அவர்கள் அம்மா எனக்கு பொன்ராஜை நன்றாக தெரியும் அவர் எனது நண்பர் என்று கூறி ஜெயலலிதா அவர்களுக்கு என்னை அறிமுக படுத்தினார். இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்கள்.
2014 பாராளுமன்ற தேர்தலுக்கான முன் முயற்சியில் தமிழக கூட்டணி பற்றிய கருத்து பரிமாற்றம் அன்றைய குஜராத் முதல்வர் பிஜேபினுடைய பிரச்சார கமிட்டியின் தலைவரான திரு நரேந்திர மோடி  அவர்களோடு குஜராத் காந்திநகரில் அவரது அலுவலகத்தில் 45 நிமிடம் மோதி அவர்களும் நானும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி தனியாக விவாதித்தோம்.
அப்பொழுது தமிழகத்தில் ஜெயலலிதா அவர்கள் கூட்டணிக்கு வர மறுத்து விட்டார், அடுத்து எப்படி கூட்டணி அமைப்பது என்பதை பற்றி என்னிடம் திரு மோடி கருத்தை கேட்டறிந்தார். அப்பொழுது திரு வைகோ அவர்களையும், திரு விஜயகாந்த் அவர்களையும் இணைத்து மற்ற கட்சிகளோடு ஒரு கூட்டணியை உருவாக்குவோம் என்று முடிவெடுத்தோம்.
அன்று உடனடியாக அவரது அலுவலகத்தில் இருந்து திரு வைகோ அவர்களை தொடர்பு கொண்டு நேரடியாக திரு. நரேந்திர மோதி அவர்களோடு பேச வைத்தேன்.
திரு விஜயகாந்த் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. திரு மோதி அவர்கள் சென்னை சென்று அவரிடம் விவாதித்து பதில் சொல்ல சொல்லி இருந்தார். நான் சென்று தகவல் தெரிவித்தேன் அப்பொழுது தேர்தல் சமயத்தில் நாம் இந்த முடிவெடுக்கலாம் என்று சொல்லி இருந்தார்.
அதன் பின்பு டிசம்பர் 31, 2013 இரவு 10 மணிக்கு திரு நரேந்திர மோதி அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து திரு விஜயகாந்த் அவர்களிடம் உடனடியாக பேசி கூட்டணிக்கு அவர் வருகிறாரா என்று கேட்டு உடனடியாக தகவல் தெரிவிக்க சொன்னார்.
நான் மறுநாள் சென்னை சென்று திரு பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் திரு விஜயகாந்த் அவர்களையும் சந்தித்து திரு நரேந்திர மோடியின் விருப்பத்தை தெரிவித்தேன். அப்பொழுது நாங்கள் கூடிய சீக்கிரம் செயற்குழு பொதுக்குழுவை கூட்டி கூட்டணிக்கான முடிவை அறிவிக்கிறோம் என்று இருவரும் சொன்னார்கள். இப்படி தான் 2014 ஆம் ஆண்டு பிஜேபி தலைமையிலான NDA கூட்டணி தமிழ்நாட்டில் உருவானது.
பாரதப் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவிற்கு டெல்லிக்கு விஜயகாந்த் அவர்களும் அவரோடு தேமுதிக தலைவர்களும் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும்  வந்திருந்தார்கள். அவர்களை சந்தித்து அடுத்த அரசியல் நடவடிக்கை பற்றி விவாதித்தோம்.
அதன் பின்பு திரு விஜயகாந்த் அவர்கள் உடல்நலிவுற்ற  ஆரம்ப காலகட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்பாக சேலத்தில் நான் ஒரு விழாவிற்கு சென்றிருந்த பொழுது நான் தங்கி இருந்த ஓட்டலில் தான் திரு விஜயகாந்த் அவர்களும் தங்கி இருந்தார்.
அன்றைக்கு திரு விஜயகாந்த் அவர்களை சந்தித்துதான் நான் கடைசியாக அவரை நேரில் சந்தித்த தருணம்.
எனது அனுபவத்தில் திரு விஜயகாந்த் என்ற ஒரு நல்ல மனிதரை, ஒரு நல்ல அரசியல் தலைவரை, மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட ஒரு அரசியல் தலைவராக தான் நான் பார்த்தேன். நேர்மையான ஒரு நல்ல மனிதரை இந்த கேடு கெட்ட அரசியல் ஏற்றுக்கொள்வதில்லை.
தனி நபரை விட சித்தாந்தம் பெரியது. வெறும் சினிமா பிரபல்யம் நேர்மை, சித்தாந்தை மட்டும் வைத்து வெற்றிபெறுவது கடினம்.
இன்றைய அரசியலில் குறுக்கு புத்தி, சாணக்கியத்தனம் என்ற அயோக்கிய அரசியல், சாதி, மத வெறுப்பு அரசியல், ஊழல் பண அரசியல், வெறுப்பு அரசியல் மிஞ்சி நிற்கிறது. இவை அனைத்திற்கும் துணை போகும் மக்கள் சதவிகிதமும் அதிகமாக இருக்கிறது. இந்த அயோக்கிய அரசியலுக்கு துணையாகவும் மக்கள் இருக்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டிய மக்கள் செல்வாக்கு, பணபலம், சித்தாந்த பலம்,  ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல், அரசியல் விவேகம், அதோடு நேர்மை மற்றும் ஒருமி்த்த கருத்து கொண்ட கூட்டணி பலம் இருந்தால்தான், மாற்றுச்சிந்தனை கூட வெற்றி பெற முடியும் என்ற உண்மை திரு விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் நமக்கு உணர்த்தும் உண்மை.
ஆனால் விதி வேறு விதமாக விளையாடி அவரது அரசியல் பயணம் திசைமாறி, அவர் உடல் நலம் குன்றி இன்றைக்கு நம்மை விட்டு மறைந்து விட்டார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு திரைதுறையில் ஒரு வள்ளலாக, அனைவரையும் அரவணைக்க கூடிய ஒரு தலை சிறந்த தலைவராக, நடிகர் சங்கத்தை கடலில் இருந்து மீட்டெடுத்த ஒரு தலைவராக, அரசியலில் தைரியமிக்க தலைவராக பரிணமித்து அவரை பயன்படுத்த  தமிழக அரசியல், தமிழக மக்கள் இழந்துவிட்டா்கள் என்று தான் பார்க்க வேண்டும்.
எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் செல்வாக்கை 10 சதவீதம் பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே.
இன்றைக்கு அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். அனைத்து தமிழக மக்களாலும், திரையுலக நண்பர்களாலும், அரசியல் தலைவர்களாலும் திரு விஜயகாந்த்  அவர்கள் போற்றப்படுகிறார் என்று சொன்னால் அதற்கு காரணம் அவர் நடிகராக அல்ல, அரசியல் தலைவராக அல்ல, அதையும் தாண்டி ஒரு மனித நேயம் கொண்ட பண்பாளராக, ஒரு மாமனிதனாக  போற்றப்படுகிறார். அவரது மனித நேயம் ஓங்கட்டும்.
அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்தனை செய்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக