வியாழன், 8 பிப்ரவரி, 2024

அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி? அமித் ஷா பேச்சால் ரகசியம் அம்பலம்?

BBC  முரளிதரன் காசி விஸ்வநாதன் : : கூட்டணிக்கான கதவுகள் அ.தி.மு.கவுக்கு திறந்தே இருக்கின்றன என மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், பா.ஜ.கவைப் பொறுத்தவரை கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டுவிட்டன என பதிலடி கொடுத்திருக்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக - பா.ஜ.க. இடையே என்ன நடக்கிறது?
அமித் ஷா பேச்சும் அதிமுக பதிலடியும்
நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்துக் கேட்டபோது, "கூட்டணிக்கான எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று பதிலளித்திருக்கிறார்.


தமிழ்நாட்டில் 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
ஆனால், கடந்த ஆண்டு துவக்கத்திலிருந்து இரு கட்சிகளுக்கு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடு முற்றிய நிலையில், கூட்டணியிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அ.தி.மு.க. அறிவித்தது.

இதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளுமே தனித்தனியாக கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றன. இந்த நிலையில்தான் அமித் ஷாவின் இந்தக் கருத்து வெளியாகி அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து கேட்டபோது, "எங்களுக்கு எப்போதுமே பா.ஜ.க. கூட்டணி தேவையில்லை என்பதுதான் தொண்டர்களின் கருத்து. எந்தக் காலத்திலும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை. பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் அமித் ஷா, அவருடைய கருத்தைக் கூறலாம். ஆனால் பா.ஜ.கவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடாகும். பா.ஜ.கவைப் பொறுத்தவரை எங்களது கூட்டணிக் கதவு மூடப்பட்டுவிட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "அ.தி.மு.க. எனக் குறிப்பிட்டு அமித் ஷா பேசவில்லை. கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்றே பேசியிருக்கிறார்" என விளக்கம் அளித்திருக்கிறார்.

அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணியில் இருந்து பிரிந்த பிறகு, இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுவது இது முதல் முறையல்ல. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே. வாசன் இரு கட்சிகளையும் ஒரே கூட்டணிக்குக் கொண்டுவர முயற்சித்தார். ஆனால், இந்த முயற்சியை அ.தி.மு.க. தரப்பு நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில்தான், அமித் ஷா பேட்டியின் மூலம் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்குமா என்ற பேச்சு எழுந்திருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவது என்பது தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூடி எடுத்த முடிவு, அது மாறவே மாறாது என்கிறார் அ.தி.மு.க. ஐடி விங்கின் இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார்.

"பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்பதை தீர்மானமாக நிறைவேற்றி அ.தி.மு.க. அறிவித்துவிட்டது. அ.தி.மு.கவின் தலைவர்களான ஜெயலலிதாவையும் எம்.ஜி.ஆரையும் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவையும் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் முதிர்ச்சியற்ற வகையில் பேசியதுதான் இதற்கு காரணம்.

இதனை வெளிப்படையாக அறிவித்து, பிரிந்துவிட்ட நிலையில் மீண்டும் கூட்டணி எப்படி ஏற்படும்? ஏழு கோடி மக்கள் இதனையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.கவுடன் கூட்டணி கிடையாது என்பதை எல்லா இடங்களிலும் எங்கள் தலைவர் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆகவே அப்படி நடப்பது சாத்தியமேயில்லை" என்கிறார் சிடிஆர் நிர்மல்குமார்.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் சொல்லாத கருத்தை முன்வைத்து பரபரப்பு கிளப்பப்படுகிறது என்கிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. "அதில் கேள்வி, 'அ.தி.மு.க. கூட்டணி முறிந்துவிட்டது. மூன்றாவது கூட்டணி அமைக்கப்படுமா' என்பதுதான். அதற்குத்தான் கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்ற பதிலைச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா. மற்றபடி பரபரப்பை ஏற்படுத்த விரும்புபவர்கள் அதை எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் அவர்.

அ.தி.மு.க. வட்டாரங்களைப் பொறுத்தவரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து இந்த நேரத்தில் பொருத்தமில்லாதது என்றே கருதுகிறார்கள். இனிமேல் பா.ஜ.கவோடு கூட்டணி கிடையாது என அ.தி.மு.க. தலைமை திரும்பத்திரும்பப் பேசிவரும் நிலையில், இதுபோல கருத்துகளை வெளியிடுவது பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் ரகசிய உறவில் இருக்கிறது என பேச்சு எழுவதற்கே உதவும் எனக் கருதுகிறார்கள் அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக