திங்கள், 26 பிப்ரவரி, 2024

சென்னை ஆணவப் படுகொலை.. நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்..

tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங்  :  சென்னையிலும் ஆணவப் படுகொலை.. நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்.. பாய்ந்தது ஆக்சன்
தனது தங்கையை காதல் திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை, பெண்ணின் அண்ணன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக அவரது மனைவியின் அண்ணன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சாதி ஆணவப் படுகொலை தமிழ்நாட்டிற்கு புதிது அல்ல. அப்படி ஏராளமான சம்பவங்கள் நடந்திருந்தாலும், அவை பெரும்பாலும் நெல்லை, மதுரை போன்ற தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களில் கிராமப்புறங்களிலும் தான் நடந்திருக்கின்றன. ஆனால் பெரிதாக சாதி பாகுபாடு பார்க்காத சென்னையிலேயே இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது தான் அனைவரையும் அதிச்சியடைய செய்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரும், ஜல்லடியன்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இது இருவரின் வீட்டுக்கு தெரியவந்துள்ளது. இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், ஷர்மியின் வீட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரவீனை திருமணம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளனர். இந்த சூழலில், பிரவீனும், ஷர்மியும் தங்கள் வீட்டுக்கு தெரியாமல் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதை அறிந்த ஷர்மியின் வீட்டார் பிரவீனின் கடும் கோபத்தில் இருந்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாமல் வேறு பகுதியில் அவர்கள் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று இரவு பிரவீன் வந்திருக்கிறார். இதை பார்த்த சிலர், இதுகுறித்து ஷர்மியின் அண்ணன் தினேஷுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தனது நண்பர்கள் 4 பேருடன் அங்கு வந்த தினேஷ், பிரவீனை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இசம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து பிரவீனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலையை செய்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் உட்பட 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக