திங்கள், 26 பிப்ரவரி, 2024

ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்: துரைமுருகன் உத்தரவு! அயலக அணி துணை அமைப்பாளர்

tamil.asianetnews.com  - Manikanda Prabu  :  திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் அக்கட்சியின் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. ஜாபர் சாதிக் திமுகவை சார்ந்தவர் என்பதால், பலரும் அக்கட்சியை விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் அக்கட்சியின் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பிறப்பித்துள்ளார்.

Jaber Sadiq expelled from DMK duraimurugan order smp
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக