வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு - பஞ்சாப், ஹரியாணா எல்லையில் என்ன நடக்கிறது?

 BBC - தமிழ் : மோதி அரசு vs விவசாயிகள்: 2வது நாளாக கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு - விவசாயிகள் தற்காப்புக்கு என்ன செய்கிறார்கள்?
டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் ஹரியாணா - பஞ்சாப் மாநில எல்லையில் ஷாம்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து முன்னேறக் கூடாது என்பதற்காக இரண்டாவது நாளாக இன்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தடுப்புகளை மீறி ஹரியாணா எல்லையை கடக்க விவசாயிகள் முயன்று வருகின்றனர்.
காலை 11 மணி முதல் விட்டுவிட்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை கைகளில் வைத்திருக்கின்றனர் விவசாயிகள்.



இந்த பேரணியில் பங்கேற்பவர்கள் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள். அவர்கள், பஞ்சாப் - ஹரியாணா மாநில எல்லைப் பகுதியை செவ்வாய்கிழமை மதியம் வந்தடைந்தனர். அப்போதே அவர்கள் கலைந்து செல்வதற்காக ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.

விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஆங்காங்கே நாள் முழுவதும் நீடித்து வந்த மோதல் இரவானதும் தற்காலிகமாக ஓய்ந்தது. விவசாயிகள் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் முகாமிட்டு, நாளைய தினத்திற்காக தயாராவார்கள் என்று விவசாயத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியிருந்தார். இரவில் போராட்டத்தை நிறுத்திக் கொண்டு முகாமிட்ட விவசாயிகள் இன்று மீண்டும் டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம்

ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு
கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதில் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த முறை விவசாயிகள் டெல்லிக்குள் நுழையக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி நகர் முழுவதும் முள் கம்பி வேலிகள், சிமெண்ட் கற்கள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில், ஆயுதமேந்திய போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் காவலில் உள்ளனர்.

கடந்த முறை தொடர் போராட்டத்தின் காரணமாக, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

விவசாய சங்கத் தலைவர்கள் கூறுவது என்ன?
கிஷான் ஐக்கிய முன்னணியை சேர்ந்த விவசாயியான ராகேஷ் திகாயத், அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், விவசாயிகள் அரசுடன் பேச தயராக உள்ளார்கள். எந்த இடம், நேரம் என்பதை அரசுதான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமையுடன் பேசிய அவர், “ விவசாயிகளை அரசு துன்புறுத்தக்கூடாது. அவர்கள் டெல்லிக்கு போவார்களே தவிர, திரும்பி பஞ்சாப் செல்ல மாட்டார்கள். ஏதாவது நடந்தால், விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். விவசாயிகளோ அல்லது டெல்லியோ வெகுதொலைவில் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “பிப்ரவரி 16 வரைதான் அரசுக்கு கால அவகாசம். அன்று எங்களது கூட்டமைப்பின் ஒரு கூட்டம் நடக்கவுள்ளது. அதற்குள் அரசு பேசவில்லையென்றால் எங்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவை பின்பற்றுவோம். படிப்படியாக இந்த இயக்கம் வளரும். அதற்காக அனைவரும் டெல்லிக்குதான் போக வேண்டும் என்பதில்லை, எங்கிருந்து வேண்டுமானாலும் அவரவர் இருக்கும் இடத்திலேயே போராட்டங்கள் தொடங்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகள் கற்களை எறியவில்லை. வெளியிலிருந்து வந்த யாரவது அதை செய்திருக்கலாம். ஆனால், விவசாயிகள் பேச்சுவார்தையின் மூலமே இந்த பிரச்னைக்கு ஒரு வழி கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.”

இந்த இயக்கத்தின் தலைமை குறித்து பேசிய அவர், “கிசான் ஐக்கிய முன்னணி இன்னும் இந்த போராட்டத்தில் பங்குபெறவில்லை. ஆனால், இந்த போராட்டத்தை வழிநடத்தி வரும் தலைவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். அரசு எங்களை உடைக்க முயற்சிக்க கூடாது. அதற்கு பதிலாக எங்களது பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.


விவசாய அமைப்பின் முன்னாள் தலைவரான ஜக்ஜித் சிங் தலேவால், இதுகுறித்து தான் பாட்டியாலா நிர்வாக அதிகாரிகளோடு சந்திப்பில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி முகமையின் படி, “புகை குண்டுகளை போடுவதை நிறுத்தினால் மட்டுமே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியம் என்று அரசு அதிகாரிகளிடம் தான் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்”

இதுகுறித்து பேசியுள்ள தலேவால், “ பாட்டியாலா துணை ஆணையர், டிரோன்கள் குறித்து அம்பாலா துணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.” என்று தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், "பிப்ரவரி 15ம் தேதி அதாவது நாளை மாலை 5 மணிக்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாளை வரை ஒத்துழைக்குமாறு எங்கள் தலைவர்கள், இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.

சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், "இன்று நாங்கள் தொடர்ந்து ஒரு சரியான சூழலை உருவாக்க வேண்டும் அனைவரிடமும் பேசி முடிவு செய்தோம். ஆனால் நாங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தோம், ட்ரோன் வந்து, எங்கள் மீது ஷெல் குண்டுகளை வீசியது."

"மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை. நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறோம். நீங்கள் பேசுங்கள். நாங்கள் மோதலை விரும்பவில்லை. டெல்லிக்கும் சென்றே தீர வேண்டும் என்றும் விரும்பவில்லை."

அரசு உடனான சந்திப்புக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலேவால் தெரிவித்தார்.

அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி
அரசுடனான பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும், தங்களது கோரிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமை 'டெல்லி நோக்கி அணிவகுப்போம்' என்ற பேரணியை தொடங்கினர். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியின் எல்லையில் தங்கிப் போராடிய விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் நரேந்திர மோதி அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை ஒப்பந்த உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவற்றை ரத்து செய்தது.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் பிபிசியிடம் பேசுகையில், "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற 'தில்லி சலோ' கோஷத்தை நாங்கள் கொடுக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப் பெற அரசு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிறோம்,” என்றார்.

மேலும் பேசிய தலேவால், "அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அரசு உறுதியளித்தது. இதனுடன், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் கூறியது. லக்கிம்பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படும், என்று கூறியிருந்தது,”என்றார்.

விவசாயிகள் போராட்டம்
2021-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்புர்-கேரி என்ற இடத்தில் அரசாங்கத்தின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய நான்கு சீக்கிய விவசாயிகள், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் வாகனத்தால் மோதப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

விவசாயிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு சட்டங்களிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் கூறியதாக டலேவால் கூறினார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு பயிர் ஆதார விலை வழங்கப்படும் என்பது மிகப்பெரிய வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையில் விவசாயிகளுக்கு பயிர்ச் செலவை விட ஒன்றரை மடங்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருகிறது.

விவசாயிகள் போராட்டம்

இரண்டு ஆண்டுக்குப் பிறகு விவசாயிகள் மீண்டும் போராடுவது ஏன்?

முந்தைய போராட்டம் திடீரென முடிவுக்கு வரவில்லை என்று விவசாயிகள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் அப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகள் இப்போது அழுத்தம் கொடுக்க முடிவெடுத்திருக்கின்றனர்.

விவசாயிகள் உரிமை ஆர்வலரும் பத்திரிகையாளருமான மந்தீப் பூனியா அதுபற்றிக் கூறுகையில், “நான்கு மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை உருவாக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகின்றனர்,” என்றார்.

பிபிசியிடம் பேசிய அவர், "தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை ஃபார்முலா மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் விலை, அவர்களின் செலவுகளைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, அதாவது ஒன்றரை மடங்கு செலவில் குறைந்தபட்ச ஆதரவு விலை கோருகின்றனர். தற்போது உள்ளீட்டுச் செலவின் அடிப்படையில் மட்டுமே அரசு இதை முடிவு செய்கிறது. இதில் ஊதியம் கூட சேர்த்து கொள்ளப்படுவதில்லை, என்றார்.

தலேவால் கூறுகையில், "அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நாங்கள் நினைவூட்டுகிறோம். தேர்தல் வந்துவிட்டது, புதிய அரசு வந்தால் நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று சொல்ல வாய்ப்புண்டு. எனவே இதுவே சரியான தருணம் என்று அரசு கொடுத்த வாக்குறுதிகளை நினைவூட்ட நினைக்கிறோம்,” என்றார்.

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்த அரசு, அவரது பெயரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்தாதது முரணானது என்றார் தேலேவால். “விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க வேண்டாம் என்று அவர் பரிந்துரைத்திருந்தார், ஆனால் அரசாங்கம் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறது,” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக