வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

கமல் ஹாசன் தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் நிக்கிறார்! . தென் சென்னை கோவை ராமநாதபுரம்?

லைமலர் : சென்னை: தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளனர். தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் கூட்டணி கட்சிகள் கொடுத்துள்ளன.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை.
வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்னும் 2 நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் அடுத்த வாரத்தில் கமல்ஹாசனுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என் பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தி.மு.க. தரப்பில் கேட்டபோது, "கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சியான காங்கிரசுக்கே இந்த முறை 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி ஒரு சீட் மட்டுமே கிடைக்கும் பட்சத்தில் அந்த தொகுதியில் கமல்ஹாசனே களம் இறங்க முடிவு செய்துள்ளார்.

தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விரும்புகிறார்கள். இதில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடுமையான இழுபறி ஏற்பட்டுள்ளது.

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி தற்போது தி.மு.க. வசம் உள்ளது. கோவை, மதுரை தொகுதி கள் கம்யூனிஸ்டு கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளாகும். ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இப்படி மக்கள் நீதி மய்யம் போட்டியிட விரும்பும் 4 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகள் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றன. தென்சென்னை தொகுதியை விட்டுக்கொடுக்க தி.மு.க.வுக்கு மனமில்லை. கோவை, மதுரை தொகுதிகள் நாங்கள் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளாகும். அதனை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? என்று கம்யூனிஸ்டு கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

ராமநாதபுரம் தொகுதியை எந்த சூழலிலும் நாங்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதனாலேயே சிக்கல் நிலவி வருகிறது.

இதுபோன்ற குழப்பங்களால் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்கு தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் அடுத்த வாரம் கமல்ஹாசனுடன் நடத்தப்படும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதி இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக