வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

ஒன்றிய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

மாலை மலர் : இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் குமார் இடைக்கால பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி., சுங்கம், நேரடி வரி என எல்லாவற்றில் இருந்தும் எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெற வேண்டும். எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது."

"வரும் நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனில், இந்தி மொழி பேசும் பகுதியினர் நம் மீது திணித்துள்ள சூழ்நிலை காரணமாக தனிநாடு கோரிக்கையை முன்வைக்க நேரிடும்," என்று தெரிவித்தார்.

மாலை மலர் :  இந்நிலையில், முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பட்ஜெட் குறித்து கூறியதாவது:
ஜி.டி.பி. குறித்து பேசிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமானம் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை.
இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசி உள்ள அவர், உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதை தெரிவிக்கவில்லை.
பணவீக்கம் குறித்து மேம்போக்காக குறிப்பிட்ட மத்திய நிதி மந்திரி உணவுப் பொருட்களின் விலை 7.7 சதவீதம் வரை அதிகரித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லை.

விவசாயிகள் பற்றி பேசிய நிதி மந்திரி விவசாயிகள் தற்கொலை குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை? ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நிலையில்லாத குறைந்தபட்ச ஆதார விலை, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, காப்பீடு விவகாரங்களில் குளறுபடி போன்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் எதுவும் இந்த பட்ஜெட் உரையில் பேசப்படவில்லை.

புதிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனை கல்லூரிகள் கட்டப்படும் என பேசும் நிதி மந்திரி மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து பேசவில்லை. குறிப்பாக இந்தப் பணியிடங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இடங்களாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2013-14 நிதியாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சியை 6.4 சதவீதம் ஆகவும், சராசரி வளர்ச்சியை 7.5 சதவீதம் ஆகவும் வைத்துச்சென்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி.டி.பி. வளர்ச்சியை 6 சதவீதத்திற்கு கீழாகக் குறைத்துள்ளது.

இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதி மந்திரி வேலைவாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை. 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் கிராமப்புறங்களில் 8.3 சதவீதம், நகர்ப்புறங்களில் 13.8 சதவீதம் வேலையில்லாமல் இருக்கின்றனர். 25 வயதிற்கு உட்பட்ட படித்த இளைஞர்கள் 42 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.

30 முதல் 34 வயது வரையிலான படித்த இளைஞர்கள் 9.8 சதவீதம் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட நிதிமந்திரி பட்ஜெட் உரையில் கூறவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் கனவுகளை உடைக்கும் வேலையை தான் மத்திய அரசு செய்து வந்துள்ளது என தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக