ஞாயிறு, 7 ஜனவரி, 2024

வைகோ : உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு: ஸ்டாலினுக்கு வலியுறுத்தல்!

மின்னம்பலம் - Aara :  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான முக்கிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வர இருப்பதால் தமிழ்நாடு அரசு  கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்ட்லைட் ஆலை சுற்றுப்புற சூழலுக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வைகோ இன்று (ஜனவரி 6) ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், 1994 இல் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 1996 இல் இருந்து தான் போராடி வருவதை விரிவாக  பட்டியலிட்டுள்ளார்.
மே.லும் அவர், “ஸ்டெர்லைட் ஆலையின் நச்சு வாயுவினால் புற்றுநோய், நுரையீரல் தொற்று நோய், சரும நோய் இவற்றால், தூத்துக்குடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை சாதகமாக பயன்படுத்தி 2018 இல் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை மேலும் இரண்டு மடங்கு விரிவாக்கம் செய்ய முனைந்தது.

இதனை எதிர்த்து குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மற்றும் தூத்துக்குடி மாநகர மக்கள் கொந்தளித்துப் போராடினர்.

போராட்டத்தின் நூறாவது நாளான 2018 மே 22 அன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற போது, எடப்பாடி பழனிசாமி அரசு காவல்துறையை ஏவி, காக்கை குருவிகளை சுடுவது போல அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. காவல்துறையின் நரவேட்டைக்கு 13 அப்பாவி மக்கள் உயிர்கள் பறிபோயின” என்பதை நினைவுகூர்ந்துள்ள வைகோ,

மேலும், “அதன் பிறகு ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பால், அதிமுக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக 2018 மே 28ஆம் தேதி ஆணை பிறப்பித்தது.

ஆனால் அந்த ஆணையில் தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல் குறித்த சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பு கொடுக்கப்பட்ட அனுமதி காலாவதி ஆகிவிட்டது.
மீண்டும் புதிய அனுமதி கொடுக்கவில்லை என்பதால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 48ஆவது பிரிவின் அடிப்படையில் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தீர்ப்பாயத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்து அனுமதி பெற்றால் தமிழ்நாடு அரசு ஆணை செல்லுபடி ஆகாது. ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தேன்.

வழக்கு 13.06.2018 அன்று நீதியரசர்கள் செல்வம், பஷீர் அகமது அமர்வில் விசாரணைக்கு வந்த போது, எனது மனுவை ஏற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதனிடையே டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு நடந்த போது, என்னையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மனு அளித்தேன்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோயல் அவர்கள் முன்பாக கடுமையாகப் போராடி எனது வாதங்களை எடுத்துரைத்தேன்.
ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 15.12.2018 இல் அனுமதி அளித்தது.

உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன். இதையடுத்து 2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18ஆம் தேதி நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 22 ஆம் தேதி வருவதாக பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இவ்வழக்கில் வழக்குரைஞர் ஆனந்த செல்வம் வாதாட இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாதபடி தக்க முறையில் வழக்கை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் வைகோ.
–வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக