வியாழன், 18 ஜனவரி, 2024

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: `அரசியல் நுழைவதால் குளறுபடிகள்!’ - மாடுபிடி வீரர் புகார்; நடந்தது என்ன?

Vikatan: : உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் இரண்டாவது பரிசுக்கு அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான களமான மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாலை 6 மணி வரை 10 சுற்றுக்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் 810 காளைகளுடன் 500 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.
முதல் பரிசு பெறும் கார்த்திக்
போட்டியில் மாடுபிடி வீரர்களை திணறச்செய்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளே அதிக அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளிச் சென்றது.
மாலை 6 மணியைக் கடந்தும் நடந்த போட்டியில் 18 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றதாக மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு
சிறப்பாக விளையாடிய காளை உரிமையாளர் திருச்சி மாவட்டம் மேலூர் குணா என்பவருக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இதையடுத்து 17 காளைகளை பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் என்ற வீரர் இரண்டவாது இடம் வந்ததாக அறிவிக்கப்பட்டு பைக் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஆனால், 'நான்தான் அதிக மாடுகளை பிடித்தேன், முதல் பரிசு அறிவிக்கப்பட்டதில் சதி நடந்துள்ளது' என்று கூறிய வீரர் அபிசித்தர் பரிசை வாங்காமல் புறக்கணித்து சென்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அபிசித்தர், "கடந்த ஆண்டு 30 மாடு பிடித்து முதல் பரிசு பெற்றேன். அப்போதும் 26 மாடுகள்தான் பிடித்ததாக அரசியல் செய்தார்கள். தற்போது அமைச்சர் மூர்த்தியின் தலையீட்டால் எனக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை. நான்தான் அதிகமான காளைகளை பிடித்தேன். எனக்கு கார் பரிசு கூட தேவையில்லை, என்னை முதல் இடம் என்று அறிவித்தால் போதும்.

முதலிடம் அறிவிக்கப்பட்டுள்ள கார்த்திக் சிபாரிசில்தான் போட்டிக்கு வந்துள்ளார். ஜல்லிக்கட்டு வீடியோவை ஆய்வு செய்து யார் உண்மையில் முதலிடம் என்பதை அறிவிக்க வேண்டும். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வேன். முதல் பரிசுக்கு அறிவிக்கப்பட்ட கார்த்திக் அமைச்சர் மூர்த்தியின் தொகுதி என்பதால் போட்டி முழுவதும் அவரை முதல் பரிசு பெற வைப்பதற்காக சதி நடந்துள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல் நுழைவதால் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுகிறது. இறுதிச்சுற்றின் போது காளைகளை அடக்க முயன்ற எனக்கு பல்வேறு இடையூறுகளையும் செய்தார்கள்." என்று பரபரப்பாக பேசினார். மேலும் 6 மணிக்கு மேல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியதும் தவறு என பேசினார்.
அபி சித்தர்

அதே நேரம், "காலை முதல் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியை உன்னிப்பாக கண்கானித்து வரும் அதிகாரிகள், ஜல்லிக்கட்டு கமிட்டியினர் முடிவின்படிதான் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எந்த பாரபட்சமும் பார்க்கவில்லை" என்று அமைச்சர் பி.மூர்த்தி தரப்பில் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

அபி சித்தர் சொன்னது போல், நீதிமன்றம் செல்வாரா... வீடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்படுமா... என்பதெல்லால் போக போக தான் தெரியும். எனினும் இந்த குற்றச்சாட்டு ஜல்லிக்கட்டு களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக