புதன், 31 ஜனவரி, 2024

சசிகலாதான் தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார்?

 LR Jagadheesan :  சசிகலாதான் தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார்!
திகவினர் இது பெரியார் மண் என்கிறார்கள். திமுகவினரோ அண்ணா தான் இன்னும் தமிழ்நாட்டை ஆள்கிறார் என்கிறார்கள்.
ஆனால் எனக்கென்னவோ உண்மையில் சசிகலா தான் தமிழ்நாட்டை இன்னமும் ஆள்கிறார் என்றே தோன்றுகிறது.
இதை நகைச்சுவைக்காகவோ பரபரப்புக்காகவோ சொல்லவில்லை. உண்மையாகவே அப்படி தான் உணர்கிறேன்.
எதன் அடிப்படையில் இப்படி ஒரு ஒப்பீடு என்பவர்களுக்கு:
ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 22, 2016.
ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5, 2016.  
ஜெயலலிதா வெறும் தனிநபர் அல்ல. அதிமுக என்கிற தமிழ்நாட்டின் ஆளும்கட்சியின் பொதுச்செயலாளர். அதைவிட முக்கியமாக ஏழறைகோடி மக்கள் தொகைகொண்ட தமிழ்நாட்டின் முதல்வர்.
அவர் அப்பல்லோவில் இருந்த அந்த 74 நாட்களில் அவரை அப்பல்லோ மருத்துவர்கள்/செவிலியர்கள்/எய்ம்ஸ் மருத்துவர்கள்/சசிகலாவைத் தவிர அவரது சொந்த கட்சியின் அமைச்சர்களோ, மாநில அதிகாரிகளோ யாருமே அவரை நேரில் பார்க்கவில்லை.


சசிகலா யாரையும் பார்க்கவிடவில்லை.
தமிழ்நாட்டின் ஆளுநர் உட்பட யாரையும் ஜெயலலிதாவை பார்க்கவிடாமலே 74 நாட்கள் ஜெயலலிதாவின் பெயரால் தமிழ்நாட்டின் ஆட்சியையும் அதிமுக என்கிற நெல்லிக்காய் மூட்டையான கட்சியையும் தலைமைதாங்கி “நடத்தியவர்” சாட்சாத் சசிகலா என்கிற பெண்மணி.

அப்போது நடந்த இடைத்தேர்தலையும் அவரே “நடத்தினார்”. ஜெயலலிதாவின் கையெழுத்தோடும் கைநாட்டோடும்!!!
தமிழ்நாட்டு ஊடகங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களும் கூட அப்பல்லோவில் அந்த 74 நாட்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதைப்பற்றிய எந்த “புலனாய்விலும்” ஈடுபடவே முடியாதபடி இரும்புத்திரை கொண்டு மூடுமந்திரமாகவே 74 நாட்களை கடத்தினார்.

யோசித்துப்பார்த்தால் அந்த 74 நாட்களில் எத்தனைநாள் ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார்? ஒரு முதல்வராக ஒரு மாநில ஆட்சியை நடத்தும் அளவுக்கு அவர் உடல் நிலை இருந்ததா? அதற்கான சுயநினைவாற்றலோடு இருந்தாரா?
செயல்பட்டாரா?
முடுவெடுத்தாரா?
மருத்துவரீதியில் அது சாத்தியமா?
அந்த 74 நாட்கள் தமிழ்நாட்டை உண்மையில் ஆண்டது யார் என்கிற கேள்விக்கு இன்றுவரை நேர்மையான, ஆதாரப்பூர்வமான பதில் இல்லை என்பதைவிட அந்த பதிலை அறியக்கூட யாருமே முயலவில்லை. இன்றுவரை.

குறிப்பாக அதை செய்திருக்கவேண்டிய இன்றைய திமுக அரசு கூட அதை செய்யவில்லை.
மீண்டும் ஒருமுறை யோசித்துப்பாருங்கள்.
இருபத்திஓராம் நூற்றாண்டில் தமிழ்நாடு போன்ற கல்வி, செல்வம், தொழில்நுட்பம் என எல்லாவகையிலும் முன்னேறிய ஒரு இந்திய மாநிலத்தில் 74 நாட்கள் யார் ஆட்சி செய்தார்கள்? எப்படி செய்தார்கள்? என்கிற கேள்விக்கான பதிலை கேட்கவே விடாமல் செய்கிற சாதனையின் ஆழ அகலமும் அதன் விபரீதமும் புரியும்.

2016 ஆம் ஆண்டு சசிகலா 74-நாட்கள் வெற்றிகரமாக செய்துகாட்டிய அந்த social-political-administrative-template அதற்கு முன் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் கூட அத்தனைநாள் நடத்தப்படாத ஒன்று.

2016 ஆம் ஆண்டு சசிகலா வெற்றிகரமாக வகுத்துக்கொடுத்த அதே template தான் தமிழ்நாட்டில் இன்றும் நீடிக்கிறது. வெவ்வேறு வடிவங்களில்.
தமிழ்நாட்டின் அரசியலை மட்டுமல்ல ஒட்டுமொத்த மாநில அரச நிர்வாகத்தின் அடிப்படையையே சிதைத்த/மாற்றியமைத்த மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர் சசிகலா.

அதை அடுத்துவந்த திமுகவும் அட்சரம் பிசகாமல் அடியொற்றி நடத்திக்கொண்டிருக்கிறது என்பதே அவருக்கு கிடைத்திருக்கும் மாபெரும் அங்கீகாரம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக