புதன், 31 ஜனவரி, 2024

இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் ஆரவாரம்; காங்கிரசுக்கு 9 இடங்கள் அளிக்க தி.மு.க சம்மதம்

amil.indianexpress.com -  அருண் ஜனார்தனன் :  சென்னையில் உள்ள தி.மு.க தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ்-தி.மு.க தொகுதிப் பங்கீடு முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு), திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றுடன் ஏற்பட்ட பிரச்னைகளுக்குப் பிறகு இந்தியா கூட்டணிக்கு இந்த சாதகமான செய்தி வந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் தி.மு.க மூத்த தலைவர்கள் 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளான, 9 இடங்களுக்கு ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.கடந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது, தேனியில் மட்டும் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க தான் போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 12.6% வாக்குகளைப் பெற்றிருந்தது, தி.மு.க 33.5% வாக்குகளைப் பெற்றது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யு.எம்.எல்) மற்றும் பிற சிறிய கட்சிகளை உள்ளடக்கி, தி.மு.க தலைமையிலான கூட்டணி மாநிலத்தில் உள்ள மொத்தம் 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான தேசியக் கூட்டணிக் குழுவின் (என்.ஏ.சி), முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் தலைமையிலான குழு, தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான தி.மு.க தரப்புடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, “ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைந்து மீண்டும் தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெறும்” என்று முகுல் வாஸ்னிக் கூறினார்.

இந்த கூட்டணி,  “மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் முக்கியமானது” என்று முகுல் வாஸ்னிக் கூறினார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ஆரணி, திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள தொகுதிகளில் கவனம் செலுத்தும் அதன் முந்தைய தேர்தல் உத்தியை, 9 இடங்களுக்கான காங்கிரஸ் கோரிக்கை பிரதிபலிக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் உறுதி என்றாலும், தொகுதிகளை மாற்றுவது சாத்தியம் என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்தன. கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய மூன்று தொகுதிகளையாவது காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மாற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“அதற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூரோ அல்லது மயிலாடுதுறையோ அதன் வசதியைப் பொறுத்து வழங்கப்படலாம். இறுதி பட்டியலில் நாங்கள் மொத்தம் உள்ள 39 இடங்களில் 24 தொகுதிகளில் போட்டியிடுவோம்” என்று தி.மு.க தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

தி.மு.க தனது மற்ற கூட்டணி கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. தி.மு.க-வின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தேர்தல் அறிக்கைக் குழுக்கள், வரவிருக்கும் தேர்தலுக்கான தகவல்களை சேகரிப்பதற்காக மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க வரும் வாரங்களில் நடைபெறும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ (எம்) ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களை ஒதுக்கலாம். அதேபோல், வி.சி.க-வுக்கு அதே 2 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகியவை தலா ஒரு இடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சில இடங்களில் தி.மு.க சின்னத்தில் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக