வியாழன், 18 ஜனவரி, 2024

இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய திமுக எம்எல்ஏ கருணாநிதி குடும்பம்? : நடந்தது என்ன?


மின்னம்பலம் - christopher :  திமுக எம்.எல்.ஏ  மகன் வீட்டில் வேலை செய்துவந்த தனக்கு சம்பளம் கொடுக்காமல் கொடுமை செய்ததாக இளம்பெண் ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநரங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்ற இளம்பெண், கடந்த ஏழு மாதமாக திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மதிவாணன் வசிக்கும் திருவான்மியூர் வீட்டில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் எம்.எல்.ஏ ஆட்கள் ரேகாவை கடந்த 15 ஆம் தேதி இரவு, திருநரங்குன்றத்தில் உள்ள அவரது பெற்றோரிடம் விட்டு சென்றனர்.


அப்போது வீட்டுவேலை செய்ய சென்ற இடத்தில், எம்.எல்.ஏ மகன் வீட்டார் தன்னை சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாராம் ரேகா.

இதனையடுத்து மனித உரிமை செயற்பாட்டாளரான எவிடன்ஸ் கதிர் ஆலோசனையுடன் எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது புகார் கொடுக்க ரேகாவின் பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 16 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து ஏ ஆர் என்ட்ரி (மருத்துவரிடம் காயங்களை காட்டி அளிக்கும் வாக்குமூலம்) பதிவு செய்துள்ளனர்.

அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, “என் பெயர் ரேகா. வயது 18. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட திருநரங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகள்.

நான் கடந்த ஏழு மாதமாக பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கருணாநிதி மகன் ஆன்ட்ரோ மதிவாணன் வசிக்கும் திருவான்மியூர் வீட்டில் வேலை செய்து வந்தேன்.

என்னை எம்.எல்.ஏ மருமகள் மெர்லினா ஆன் தொடர்ந்து அடித்து சூடு வைத்து கொடுமை செய்தார். அதனை தாங்க முடியாமல் வேலையில் இருந்து விலக முடிவு செய்து எனது ஏழு மாதம் சம்பளத்தை கேட்டேன். ஆனால் சம்பளம் கொடுக்க எம்.எல்.ஏ மகன் வீட்டார் மறுத்துவிட்டனர்.

இதனால் மனமுடைந்து சோர்வாக காணப்பட்ட என்னை கடந்த ஜனவரி 15 ஆம் தேதி இரவு, எம்.எல்.ஏ மகன் வீட்டார் திருநரங்குன்றம் கிராமத்தில் உள்ள எனது வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ரேகா வாக்குமூலத்தில் கூறிய சம்பவம் சென்னையில் நடந்ததால் போலீஸார் அங்கு சென்று புகார் அளிக்கும்படி சொன்னதை அடுத்து சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் தற்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மின்னம்பலம் சார்பில் எம்.எல்.ஏ கருணாநிதியைத் தொடர்பு கொண்டுக் கேட்டோம்.
அவர், “அந்த பெண் வேலைக்கு வந்து ஏழு மாதம்தான் ஆகுது, படிக்க போறேன் என்று சொல்லிச்சு. அந்த படிப்பிற்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்தி வருகிறார் என் மகன், அந்த பெண்ணுக்கு வெளியில் ஏதோ தொடர்பு இருக்கும்போல, மேலும் வீட்டில் சின்ன சின்ன தவறுகள் செய்து வந்ததால் அதனை என் மகனும், மருமகளும் கேட்டிருக்காங்க. அதனால் அந்த பெண் இப்படி ஒரு பொய்யான புகார் கொடுத்துள்ளார். மனவேதனையாக உள்ளது.

அவருக்கு சேரவேண்டிய சம்பளத்தை நாங்கள் ஏமாற்றப்போவது இல்லை, அதை கொடுத்துவிடுவோம். அது ஒன்றும் பிரச்சினை இல்லை. தற்போது அவர்களிடம் பேசிட்டு இருக்காங்க சரியாகிவிடும்” என்று தனது குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக