புதன், 17 ஜனவரி, 2024

துக்ளக்’ ஆண்டு விழாவில் சசிதரூர் குற்றச்சாட்டு.. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அரசியல் பிரச்சாரம் ஆக்கும் பாஜக

hindutamil : சென்னை: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை, தேர்தல் ஆதாயங்களுக்கான அரசியல் பிரச்சாரமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார். ‘துக்ளக்’ இதழின் 54-வது ஆண்டு விழா, சென்னையில் கடந்த 14-ம் தேதி நடந்தது. அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வரவேற்றார். .. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சசிதரூர் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை குறிவைக்க அமலாக்கத் துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இது கூட்டாட்சியை சிதைக்கும் செயல். மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது. 16-வது நிதி ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தால், மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் இன்னும் மோசமான நிலை உருவாகும்.

மத்திய பாஜக அரசின் இந்தி, இந்து, இந்துஸ்தான் அரசியல் கவலை அளிக்கிறது. இந்த ஆதிக்க கலாச்சாரம் ஏற்கெனவே பல தென்னிந்திய அரசியல்வாதிகள் இடையே பிரச்சினையை எழுப்பியுள்ளது. இந்துத்வா என்ற பெயரில் பாஜக அரசு பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. இவற்றின் விளைவுகள் நாட்டின் ஒற்றுமையை அச்சுறுத்துவதால், இது மிகவும் தீவிரமான பிரச்சினை ஆகும்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை, தேர்தல் ஆதாயங்களுக்கான அரசியல் பிரச்சாரமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. ராமர் கோயில் 22-ம் தேதி திறப்பதற்கு ஒரே காரணம் அரசியல் மட்டுமே. நான் ராமர் கோயிலுக்கு செல்வேன். ஆனால், 22-ம் தேதி செல்ல மாட்டேன். இவ்வாறு சசிதரூர் கூறினார்.

விழாவில் பேசி முடித்து, அவர் புறப்பட்டு சென்ற பிறகு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார். அவர் பேசியதாவது: வரும் மக்களவை தேர்தலில் ராஜீவ் காந்தி மகன், லாலு பிரசாத் மகன், முலாயம் சிங் மகன், கருணாநிதி மகன் என வாரிசு அரசியல் கூட்டணியாக இண்டியா கூட்டணி உள்ளது. மற்றொரு புறம், நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நிமிடமும் உழைத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.

தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பெரும்பாலான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதேநேரம், கடந்த 2019 தேர்தலின்போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

சர்க்காரியா கமிஷன் வழக்குகள் பாய ஆரம்பித்தபோது, அதில் இருந்து தப்பிப்பதற்காக கருணாநிதி உடனே, இந்திரா காந்தியை வரவேற்று “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று 1980-ம் ஆண்டு அழைத்தார்.

பிறகு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான ஜெயின் கமிஷன் அறிக்கையில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, வி.பி.சிங் ஆட்சியை காங்கிரஸ் கவிழ்த்தது. இதனால், திமுக வெளியே சென்றது. பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆதரவு தேவைப்பட்டதால், 2004-ல்கருணாநிதி, “இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க” என மாற்றி கூறினார்.

இண்டியா கூட்டணி கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியில் பேசினார். முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தி தெரியாது என்பதால், அதை மொழிபெயர்க்குமாறு டி.ஆர்.பாலு கூற, நிதிஷ் குமாருக்கு கோபம் வந்துவிட்டது. “இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் இந்தி கற்காமல் இருக்கிறீர்கள். முறையாக இந்தி படித்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது” என்று கூறினார். இதனால், அவமானப்பட்டது அவர் மட்டுமல்ல, தமிழக மக்களும்தான்.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறுவது தவறு. இந்த நிதி பகிர்வு எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதைக்கூட முழுமையாக புரிந்துகொள்ளாமல் திமுக ஆட்சியாளர்கள் பேசுகின்றனர். நிதி கமிஷன் பரிந்துரைப்படியே மாநிலங்களுக்கான நிதி பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

சென்னையில் சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.6.64 லட்சம்கோடி தொழில் முதலீடாக ஈர்க்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால், குஜராத்தில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.26 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் தேசிய அளவிலான முதலீட்டாளர் மாநாடு நடத்தி, அதற்கு பிரதமர் மோடியை அழைத்திருந்தால், தமிழகத்திலும் இன்னும் அதிக முத லீடுகள் வந்திருக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து தமிழக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. சிபிஎஸ்இ-யில் இதுபற்றிய பாடத் திட்டத்தை மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்ததுகூட தெரியாமல் இங்கு ஆட்சி நடத்துகின்றனர். இங்கு நிர்வாக திறமை இல்லாத குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

‘திமுக ஃபைல்ஸ்’ 3-ம் பகுதியின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. முழுவதும் வெளியாகும்போது, தமிழக அரசியல் மட்டுமின்றி, தமிழக அரசே மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது.

நேர்மையான, நாணயமானஅரசியலை பாஜக முன்னெடுத்து செல்கிறது. தமிழகத் துக்கு விரைவில் பாஜகவால் நல்லதொரு சூழல் ஏற்படும். தமிழக அரசியலை சுத்தப் படுத்த திமுக எனும் தீய சக்தியை தேர்தலில் தோற்கடித்து, அப்புறப்படுத்த வேண்டும். அதுவரை தமிழக பாஜக ஓயாது பணியாற்றும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசினார். வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அவர் பேசும்போது, “வரும் மக்களவை தேர்தலில் திமுகவுக்கு எதிராக நல்ல கூட்டணி உருவாகாமல் இருப்பதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் காரணம்.திமுக அரசில் 12 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அவர்களிடம் இருந்து ரூ.82 கோடியை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது. கர்நாடகா தவிர வேறு எந்த மாநிலத்திலும் பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை.

ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சிகள் நடக்கிறது.ஆனால், அவரை ஏற்றுக்கொள்ள இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் தயாராகஇல்லை. நடிகர் ரஜினிகாந்த்அரசியலில் இறங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்த நேரத்தில், ‘நான் அரசியலுக்கு வந்தாலும்கூட முதல்வர் ஆக மாட்டேன்.

அண்ணாமலையைத்தான் முதல்வர் ஆக்குவேன்’ என்றுஎன்னிடம் கூறினார். 2026-ல் தமிழக முதல்வராக அண்ணாமலை பதவி ஏற்பது என்பது, வரும் மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளை பொறுத்தே அமையும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக