திங்கள், 22 ஜனவரி, 2024

மகாராஷ்டிரா: பெண்ணின் நாக்கை அறுத்துக் கொத்தடிமையாக பயன்படுத்திய கும்பல் - BBC News

BBC News தமிழ்  : இந்த முகங்களுக்கு பின்னால் ஒரு ஆழ்ந்த சோகம் மறைந்துள்ளது. அவர்களால் சரியாக பேச கூட முடியவில்லை. தங்களின் அடையாளத்தை அவர்கள் தொலைத்துவிட்டனர். காரணம் கொடூரமான, மனிதாபிமானமற்ற சித்ரவதைகளுக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர்.
மனித கடத்தலுக்கும், கட்டாய வேலைக்கும் உள்ளான இவர்கள் கடந்த 10, 15 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் அஹ்மத் நகருக்கு உட்பட்ட பேல்வண்டி பகுதியில் நடந்த இந்த உண்மை டிசம்பர் 18 அன்று காவல்துறை சோதனையின் போது வெளிச்சத்திற்கு வந்தது.
அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு விஷயங்கள் தெரியவந்துள்ளன.



பேல்வண்டி பகுதியில் கொத்தடிமைத்தனம் தொடர்பாக 21 வழக்குகள் உள்ளன. இவர்கள் அனைவரும் மாடு மேய்ப்பது, ஆடு மேய்ப்பது, விவசாயம் போன்ற பணிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதில் சிலர் இடையில் மாற்று திறனாளிகளாக ஆன பிறகும் கூட, கட்டாயப்படுத்தி அவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். போதை பொருட்களின் பிடியில் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கஞ்சா வழங்கப்பட்டுள்ளது.

சத்திஸ்கரை சேர்ந்த கரண் வீட்டிலிருந்து காணாமல் போனவர். சில வருடங்களுக்கு முன்னாள் காணாமல் போன அவர் , ஹைதராபாத் ரயில் நிலையத்தில் படுத்துக்கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார். அதற்கு பின் பிலாஜி போசலே என்பவரால் அவர் அடிமையாக சுரண்டப்பட்டு வந்துள்ளார்.

பீட்டை சேர்ந்த பவுசாஹேப் மோர் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வரப்பட்டு இங்கு அடிமையாக்கப்பட்டவர். அவரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் சமயத்தில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

கொடூரமான சித்ரவதையினால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகளை அவர்களின் உடல்களில் பார்க்க முடிகிறது. பிபிசி மராத்தி குழு பெல்வாண்டி பகுதிக்கு சென்று கொலேகான் மற்றும் கோட்டாவி கிராமங்களை பார்வையிட்டது.

நகரங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள இந்த தொலைதூர கிராமங்களில் கொத்தடிமை தொழிலாளர்களை வைத்திருப்பது எளிது என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிந்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் விலங்குகளுக்கான தொழுவத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும் சிலர் சோள வயல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அடைந்திருக்கும் மனஉளைச்சலின் காரணமாக, அவர்களால் தெளிவாக கூட பேசமுடியவில்லை. அதனால், தற்போது அவர்களை எப்படி அடையாளம் தெரிந்து கொள்வது மற்றும் எப்படி அவர்களின் குடும்பங்களை தொடர்பு கொள்வது என்பது காவல்துறைக்கு சவாலாக உள்ளது. இந்த 21 நபர்களும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தங்களது இரண்டு நாள் தேடுதலில் காவல்துறை ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்துள்ளனர். அதில் 11 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் தலைமறைவாக உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் மீது இதற்கு முன்னரே சில வழக்குகளும் பதிவாகியுள்ளன.
காவல்துறை தற்போது எவ்வளவு ஆழமாக இந்த மனித கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதை விசாரணை செய்து வருகின்றனர்.

தெற்கு ஆசிய நாடுகளில் மனித கடத்தல் வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும், இந்தியா இது போன்ற குற்றங்களுக்கு மையமாக இருந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக