வெள்ளி, 26 ஜனவரி, 2024

பிரிட்டன் தபாலக கணினி சாப்ட்வேர் கோளாறால் 4000 பேர் நடுவீதியில்

sam Jeyabalan : தமிழர்கள் உட்பட நிரபராதிகளை சிறைக்கு அனுப்பிய பிரித்தானிய தபாலகங்கள்!
20 ஆண்டுகளாக போராடும் நிரபராதிகள்!!
இன்றும் குற்றவாளிகளாகவே இறந்து போகும் தபாலக மேலாளர்கள்!!!
40க்கும் மேற்பட்ட நிரபராதிகள் குற்றவாளிகளாக மரணித்த நிலையில் 20 வருடங்களாக தொடரும் பிரச்சினையில் அப்பாவிகளுக்கு நீதி கிட்டவில்லை.
இன்னமும் பலர் சிறைத்தண்டனை அனுபவிக்கின்றனர்.
இவர்கள் செய்த குற்றம் பிரித்தானிய மக்களுக்கான அடிப்படைச் சேவைகளில் ஒன்றான தபாலகச் சேவையை வழங்கியது மட்டுமே.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம் என்றும் இழப்பீடு பெறுவதற்கு உரித்துடையவர்கள் மட்டும் 4,000 பேர் என்றும் தெரியவருகின்றது.
இவர்களில் ஆயிரம் பேர் வரை நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளாக்கப்பட்டு சிறைத் தண்டணையும் வழங்கப்பட்டது.
இவற்றையெல்லாம் தாங்க முடியாது என்று 15 ஆண்டுகள் போஸ்ற்ஒபிஸ் (Postoffice) நடத்திய சப் போஸ்ற் மாஸ்ரர் (Sub Post Master) அப்துல் அப்டீன் தற்போது 88 வயது தன்னுடைய மனைவி வனசாவுடன் 2005 இல் இலங்கைக்குச் சென்று வாழ்கின்றார். போஸ்ற்ஒபிஸ் அறிமுகப்படுத்திய ஹொரைசன் (Horizon) என்ற கணக்கியல் சொப்ற்வெயரின் (Software) தவறுகாரணமாக தன்னுடைய சொந்தப் பணம் £100,000 பவுண்களை அவர் போஸ்ற்ஒபிஸ்க்கு கட்டியுள்ளார். அவருடைய சொந்தப் பணத்தையும் இவ்வாறு பல நூறு பேரிடம் பகற்கொள்ளையடித்த பணத்தையும் போஸ்ற்ஒபிஸ் இயக்குநர்கள் தங்களுக்கு தாங்களே போனஸாக (bonus) பங்கு போட்டுள்ளனர். இவ்வாறு போஸ்ற்ஒபிலிஸில் கொளையடித்து அப்பாவி சப் போஸ்ற்மாஸ்ரேசை சிறையில் போட்டு ஏப்பம்விட்டது போஸ்ற் ஒபிஸ் போர்ட் ஒப் டிரெக்ரேர்ஸ் (Postoffice board of directors).

அமைதியும் சமாதானமும் நிலவிய பிரித்தானயாவில் ஆயிரம் பேர் வரையான அப்பாவி தபாலக பொறுப்பாளர்கள் (Post Masters) தபாலகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கணணி ஏற்படுத்திய தவறுகளுக்காக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் தங்களுடைய பக்கத்தில் தவறு உள்ளதா என்று ஆராயவே தயாரில்லாத தபாலகம், அப்பாவிகளான தபாலகப் பொறுப்பாளர்கள் மீது கள்ளப்பட்டம் கட்டி அவர்களை சிறையில் தள்ளினர். நானுறு ஆண்டுகள் பழமையான ‘போஸ்ற் ஒபிஸ்’ இன் பெயரைக் காப்பாற்ற அப்பாவிகளை சிறைக்கு அனுப்பித் தண்டித்துள்ளனர். இதிலுள்ள மிகக் கேவலமான விடயம் என்னவென்றால் தங்களுடைய ஹொரைசன் (Horizon) சொப்ற்வெயரின் (Software)  தவறு இருக்கின்றது என்று தெரிந்தும் அப்பாவிகளைச் சிறைக்குத் தள்ளி பல ஆண்டுகள் சிறையில் வைத்துள்ளனர்.

காலனித்துவ காலத்தில் இந்த காலனித்துவ ‘மாஸ்ரர்கள்’ எப்படி இந்திய, இலங்கை மக்களை தங்களுடைய நீதிக்கு ஆடிப்படைத்தார்களோ அதையே இந்த போஸ்ற்ஒபிஸ் தற்போது செய்துள்ளது. ஊருகெல்லாம் ஜனநாயகம், நிர்வாகம் பற்றி பாடமெடுக்கும் பிரித்தானியாவில் நீதி, நியாயம், மனிதாபிமானம் எல்லாம் இறாத்தலுக்கு இன்ன விலை என்று மெற்றிக் அளவு முறையில் விற்கப்படுகிறது. சமாதானம், யுத்த நிறுத்தம் என்பதெல்லாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தூசணம் என்று அறிவிக்கப்படுமளவுக்கு பிரித்தானியாவின் மனிதாபிமானம் குற்றுயிராகக் கிடக்கின்றது.

பிற்காலங்களில் தங்களுடைய கணணிப் பொறிமுறையில் தவறு இருப்பதை அறிந்த பின்பும் தாங்கள் இழைத்த அநீதிக்காக தபாலகங்கள் ஏதும் செய்யாதது மட்டுமல்ல தொடர்ந்தும் அப்பாவிகளைத் தண்டித்து வந்தனர்.

ஏன் இப்போது போஸ்ற்ஒபிஸ் மோசடி முக்கியமானது:
இந்த விடயங்கள் பற்றி தேசம்நெற் சில ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டு இருந்தது. இந்த விடயம் தற்போது முக்கிய விடயமாக மாறியதற்குக் காரணம் காஸாவில் பிரித்தானியாவின் சுயாதீன தொலைக்காட்சியான ஐரிவி மஸ்ரர் பேற்ஸ் வேசஸ் போஸ்ஒபிஸ் (Mr Bates vs Postoffice) என்ற உண்மைக் கதையை மையமாகக் கொண்ட சிறுதொடர்நாடகமொன்றை கிறிஸ்மஸ் காலத்தில் ஒளிபரப்பியது. இது பிரித்தானிய மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது. அத்துடன் அடுத்த ஆண்டு  பிரித்தானியாவும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் அது தேர்தல் விடயமாகவும் மாறியுள்ளது. அதனால் போஸ்ற்ஒபிஸ் சம்மந்தமான வழக்கில் சிறையில் இருப்பவர்களின் வழக்குகளை மொத்தமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தபாலகங்கள்:
பிரித்தானியாவில் 2022இல் 11,635 தபாலகங்கள் இருப்பதாக ஜயனவரி 2023இல் வெளியான ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த தபாலகங்களில் 99 வீதமான தபாலகங்கள் போஸ்ற் ஒபிஸ் லிமிற்றற்றின் விதிமுறைகளுக்கு அமைவாக தனியார் நிறுவனங்களினாலும் தனியார்களினாலும் நடாத்தப்படுகின்றது. மக்டோனால்ட், மற்றும் பூட் சிற்றி நிறுவனங்களை தனியார் ஒப்பந்தத்தின்படி நடத்துவது போன்ற கட்டமைப்பு (ப்ரென்சைஸ் - franchise). எஞ்சிய ஒரு வீதம் போஸ்ற் ஓபிஸ் லிமிற்றற்றினால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றது. தனியாரினால் நடத்தப்படுகின்ற தபாலகங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படுபவர் சப் போஸ்ற்மாஸ்ரர் - தபாலக மேலாளர் என்று அழைக்கப்படுகின்றார்.
பிரித்தானியாவில் தபாலக சேவை என்பது அடிப்படைச் சேவைகளில் ஒன்றாக உள்ளது. ஒரு மைல் முதல் மூன்று மைல் சுற்றாடலுக்கு ஒரு தபாலகம் இருக்க வேண்டும் என்பது பிரித்தானிய அரச விதிமுறை. அதற்கமைவாக தபாலகங்கள் நாடு முழவதும் பரந்துள்ளது. சமூக வலைத்தளங்களும் மின் அஞ்சலும் தொடர்பாடல் ஊடகங்களாக அமைந்த பின் தபாலகங்கள் வேறு தளங்களில் சேவைகளை குறிப்பாக வியாபார சேவைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனிலும் முக்கியமாக அரச கொடுப்பனவுகளை விநியோகிக்கும் மையங்களாக பிரித்தானிய தபாலகங்கள் செயற்படுகின்றன.

ஆனால் அண்மைய எதிர்காலத்தில் தபாலகங்களின் பாத்திரம் வெகுவாகக் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. 1982இல் பிரித்தானியாவில் 22,000 தபாலகங்கள் இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 12,000 குறைந்துள்ளது. ஆனால் வயோதிபர்கள் நிறைந்த கிராமப் புறங்களில் தபாலகங்களே சமூகத்தின் பொருளாதார உயிர்நாடியாக இன்னமும் இருக்கின்றது. மேலும் பிரித்தானிய தாபாலகங்களும் தபால் பெட்டிகளும் பிரித்தானியாவின் அடையாளமாக உள்ளது.

இதனை நிர்வகிப்பதில் ஆசியர்களின் பங்கு அவர்களின் மக்கள் தொகை விகிதாசாரத்தோடு ஒப்பிடுகையில் கணிசமானது. தற்போது தபாலகங்களை 24 மணிநேரமும் திறந்து சேவையை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடின உழைப்பாளிகளான ஆசியர்கள் குறிப்பாக தென் ஆசியர்கள் இந்த தபாலகங்களை குடும்பமாக நடத்தி வந்துள்ளனர். அண்மைய காலங்களில் கணிசமான தமிழர்களும் தபாலகங்களை நடத்தி வந்தனர். இந்தப் பின்னணியில் தான் இந்த ஹொறைசன் மோசடி இடம்பெற்று தபாலக மேலாளர்கள் வீண் பழி சுமத்தப்பட்டு குற்றவாளிகள் ஆக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
ஆரம்பம் முதலே ஹொரைசன் சொப்ற் வெயரில் பிழை இருப்பதை தாங்கள் போஸ்ற் ஒபிஸ் லிமிற்றற்றுக்கு தெரியப்படுத்தியதாக ஹொரைசன் நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவின் இயக்குநர் போல் பற்றசன் ஜனவரி 16 இல் இதுதொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், போஸ்ற் ஒபிஸ் லிமிடட் தபாலக மேலாளர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான தகவல்களையும் தாங்கள் வழங்கியதாக அங்கு ஒப்புக்கொண்டார். அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில் கணிசமானதை தாங்கள் செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் தவறான சொப்வெயர் இருப்பது தெரிந்தும் அப்பாவிகளை குற்றம் சுமத்தி சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க உதவியது ஏன் என்பதற்கு அவரிடம் பதில் இருக்கவில்லை. கொள்ளை இலாபமீட்டும் நோக்கத்தைத் தவிர வேறு காரணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவில்லை.

பல தபாலக மேலாளர்கள் மோசடியான சொப்ற்வெயர் பணக்கையிருப்பை குறைத்துக் காட்டிய போது தங்கள் சொந்தப் பணத்தை இட்டு நிரப்பினர். இலத்திரனியல் கணக்கு தவறாக இருந்தபோதும் உண்மையில் வங்கிக் கணக்கில் மேலதிக பணம் இருந்திருக்க வேண்டும். போஸ்ற் ஒபிஸ் லிமிடட் இயக்குநர்கள் அதனை தங்களது லாபமாக மாற்றி லாபத்தை பிரித்தெடுத்திருக்க வேண்டும் என்று போஸ்ற் ஒபிஸ் லிமிடட் இன் தலைமை பொறுப்பதிகாரி நிக் றீட் தெரிவித்தார். இவர்கள் மன்னிப்புக் கோரிய போதும் தொடர்ச்சியாக இன்னமும் நடந்த உண்மையை மறைக்க முயல்கின்றனர். தாங்கள் லாபமீட்டுவதற்காக அப்பாவிகளை சிறைக்கு அனுப்பிய விசாரணையாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையையும் வழங்கியுள்ளனர்.
முதலாளிகள் எப்படி செல்வந்தராகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணமாக உள்ளது. வியாபாரத்தில் தங்களை மில்லியனர் எனப் பீத்தும் பலர் கொள்ளையர்களாகவே இருந்துள்ளனர். பிரித்தானியாவில் தவறணையில் - பாரில் மதுவும் மாதுவும் மயக்கும் போதை மருந்தும் விற்பவர்கள் முதல் போஸ்ற்ஒபிஸ் வரை அவர்கள் பணம் உழைக்கும் திறமை இதுதான்.

பிரித்தானிய தபாலகங்களில் உண்மையில் நடந்தது என்ன:
1999இல் பிரித்தானிய தபாலகங்கள் கணக்கியல் மற்றும் இருப்பெடுப்பதற்கான சொப்ற்வெயரை அறிமுகப்படுத்தியது. ஹொரைசோன் என்ற இந்த சொப்ற்வெயர் ஜப்பானின் புஜிற்சு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இப்புதிய சொப்ற்வெயர் அறிமுகப்படுத்தியது முதல் சில தபாலகங்களின் கணக்கின் வரவு செலவுகள் சமப்படவில்லை. பணக்கையிருப்பு சில பல ஆயிரங்களால் குறைந்திருந்தது. இப்பிரச்சினை ஆரம்பம் முதல் தபாலகங்களினால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. சமப்படுத்தலில் குறைவு ஏற்பட்டால் அதனை தபாலகங்களின் பொறுப்பாளர்களே இட்டு நிரப்ப வேண்டும் என்பது தபாலகங்களின் பொறுப்பாளர்கள் செய்துகொண்ட உடன்படிக்கையில் உள்ளது. அதன் படி இவ்வாறான குறைவு ஏற்பட்ட சமயங்களில் அப்துல் அப்டீன் போன்ற தபாலகங்களின் பொறுப்பாளர்கள் தங்கள் சொந்தப் பணத்தை இட்டு அதனை நிரப்பி உள்ளனர். அப்துல் அப்டீன் தனது சொந்தப் பணம் 100,000 பவுண்களை போட்டு கணக்கை சமப்படுத்தியுள்ளார்.

பெரும் தொகைக் குறைவு ஏற்பட்ட போது தபாலகப் பொறுப்பாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறான விசாரணைகளின் போது பெரும்பாலும் ஆசியர்கள், தமிழர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் தபாலக அலுவலர்களால் நையப் புடைக்கப்பட்டுள்ளனர். இன ரீதியான துவசத்திற்கு உள்ளாகி உள்ளனர். “நீங்கள் வெளிநாட்வர்கள் களவாடி பணத்தை உங்கள் நாட்டுக்கு அனுப்பி உள்ளீர்கள்”, களவாடியவர்கள் எல்லாம் தமிழர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானிகள்” என்று குற்றம்சாட்டி உள்ளனர். சில தபாலகப் பொறுப்பாளர்கள் ஆங்கிலம் நன்றாகத் தெரியாதவர்களாக இருந்த பட்சத்தில் “முட்டாள்கள், அடிப்படை கணக்கியல் தெரியாதவர்கள்” என்று வசைபாடியுள்ளனர் தபாலக அலுவலர்கள். இந்த தரம்குறைந்த சொப்ற்வெயரினால் பாதிக்கப்பட்ட தபாலகப் பொறுப்பாளர்களில் 50 வீதமானவர்கள் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த பெரும்பாலும் ஆசியர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் மீது கள்ளப்பட்டம் கட்டி அவர்களை சிறையில் தள்ளியுள்ளனர். இன்றும் பலரை தபாலகங்களில் இருந்து கள்ளப்பட்டம் கட்டி கலைத்துவிட்டனர். இன்னும் பலர் இந்த அவமானங்களில் இருந்து தங்களைக் காப்பாற்ற தங்கள் சொத்துக்கள் நகைகளை விற்று சொப்ற்வெயர்  குறைத்துக் காட்டிய பணத்தை இட்டு நிரப்பியுள்ளனர். பல ஆண்டுகளாக தபாலகங்களே தங்கள் உலகம் என்று வாழ்ந்த இந்தக் கடின உழைப்பாளிகள் ஒரு சிலரின் லாபமீட்டும் பேராசைக்காக அவர்கள் ஜக்குவார் ஓடுவதற்காக பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட அப்பாவிகள் சொத்துக்களை இழந்தனர், உறவுகளை இழந்தனர், நன்மதிப்பை இழந்தனர், இன்னும் சிலர் தங்களின் உயிரையும் இழந்தனர். பிரித்தானியாவிலும் மக்கள் நீதிகிடைக்காமல் இருபது ஆண்டுகளாக இன்னும் அலைகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக