திங்கள், 4 டிசம்பர், 2023

திண்டுக்கல் கைது... திக் திக் CBI க்கு மாறுகிறதா ED அதிகாரி கைது வழக்கு?

Minnambalam - Selvam  :  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை அவரது கோட்டூர்புரத்தில் உல்ள இல்லத்துக்கே சென்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டிசம்பர் 2-ஆம் தேதி காலை நேரில் சந்தித்தார்.
சமீப நாட்களாக துரைமுருகன் அமைச்சராக இருக்கும் நீர்வளத்துறையில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகள் வேட்டை தீவிரமாக இருக்கிறது. நீர் வளத் துறை முதன்மைப் பொறியாளர் முத்தையாவை கடந்த நவம்பர் 20, 21 தேதிகளில் அழைத்து விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
மேலும் இது தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் கொடுக்க, அதற்கு நீதிமன்றம் சென்று இடைக் காலத் தடை வாங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே அவ்வப்போது சில மன வருத்தங்கள் வருவதும் மறைவதும் தொடர்ந்து நடக்கும் சங்கதி தான். ஏற்கனவே இ.டி. ரெய்டு குறித்து முதல்வரே அமைச்சர் துரைமுருகனுக்கு போன் செய்து எச்சரித்திருந்தார். இதற்கிடையே திண்டுக்கல்லில் இ.டி. அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த பின்னணியில் துரைமுகன் இ.டி. நடவடிக்கைகள் தொடர்பாக வருத்தத்தில் இருப்பதாகவும், உடல் நலம் சற்று தளர்வாக இருப்பதாகவும் அறிந்து… டிசம்பர் 2 ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் கோட்டூர்புரத்திலுள்ள துரைமுருகன் வீட்டுக்குச் சென்றார் ஸ்டாலின்.

முதலமைச்சரை வரவேற்ற அமைச்சர் துரைமுருகன் அவரிடம், ‘நேத்து இ.டி. ஆபீசரை கைது செஞ்சதை நாம தவிர்த்திருக்கலாம்னு நினைக்கிறேன். ஏற்கனவே நம்ம கவர்ன்மென்ட் மேல ரொம்ப மூர்க்கத்தனமா இருக்காங்க. இப்ப இன்னும் அதிகமாகுறதுக்கு சான்ஸ் இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்ட ஸ்டாலின் உடனடியாக, ‘அண்ணே…என்ன இப்படி சொல்றீங்க? இ.டி. ஆபீசர் கைது செஞ்சதை பத்தி நியூஸ் வந்தவுடனே இந்தியாவுல பல மாநிலங்களேர்ந்து எனக்கே போன் போட்டு பலர் வாழ்த்து சொன்னாங்க. பூனைக்கு மணி கட்டிட்டீங்கனு சொன்னாங்க. நீங்க இப்படி சொல்றீங்களே?’ என்று பதிலளித்தவர் சுமார் பத்து நிமிடங்கள் துரைமுருகன் வீட்டில் இருந்துவிட்டு புறப்பட்டார்.

அமலாக்கத் துறை கைது சம்பவத்தை பலரும் பாராட்டிக் கொண்டிருக்க மூத்த அமைச்சரான துரைமுருகன் இப்படி வேறுபட்ட கருத்து சொன்னதில் ஸ்டாலினுக்கே வருத்தம் தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையே அமைச்சர் துரைமுருகன் மட்டுமல்ல… மற்றும் சில சீனியர் அமைச்சர்களும் கூட, ‘அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை நாம் தவிர்த்திருக்கலாமே’ என்ற ரீதியில் தங்களுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியிருக்கிறார்கள். இப்படி கருதுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறையால் அழைக்கப்படலாம் என்ற நிலையில் இருப்பவர்கள்தான்.

ஏற்கனவே கரூரில் ஐ.டி. சோதனையின் போது ஐ.டி. அதிகாரிகள் தாக்கப்பட்டதாக திமுகவினர் மீது புகார் கொடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இப்போது மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி டிஜிபிக்கு புகார் அனுப்பியிருக்கிறார்.

அதில், ‘தமிழக விஜிலென்ஸ் போலீசார் என்ற போர்வையில் சுமார் 35 பேர் டிசம்பர் 1 மதியம் 1.15 மணியில் இருந்து டிசம்பர் 2 காலை 7.15 மணி வரை மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நடந்துகொண்டனர். அவர்கள் அங்கித் திவாரி அறைக்குள் புகுந்து சோதனை நடத்துவதாக சொல்லி, இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத ஆவணங்களை எல்லாம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், அடுத்த பாய்ச்சலாக அந்த டாக்டர் சுரேஷ்பாபுவுக்கும், அதிகாரி திவாரிக்கும் இடைத்தரகராக செயல்பட்ட சிவக்குமார் என்பவரையும் கைது செய்திருக்கிது விஜிலென்ஸ்.

மேலும், இந்த விவகாரத்தின் விளைவாக தமிழ்நாட்டில் அமலாக்கத் துறை திமுக அமைச்சசர்கள், பிரமுகர்கள் மீது இன்னும் தீவிரமாகும் என்று அமலாக்கத்துறை வட்டாரத்திலேயே கூறுகிறார்கள்.
இதற்கிடையே திண்டுக்கல் அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரத்தின் அடுத்த கட்டம் பற்றி அரசு மேலிடத்தில் தீவிர ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது.

இந்த ஆலோசனையின் போது, ‘கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி திவாரி, வெளி மாநிலத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் கொடுக்க வேண்டும் என்றும், பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புபடுத்தியும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் மிரட்டியிருக்கிறார்.

இந்த காரணங்களை குறிப்பிட்டு… இதற்கு மேலும் மத்திய அரசின் கோபத்துக்கு உள்ளாகி., தேர்தல் நெருங்கும் நிலையில் தீவிர நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காகவும் திண்டுக்கல் இ.டி. அதிகாரி கைது விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைக்கலாமா?’ என்ற ஆலோசனையும் நடந்து வருவதாக சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக