ஞாயிறு, 3 டிசம்பர், 2023

வியூகம் வகுத்த விஜிலென்ஸ் இயக்குனர் அபய்குமார்... அமலாக்கத் துறைக்கு ’அபாய’ குமார்

minnambalam.com - Aara :  மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் (விஜிலென்ஸ்) கையும் களவுமாக பிடித்து கைது செய்தது பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகாலமாக அமலாக்கத் துறையினருக்கும் வருமான வரித்துறையினருக்கும் மாநில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடுநடுங்கிபோய் இருந்தனர்,  ஆனால் இப்போது திண்டுக்கல் விஜிலென்ஸ் போலீஸார் அமலாக்கத்துறையை அலறவிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பாளராக இருந்துவரும் டாக்டர் சுரேஷ்பாபு மீது 2018 இல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ரெய்டு செய்து வழக்கு பதிவு செய்தனர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்,பொதுவாக மாநில அரசின் கீழ் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்தால், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித் துறைக்கும், அமலாகத்துறைக்கும் இன்டிமேஷன் கொடுப்பது வழக்கம். அப்படிதான் திண்டுக்கல் டாக்டர் சுரேஷ்பாபு வழக்கு தொடர்பாகவும் அமலாக்கத் துறையினருக்கு இன்டிமேஷன் கொடுக்கப்பட்டது. அந்த விவரங்களை வைத்துக் கொண்டுதான் சில அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி உருட்டி பணம் பிடுங்கி வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

அப்படித்தான் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் அக்டோபர் மாதம் கடைசியிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பேரம் பேசி வந்திருக்கிறார் . இப்படி பேரம் பேசியதையும் அந்த டாக்டர் முதல் தவணை கொடுத்ததையும், தமிழக காவல்துறை உளவுபார்த்து கண்டுபிடித்துள்ளது.

இந்தத் தகவல் விஜிலென்ஸ் இயக்குனரான அபய்குமார் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுகுறித்து கடந்த மாதமே உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடம் டிஸ்கஷன் செய்து அமலாக்கத் துறை அதிகாரிக்கு பொறிவைத்திருக்கிறார்.  டாக்டர் சுரேஷ்பாபுவை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு முன்பே தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டனர்.

police fir ed ankit tiwari
அதற்காக அபய் குமார் சிங் சென்னையில் இருந்து ஆப்ரேட் செய்தார். சென்னை விஜிலென்ஸ் அலுவலகத்திலும் தொலைபேசி, கைப்பேசி ஒட்டுக் கேட்கும் கருவிகள் உள்ளன. அவற்றின் மூலமாக அந்த டாக்டர், அந்த இ.டி. அதிகாரி திவாரி ஆகியோரின் செல்போன் உரையாடல்கள், மெசேஜ்கள் என எல்லாவற்றையும் துல்லியமாக சேகரித்தது விஜிலென்ஸ். சென்னையில் இருந்து அபய்குமார் போடும் ஆர்டர்களை கச்சிதமாக கிரவுண்டில் செயல்படுத்தி வந்தனர் திண்டுக்கல் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. நாகராஜ் டீம்.

அனைத்து ஆதாரங்களையும் உறுதிப்படுத்திக்கொண்டு டாக்டர் சுரேஷ்பாபு மூலமாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கேட்டிருந்த இரண்டாவது தவணை பணம் கொடுக்க முடிவு செய்தனர்.  கரெக்டாக அந்த லொக்கேஷனில் வாடகை கார்களில் விஜிலென்ஸ் டீம் கண்காணித்து வந்தார்கள்.

சரியாக நேற்று டிசம்பர் 1 ஆம் தேதி காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரியிடம் டாக்டர் சுரேஷ்பாபு, அந்த ரசாயனம் தடவப்பட்ட பணத்தைக் கொடுக்க, அதை டிக்கியில் வைக்கச் சொன்ன திவாரி காரை வேகமாக ஓட்டியிருக்கிறார். அவர் காருக்குள் இருக்கும்போதே பிடித்தால்தான் லஞ்சம் பெற்றதை நிரூபிக்க முடியும் என்பதால் விரட்டிச் சென்று அந்த காருக்குள் அமலாக்கத்துறை அதிகாரி இருக்கும்போதே சுற்றி வளைத்துக் கைது செய்தது விஜிலென்ஸ்.

யார் இந்த அபய் குமார் சிங் ஐபிஎஸ்?

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபய்குமார் சிங். பி. டெக் மெக்கானிக்கல் படித்தவர் 1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியானர். சட்டம் ஒழுங்கு, சிபிசிஐடி, கரூர் பேப்பர் மில் விஜிலென்ஸ் என தமிழகம் முழுவதும் பரந்த அளவில் பணி செய்தவர்.

தமிழ்நாடு விஜிலென்ஸ் நடத்திய இந்த வேட்டை தேசிய அளவில் பெரிதும் பேசப்படுகிறது. அபய்குமார் சிங் ஐபிஎஸ் சின் நண்பர்களான ஐ.ஏ.எஸ்., ஐ,பி.எஸ், ஐ. ஆர். எஸ், மற்றும் ஐ. எஃப். எஸ் அதிகாரிகள் பலர் பாராட்டி வாழ்த்துக்கள் சொல்லியதோடு, இந்த ஆபரேஷன் பற்றி ஆர்வமாக கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.
–வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக