ஞாயிறு, 3 டிசம்பர், 2023

மிக்ஜம் புயல்: தமிழ்நாட்டில் எப்போது, எங்கு கரையைக் கடக்கும்? எச்சரிக்கை?

 BBC News தமிழ்  : வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல பகுதிகளில் அதி தீவிர கன மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கப் போகிறது?
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் புகுதியால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
அடுத்துவரும் நாட்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நவம்பர் 30-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் ஒன்றாம் தேதி காலை ஐந்தரை மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தமிழ்நாடு புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை தற்போது இந்தத் தாழ்வுநிலை சென்னையிலிருந்து தென்கிழக்கே 390கி.மீ தொலைவில் இருக்கிறது.

அடுத்த 12 மணிநேரங்களில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்பின் அது வடமேற்கே நகர்ந்து, டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திரா அருகில் வங்கக் கடலை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு இந்தப் புயல், டிசம்பர் 4-ஆம் தேதியன்று மதியம் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளை வந்தடையும். பிறகு இந்தப் புயல் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டியே நகரும்.

அதையடுத்து டிசம்பர் 5-ஆம் தேதி ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்ணத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வேகம் 80-90கி.மீ அளவுக்கு இருக்கும்.

இந்த புயல் சின்னத்தின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டிசம்பர் 3, 4 தேதிகளில் தீவிர கன மழை எச்சரிக்கை

இந்தப் புயலின் காரணமாக, டிசம்பர் 3-ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் டிசம்பர் 4-ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டிசம்பர் 4-ஆம் தேதியன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60கி.மீ முதல் 70கி.மீ வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் வீசும் எனக் கூறப்பட்டுள்ளது.

புயலாக மாறியபின் என்ன பெயர் வைக்கப்படும்?

இது புயலாக உருமாறிய பிறகு இதற்கு, 'மிக்ஜம்' எனப் பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயர் மியான்மரால் வழங்கப்பட்டது.

இந்தப் புயலின் காரணமாக, வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மூன்றாம் தேதி காலை வரை 80கி.மீ. வேகத்திலும் அன்று மாலை வரை மணிக்கு 70 முதல் 80கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மூன்றாம் தேதி மாலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 80 முதல் 90கி.மீ வேகத்திலும் இடையிடையே 100 கி.மீ வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும்.

இதன் காரணமாக மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
சென்னையில் மழை

புயல் கரையைக் கடக்கும்போது என்ன செய்யக்கூடாது?

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று 10 முக்கிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. புயல் வரும் சமயத்தில் வெளியே, குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்

2. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, சன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது.

3. காற்றின் அழுத்தத்தால் சன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், சன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.

4. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு உள்ளேயோ அருகிலோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

5. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

6. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

7. உங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி எண்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

8. மின்சாரம் இல்லாமல் போனால், தொலைக்காட்சி செய்திகளை எல்லோரும் பார்க்க முடியாது. செல்பேசியே தகவல்களை பெற வழியாக இருக்கும். பேட்டரியில் இயங்கும் பழைய டிரான்சிஸ்டர் இருந்தாலும் அது உதவியாக இருக்கும். அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பி விடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருங்கள்.

9. புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை.

10. கனமழையும் புயலுடன் சேர்ந்து வரும். தாழ்வான பகுதிகளில் உங்கள் வீடு இருந்தால், விலைமதிப்புள்ள பொருட்களையும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரப்படுத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது.
சென்னையில் மழை

1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

வங்கக் கடலில் புயல் உருவாகும் சாதகமான சூழல் உள்ளதை குறிக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் நேற்று இருவர் உயிரிழப்பு

சென்னையில் தி.நகர் சுற்றியுள்ள பகுதியில் நேற்று மழை காரணமாக இருவர் உயிரிழந்தனர். தி.நகர் வாணி மகால் அருகே மழைநீரில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும் மேற்கு மாம்பலம் பகுதியில் செல்போனில் பேசிக் கொண்டே சென்ற நபர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது செல்போன் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரும் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே அதிக மழை சென்னையில்

தெற்கு அந்தமான கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 29ம் தேதி கன மழை கொட்டி தீர்த்தது.

இதில் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் அதிக மழை பெய்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 96.7 மில்லி மீட்டர் மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. இரண்டாவதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 81 மில்லி மீட்டர் மழையும் அடுத்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 76 மில்லி மீட்டரும் மழையும் பதிவாகியிருந்தது.

இதன் காரணமாக சென்னை நகரில் தி.நகர், கோடம்பாக்கம், வடபழநி, கொளத்தூர், பட்டாளம் என பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. பிரதான சாலைகளிலேயே மழை நீர் தேங்கியிருந்ததால் நேற்று மாலை பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் 145 இடங்களில் நேற்று தேங்கியிருந்ததாகவும் அதில் 70 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சென்னைமாநகராட்சி தெரிவித்துள்ளது.

படகுகள், தண்ணீரில் இருக்கும் போது பயன்படுத்தப்படும் டியூப்கள், என மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் கமாண்டோ குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் வெள்ள நீர் சூழந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களை மீட்புப் பணிகளை தொடங்குவார்கள்.

தி.நகர் ,மேற்கு மாம்பலம் உள்ளிட்ட எந்தெந்த தண்ணீர் தேங்கியிருக்கிறதோ, அங்கு மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் முன்கூட்டியே சென்று தயாராக இருக்க, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தி.நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லக் கூடிய ரங்கராஜன் சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றப்படுவது சவாலாக இருப்பதால், அங்கு கூடுதல் மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக