ஞாயிறு, 24 டிசம்பர், 2023

கண்ணப்பனை கரையேற்றிய உதயநிதி. சின்னவரை நம்பினார் கைவிடப்படார்-

 மின்னம்பலம் -]Aara : “சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று வருடம் சிறை தண்டனை 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பொன்முடி அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த நிலையில் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு அளிக்குமாறு முதலமைச்சர் பரிந்துரை செய்ய அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
பொன்முடி குற்றவாளி என்று டிசம்பர் 19ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்த போது அவரது துறையை நிர்வகிக்க போகும் அடுத்த அமைச்சர் யார் என்ற கேள்வி திமுகவுக்குள் எழுந்து விட்டது.
உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த பொன்முடிக்கு பதிலாக அதே உடையார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை அமைச்சராக ஆக்குவாரா முதலமைச்சர் ஸ்டாலின் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்தது.

மேலும் பொன்முடியின் உடையார் சமுதாயத்தை சேந்த லால்குடி சௌந்தர பாண்டியன், பல்லாவரம் இ. கருணாநிதி, ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் ஆகிய மூவர்தான் இருக்கிறார்கள். இந்த மூவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஒரு விவாதமும் நடந்து கொண்டிருந்தது.

ஆனால் அமைச்சரவை மாற்றம் செய்ய இது சரியான நேரம் இல்லை என்ற நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின்… செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது பின்பற்றிய அணுகுமுறையையே இப்போதும் பின்பற்றினார். பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறையை கூடுதல் பொறுப்பாக ராஜ கண்ணப்பனுக்கு அளித்தார்.

இந்த செய்தியை மற்றவர்கள் அறிந்தது போலத்தான் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனும் அறிந்து கொண்டார் என்று அவரது வட்டாரத்தினர் சற்று வருத்தமாக கிசுகிசுகிறார்கள். அதே நேரம் உயர் கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்று இருக்கிற ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். ’சின்னவரை நம்பினார் கைவிடப்படார்’ என்று கோஷம் போடாத குறையாக அவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் திமுக ஆட்சி அமைத்த போது ராஜகண்ணப்பனுக்கு வளம் வாய்ந்த போக்குவரத்து துறை அளிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அப்போதே கண்ணப்பன் மீது முதலமைச்சரின் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அரசு அதிகாரி ஒருவரை சாதிப்பெயர் சொல்லித் திட்டியதாக வெடித்த சர்ச்சையை அடுத்து ராஜ கண்ணப்பனின் போக்குவரத்து துறை மாற்றப்பட்டு அவருக்கு சிவசங்கர் வகித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அளிக்கப்பட்டது.

கண்ணப்பனின் போக்குவரத்து துறை ஜாக்பாட் ஆக அரியலூர் சிவசங்கருக்கு அளிக்கப்பட்டது. தன் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு கொண்டிருந்தார் ராஜ கண்ணப்பன். ஆனாலும் அந்த வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நெருங்க ஆரம்பித்தார்.

அமைச்சர் கண்ணப்பனை அடிக்கடி கடந்த சில மாதங்களாக குறிஞ்சி இல்லத்தில் காணமுடிகிறது என்று அம்மாவட்ட திமுகவினரே பேசிக்கொண்டனர்.

இந்த நிலையில் தான் திடீரென பொன்முடி அமைச்சர் பதவியை இழக்க வேண்டிய சட்ட ரீதியான நிலை ஏற்பட்டதும் அந்த பொறுப்பை கூடுதலாக யாரிடம் கொடுக்கலாம் என்று ஆலோசனை மேலிடத்தில் நடந்தது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் உட்பட சிலர் இந்த கூடுதல் பொறுப்பை அடைவதற்கு முயற்சித்ததாகவும் திமுக வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஆனால் பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித் துறை உதயநிதியின் குட் புக்கில் சமீபத்தில் இடம் பிடித்த ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பின்னணியில்தான் சின்னவரை நம்பினார் கைவிடப்படார் என்று கண்ணப்பன் ஆதரவாளர்கள் கோஷம் போடாத குறையாக கொண்டாட்டம் நடத்தி வருகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக