BBC News தமிழ் : ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 303 இந்தியர்களுடன் சென்ற விமானம் வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த விமானம் மனித கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அது தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஏர்பஸ் ஏ340 விமானம் துபாயில் இருந்து நிகரகுவாவின் தலைநகரான மனகுவாவுக்குச் சென்று கொண்டிருந்ததாக பிரான்சில் உள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஆனால், புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலுக்குப் பிறகு, அது பிரான்சில் உள்ள வெட்ரி விமான நிலையத்தில் (பாரிஸிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்) நிறுத்தப்பட்டது.
விமானத்தில் இருந்த சிலரை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். இதையடுத்து விமான நிலையம் சீல் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு, விமானம் நிகரகுவாவுக்கு எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பதை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் இதனை உறுதி செய்துள்ளதோடு, இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் தங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானம் ரோமானிய சார்ட்டர் நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. விசாரணையில் பிரெஞ்சு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க நிறுவனம் தயாராக இருப்பதாக பிரான்ஸ் செய்தி சேனலான பிஎஃப்எம்டிவியிடம் நிறுவனத்தின் வழக்கறிஞர் லிலியானா பகாயோகோ கூறியுள்ளார்.
இன்னும் சில நாட்களில் மீண்டும் அங்கிருந்து விமானம் புறப்பட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சேர்ந்தவர்கள் விமானத்தில் இருந்த அனைவரையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், விசாரணை இன்னும் முடியவில்லை.
விமானம் பிரான்சில் தரையிறங்கிய பின்னர், பயணிகள் விமானத்திலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், சிறிது நேரம் கழித்து, பயணிகள் வெற்றி விமான நிலையத்தின் பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் தங்குவதற்கு படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. விமான நிலையம் முழுவதும் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
பிரான்ஸில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம், விமானம் குறித்த உளவுத் துறை தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதில் பயணம் செய்தவர்கள் மனித கடத்தலுக்கு இலக்காகி இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மனித கடத்தலா?
சமீப காலமாக, ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்கள் குடியேற்ற விதிகளை கடுமையாக்கியுள்ளன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல், ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுப் போர் போன்ற காரணங்களால் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மனித கடத்தல்காரர்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்து இந்த மோசடிகளை நடத்தும் நபர்கள் சட்டவிரோதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மக்களை அழைத்துச் செல்கின்றனர்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் சிலர், இந்த மோசடி நபர்களின் உதவியுடன் விமானத்தில் நிகரகுவா போன்ற மத்திய அமெரிக்க நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து தரை வழியே அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர். இதில் பலர் பிடிபட்டுள்ளனர். சிலர் இந்த முயற்சியில் உயிரையே பறி கொடுத்துள்ளனர்.
இருப்பினும், வெளியில் இருந்து வருபவர்களுக்கு இந்த நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு குடும்பங்களை அழைத்து வருபவர்கள் ஆண்டு 38,700 பவுண்டுகள் சம்பாதிக்க வேண்டும் என்று பிரிட்டன் கூறியுள்ளது. இந்தச் சட்டம் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
தற்போது, பிரிட்டனில் ஆண்டுதோறும் 18,600 பவுண்டுகள் சம்பாதிக்கும் நபர் ஒரு குடும்பத்தை அழைத்து வர முடியும்.
சில நாட்களுக்கு முன், பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி, குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க ஐந்து அம்ச திட்டத்தை அறிவித்தார்.
கடந்த வருடம் மூன்று லட்சம் பேர் பிரிட்டனுக்கு வரத் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பிரிட்டனுக்கு வர முடியாது. 2022 இல் 7,45,0000 புலம்பெயர்ந்தோர் பிரிட்டனுக்கு சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக