வியாழன், 16 நவம்பர், 2023

விவசாயிகள் மீது குண்டாஸ்: தலைவர்கள் கண்டனம்

மின்னம்பலம் - Selvam : திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இன்று (நவம்பர் 16) கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3-வது அலகை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
தமிழக அரசு மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் 125 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 விவசாயிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

விவசாயிகளை சமூகவிரோதிகள் போல சித்தரித்து அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது.
எனவே, நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

அண்ணாமலை
தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்.

திமுக அரசின் இந்த செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். திமுக அரசிடம் இருந்து, போராடும் விவசாயிகளை பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் தமிழக பாஜக வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறோம்.

சீமான்
அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதனை விட்டுவிட்டு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இல்லையேல், நாம் தமிழர் கட்சி மீண்டும் களமிறங்கி மக்களை இணைத்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். tiruvannamalai farmers protest goondas arrest
செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக