வியாழன், 16 நவம்பர், 2023

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டு வரப்பட்டால் கிழக்கில் வஹாபி , வடக்கில் தீவிரவாதி பாடத்திட்டங்களும் ஆரம்பமாகும்.! வீரசேகர எச்சரிக்கை!

 தேசம் நெட் - அருண்மொழி : மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் என வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் அன்றி, மாகாணசபைகளினால் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். 13 ஆவது திருத்தச்சட்டத்தில் கல்விக்கான அதிகாரம் கூறப்பட்டுள்ளதே ஒழிய, பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.


அப்படி நேர்ந்தால், கிழக்கு மாகாணத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் அனுசரனையுடன் வஹாபி பல்கலைக்கழகங்கள் அல்லது ஷரீஆ சட்டத்தை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியுமாக இருக்கும்.

அதேபோல், கனடாவின் ஒன்டேரியோ பிராந்திய பாடசாலைகளில், இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாக கற்பிக்கப்படுவது போன்று, வடக்கில் ஆரம்பிக்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் மனங்களை மாற்றும் இவ்வாறான பாடத்திட்டங்கள் உள்வாங்கப்பட்டுவிடும்.

பல்கலைக்கழகங்கள் நாட்டை முன்னேற்றும் வகையிலும், நாட்டுக்கான புத்திஜீவி சமூகத்தை உருவாக்கும் வகையிலேயே இருக்க வேண்டுமே ஒழிய, அரசியல் நோக்கத்திற்காகவோ ஆளுநர் அல்லது முதல்வர்களின் தேவைக்காகவோ ஸ்தாபிக்கப்படக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக