ஞாயிறு, 5 நவம்பர், 2023

தமிழக மருத்துவ மாணவர் ஜார்கண்ட்: மாநிலத்தில் பாதி எரிந்த சடலமாக அடையாளம் காணப்பட்டது

ஜார்கண்ட் மருத்துவ மாணவர்
ஜார்கண்ட் மருத்துவ மாணவர் மதன்குமார்

பி பி சி - நந்தினி வெள்ளைச்சாமி :  ஜார்கண்ட் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம், வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மேலகவுண்டன்பட்டியைச் சேர்ந்த 28 வயதான மதன்குமார் என்பவர், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸில் (RIMS) தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை (நவ. 2) அன்று மருத்துவமனையின் விடுதி எண் 5இன் பின்புறத்தில் பாதி எரிந்த நிலையில் மதன்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இறப்பதற்கு முன் கடைசியாக புதன்கிழமை இரவு 10 மணியளவில் விடுதியில் இருந்துள்ளார் மதன்குமார்.


ஜார்கண்ட்: பாதி எரிந்த சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழக மருத்துவ மாணவர் - முழு பின்னணி

சனிக்கிழமை அன்று மதன்குமாரின் சடலம் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவருடைய சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மதன்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மதன்குமாரின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் முதல்கட்ட விசாரணையை ராஞ்சி போலீசார் தொடங்கினர். இந்நிலையில் மதன்குமாரின் தந்தை எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையில், ஐபிசி பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காக ராஞ்சி போலீசார் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருவதாக, பிபிசி இந்தி சேவையின் செய்தியாளர் ரவி பிரகாஷ் தெரிவித்தார்.

மதன்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதா?

“மதன்குமாரின் மரணம் மீது அவருடைய தந்தை சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதன் அடிப்படையில், இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்துள்ளோம்," என, பரியாட்டு (bariatu) காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் தெரிவித்தார்.

முதல்கட்ட விசாரணையின்படி விடுதியின் மாடியில் தீப்பற்றிய நிலையில் மதன்குமார் கீழே விழுந்து இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விடுதியின் மாடியிலிருந்து அதிகளவில் எரியூட்டக்கூடிய திரவமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதன்குமார் அதிகமாக யாருடனும் பேசாதவர் எனவும் மற்றவர்களுடன் எவ்வித பிரச்னையிலும் ஈடுபடவில்லை எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மதன்குமார் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும் அவருடைய தாயாரும் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் ரிம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவரும் இந்திய மருத்துவ சங்கத்தின் இணைச் செயலாளருமான விகாஸ் குமார், தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

“படிப்பின் மீது மட்டுமே கவனம்”
சக மாணவர்களுடன் எவ்வித பிரச்னையிலும் ஈடுபடாதவரான மதன்குமார், தன்னுடைய படிப்பின் மீதும் குடும்பத்தின் மீதும் மட்டுமே கவனம் கொண்டிருந்ததாக விசாரணை அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவருடைய மரணத்தில் சந்தேகங்களை எழுப்பியுள்ள ரிம்ஸ் மருத்துவமனையின் இளநிலை மருத்துவர்கள் சங்கம், அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு மெழுகுவர்த்திப் பேரணியும் நடத்தினர்.

இந்த சங்கமும் மதன்குமாரின் மரணத்தில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. விடுதியின் மாடியில் எரியூட்டக்கூடிய எண்ணெய் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது இருந்த கொள்கலனோ அல்லது தீப்பெட்டியோ, லைட்டரோ ஏன் அங்கு இல்லை என, அச்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் விகாஸ் குமார், ”வியாழக்கிழமை காலை 5.45 மணியளவில் எங்களுக்கு சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தால் அவருடைய உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம்.

விடுதியின் மாடியில் மதன்குமாரின் கால்தடம் மட்டுமே இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். எனினும், எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அதனால், மதன்குமாரின் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மதன்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

“ஜீரணிக்க முடியவில்லை”
அதேபோன்று, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய மதன்குமாரின் நண்பரும் மருத்துவருமான கவின்குமார், இச்சம்பவம் தங்களுக்கு ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில், ”மாணவரின் அறையிலிருந்து சில தடயங்களும், தீப்பிடிக்கும் திரவங்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது உடற்கூராய்வின் முடிவில் தான் தெரியவரும் என்று ஜார்கண்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜார்கண்ட் மருத்துவ மாணவர் மதன்குமாருக்காக ரிம்ஸ் மருத்துவமனையின் இளநிலை மருத்துவர்கள் சங்கம் மெழுகுவர்த்திப் பேரண்க நடத்தினர்.

மருத்துவ மாணவர் மதன்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணங்கள் இல்லை என்று கூறப்படும் நிலையில், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து நேர்மையான விசாரணை நடத்தி, அவரது குடும்பத்திற்கு நீதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு, ஜார்கண்ட் அரசுடன் தொடர்பு கொண்டு விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்யவேண்டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு தமிழக அரசும், ஜார்கண்ட் அரசும் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும் முன்வர வேண்டும்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் பேசியபோது, ”அகில இந்திய ஒதுக்கீட்டில் வெளிமாநிலங்களில் சென்று மருத்துவம் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு உதவுவதற்காக, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மேற்பார்வையிலான அமைப்பு செயல்பட்டு வருகிறது,” எனத் தெரிவித்தார்.

மேலும், மதன்குமாரின் மரணத்தில் அவருடைய பெற்றோர் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும், அதுகுறித்து அம்மாநில அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணையை கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான மதன்குமாரின் தந்தை கொத்தனார் என்றும், ஏழ்மையான நிலையிலும் அவரை மருத்துவம் படிக்க வைத்ததாகவும் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் உமா.
மதன்குமார் உடல் அருகே அவரது தந்தை.
இதனிடையே, மதன்குமாரின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரெனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அவரின் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான பதிவில், “மதன்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து ஜார்கண்ட் மாநில காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 2016ஆம் ஆண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்பு படித்து வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பி.ஹெச்டி. மாணவரான முத்துகிருஷ்ணன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு, அங்கு மாணவர்கள் எதிர்கொள்ளும் புதிய சூழல் - மன அழுத்தம், சமூக - பொருளாதார பாகுபாடுகள் உள்ளிட்டவற்றைக் களைய அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக