ஞாயிறு, 5 நவம்பர், 2023

ஹரியானா 60 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல்: பள்ளி முதல்வர் கைது!...

தினமணி : ஹரியாணா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 60 சிறுமிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல் செய்து, தலைமறைவாக இருந்த அப்பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி, பள்ளி முதல்வர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, 15 மாணவிகள் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு 5 பக்க கடிதம் அனுப்பியதைத்
தொடர்ந்து அக்டோபர் 31-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ மற்றும் ஐபிசி 354-வது பிரிவின் கீழ் உச்சனா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட 60 வயது பள்ளி முதல்வர் கடந்த 5 நாட்களாக தலைமறைவாக இருந்ததாகவும், தற்போது டிஎஸ்பி அமித் பாட்டியா தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய டிஎஸ்பி அமித் பாட்டியா, “தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வரை மாநிலத்திற்குள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி அவரைப் பிடித்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளோம். சிறப்பு புலனாய்வுக் குழுவானது முதலில் அவரைப் பற்றி விசாரித்து, நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது செய்துள்ளோம்” என்று கூறினார்.

ஜிந்த் துணை கமிஷனர் முகமது இம்ரான் கூறுகையில், “மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிச் சிறுமிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக