சனி, 4 நவம்பர், 2023

அண்ணாமலையின் இலங்கை விசிட்: பின்னணியில் நீலகிரி தேர்தல்!

 minnambalam.com  - Aara  : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று (நவம்பர் 2) இலங்கையில் மலையக தமிழர்களை கவுரவப்படுத்தும் வகையில் ‘நாம் 200’ என்ற நிகழ்ச்சி கொழும்புவில் நடைபெற்றது.
இதில் அவர் கலந்து கொண்டு இந்தியா-இலங்கை இடையேயான உறவு குறித்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் இலங்கை சென்ற தமிழக பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் அவர் பேசுகையில், “இந்த நாம் 200 நிகழ்ச்சி மிகவும் முக்கியமான ஒன்று.
நம்முடைய அனைவரின் கடுமையான உழைப்பை இது நினைவுபடுத்துகிறது.


1823-ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து குறிப்பாக தென் தமிழகத்தில் இருந்து பல மீளா துயரத்தோடு உங்களுடைய முன்னோர்கள் இங்கு வந்தனர். யாரும் அனுபவிக்காத பல்வேறு துயரங்களை அவர்கள் அனுபவித்தனர்.

குறிப்பாக பஞ்சத்திலே,பசியிலே, வறுமையிலே, கடன் துயரத்திலே சிக்கித் தவித்த சீரழிந்த நம்முடைய சகோதர, சகோதரிகள் ஒன்றிணைந்து கப்பல் மூலமாக இலங்கை வந்து எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் இலங்கையின் மலையக பகுதிக்கு வந்து மிருகங்களால் சூழப்பட்ட இந்த காட்டை தம்முடைய கைகளினால் அற்புதமாக ஒரு நாடாக மாற்றி தேயிலை, ரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். இன்று சிறிய நாடாக இருக்கும் இலங்கை பொருளாதார ரீதியாக உயர்ந்ததற்கு அவர்களே முக்கிய காரணம்” என்று பேசிய அண்ணாமலை தொடர்ந்து,

”நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை பற்றி பேசும்போது கலாச்சார இரட்டையர்கள் என்று கூறுவார். தமிழக மக்களும், இங்கிருக்கும் மலையக தமிழர்களும் தொப்புள் கொடி உறவு என்று தான் சொல்ல வேண்டும்.

200 ஆண்டுகளாக வெட்டுப்படாமல் இருக்கும் தொப்புள்கொடி உறவு இது. ஒரு காலத்தில் ஆறு,ஏழு லட்சம் தமிழர்கள் இங்கு கூலி தொழிலாளர்கள் இங்கு தேயிலை தோட்டங்களில் வேலை செய்துள்ளனர். எனக்கு தெரிந்து உலகத்தில் எந்த ஒரு இனத்துக்கும் இவ்வளவு கொடுமைகள் நடந்ததில்லை. இந்த அற்புதமான தருணத்தில் இரண்டு தலைவர்கள் குறித்து நினைவு கூர்கிறேன்.

ஒருவர் ‘இலங்கையின் பாரதி’ என்று அழைக்கப்பட்ட கோதண்டராம நடேச அய்யர். மற்றொருவர் சௌமியமான் மூர்த்தி தொண்டைமான். அவர்கள் இருவரும் இங்குள்ள மலையக தமிழர்களுக்காக ஏராளமான உழைப்பை வழங்கி இருக்கின்றனர். உங்கள் துயரங்களை குறைத்ததில் அவர்களுக்கு முக்கிய பங்குள்ளது.

மலையக தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் இந்த அறிவிப்பை இந்திய அரசு 2020-ம் ஆண்டு வெளியிட்டது. இடையில் கொரோனா காரணமாக இந்த திட்டம் தடைபட்டது. கொரோனா காரணமாக தடைபட்ட வீடுகளை விரைவாக கட்டி முடித்து உங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். உங்கள் அனைவருக்கும் பட்டா நிலங்கள் கிடைக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை.

நேரடியாக உங்களை வந்து சந்தித்த அந்த தருணம் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உங்களுடைய உழைப்பை அவர் அடிக்கடி நினைவு கூர்கிறார். விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுடன் இணைந்து உங்களுக்கு ஒரு நல்ல வாழ்வை அளிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சி எடுக்கும். உங்களுடைய கடுமையான முயற்சிகளால் இலங்கையில் ஒரு முக்கியமான புள்ளியாக நீங்கள் மாற வேண்டும். அதற்காக உங்களது குழந்தைகளை நீங்கள் நன்றாக படிக்க வைக்க வேண்டும்.அவர்கள் நாளை மாபெரும் தலைவர்களாக உருவாவர்கள். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நீங்கள் தமிழகம் வர வேண்டும். வரும் நாட்களில் ஆண்டவன் உங்களை நன்றாக வைத்து கொள்வார்” என்று பேசினார் அண்ணாமலை.

இந்த பேச்சில் அண்ணாமலை குறிப்பிட்ட இன்னொரு முக்கியமான விஷயம், ”இங்கே உள்ள மலையகத் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள நாடு திரும்பிய தமிழர்களுக்கும் எப்போதும் பாஜக துணை நிற்கும். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் நாடு திரும்பிய தமிழ் சமூகத்தின் உயிர்நாடியான TANTEA தொழிற்சாலையை மூட தமிழக அரசு திட்டமிட்டபோது, தமிழ் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக நீலகிரியில் நாம் பெரும் போராட்டம் நடத்தியதை இங்கே நினைவுபடுத்துகிறேன்” என்பதாகும்,

விரைவில் எம்பி தேர்தல் வர இருக்கிற நிலையில் நீலகிரி தொகுதியில் பாஜக களம் காணப் போகிறது. இதற்கான ஆயத்தங்களில் ஒன்றுதான் இந்த கூட்டமும். தேர்தலில் மலையகத் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவும், மலையகத் தலைவர்களை தேவைப்பட்டால் தேர்தல் நேரத்தில் நீலகிரிக்கு அழைத்து வரும் திட்டமும் அண்ணாமலையிடம் இருக்கிறது என்கிறார்கள் மலையக வட்டாரங்களில்.
-மஞ்சுளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக