செவ்வாய், 28 நவம்பர், 2023

உதயநிதிக்கு ப்ரமோஷன்- முந்திக் கொண்ட துரைமுருகன்

மின்னம்பலம்  - Aara  : நவம்பர் 26 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இளைஞரணி மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. திமுக வரலாற்றிலேயே முதல் முறையாக மாசெக்கள் கூட்டத்தில் அணிச் செயலாளரும், (உதயநிதி) அந்த அணியின் மாநில துணைச் செயலாளர்களும் கலந்துகொண்டனர். இதுபற்றி விரிவாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை பகுதியில் செய்தி வெளியானது. Promotion to Udayanidhi
இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேச்சு அமைச்சர் உதயநிதியை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்வதற்கான அச்சாரமாக அமைந்திருப்பதாக சொல்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.
அப்படி என்ன பேசினார் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன்?


“நான் கலைஞரோடு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவரது ஒவ்வொரு அணுவையும் அறிந்திருக்கிறேன்.

கலைஞர் நமது முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு கட்ட பரிட்சைகளை வைத்தார். நீண்ட காலமாக காக்க வைத்துதான் ஸ்டாலினுக்கு உரிய உயர்வுகளை தந்தார்.

உதயநிதி தற்போது ஸ்டாலினுக்கு சளைக்காமல் உழைக்கிறார். தந்தையின் சுமைகளை தன் தோளில் போட்டுக் கொண்டு அலைகிறார். அதனால்… கலைஞர், ஸ்டாலினுக்கு காட்டிய தாமதத்தை ஸ்டாலின்… உதயநிதிக்கு காட்டக் கூடாது.

உதயநிதியின் உழைப்புக்குரிய உயர்வுகளை உரிய நேரத்தில் அவருக்குக் கொடுக்க வேண்டும். இளைஞரணி மாநாட்டுக்காக கடுமையாக உழைத்து வருகிறார் உதயநிதி.

ஸ்டாலினை இளைஞரணிச் செயலாளராக, துணைப் பொதுச் செயலாளராக, பொருளாளராக, துணை முதல்வராக, செயல் தலைவராக, தலைவராக நாம் போட்டியின்றி தேர்வு செய்தோம்.

உதயநிதியும் போட்டியின்றி எல்லார் மனதிலும் நிறைந்திருக்கிறார். அவருக்கான உயரங்களும் போட்டியின்றி அவருக்கு சேரும்.

கலைஞரே ஒருமுறை ‘ என் பேரன் உதயநிதி பகுத்தறிவு வாதியா இருக்கான்யா’ என்று என்னிடம் பெருமைப்பட்டிருக்கிறார். கலைஞரால் அப்போதே அடையாளங்காணப்பட்டவர்தான் உதயநிதி” என்று பேசியிருக்கிறார்.

சேலம் இளைஞரணி மாநாட்டில் உதயநிதியின் ப்ரமோஷன் பற்றி திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பேசத் திட்டமிட்டிருந்த நிலையில்… மாநாடு வரைக்கும் காத்திருக்காமல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே முந்திக் கொண்டார் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

–வேந்தன் Promotion to Udayanidhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக