புதன், 29 நவம்பர், 2023

Arnold Dix உத்தரகான்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பில் முன்னின்று உழைத்த ஆர்னோல்ட் டிக்ஸ் Tunnelling Expert

 Kana Praba : உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்கள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்கள் மீட்கப்பட மகிழ்ச்சியான தருணத்தில் இன்னொரு பூரிப்பான செய்தியையும் அதைத் தொட்டு பேச வேண்டும்.
இந்த மீட்புப் பணிக்கு உறுதுணையாக இருந்தவர் Australia  நாட்டின் சுரங்க நிர்மாண நிபுணரான (Tunnelling Expert) Arnold Dix.
Arnold Dix இன் தகமைகளைப் பார்க்கும் போதே ஒரு சுரங்கப்பாதையின் குழப்பம் போல நீளும்.
ஆம், இவர் ஒரு சட்டவாளர், விஞ்ஞானி மற்றும் பொறியியல் கற்கைப் பேராசிரியர்.
சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் மையம் கொண்டிருக்கும் International Tunnelling and Underground Space Association அமைப்பின் தலைவராகவும் இயங்கி வருகிறார்,


தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் ஒப்பந்தத் திட்டத் தேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் செயற்படுத்தும் திறனை அவரது உலகளாவிய அனுபவம் கை கொடுத்திருக்கிறது. கானா பிரபா
உத்தகாசியின் Silkyara-Barkot சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் சிக்கிய செய்தியைத் தொடர்ந்து நவம்பர் 20 ஆம் திகதி இந்தியாவின் அழைப்பின் பேரில் அங்கு சென்று இந்த மீட்புப் பணிக்குக் கை கொடுத்திருக்கிறார்.
"இந்த மீட்பின் வெற்றி நிஜ வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு அதிசயம் போன்றது. மில்லியன் கணக்கான டன் சிதைவுகளை நாங்கள் எப்படியோ சமாளித்து, சில வாரங்களாக சிக்கியிருந்த சில மனிதர்களை மீட்டுவிட்டோம்."
என்று பூரிக்கிறார் அவர்.  
“ஒரு சிக்கல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பற்றிச் சிந்திப்பது வீண், அந்தச் சிக்கலை எப்படி விரைவாகத் தீர்க்க முடியும் என்று நம் சிந்தனையின் முனைப்பு இருக்க வேண்டும்.
இப்படியான ஒரு இடர் வரும் போது ஒட்டுமொத்தமாக, அந்த மனிதர்களை நோக்கிய சிந்தனையை மையப்படுத்திய கவனம் மட்டுமே நமக்கு இருக்க வேண்டும்” என்று இன்று காலை ஆஸித் தொலைக்காட்சி 9 என்ற ஊடகத்துக்குத் தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் Arnold Dix.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக வென்று கவனத்தை ஈர்த்த Australia இம்முறை இந்த மாதிரியானதொரு மனித நேயச் செயற்பாட்டுக்கு ஒற்றை ஆளை அனுப்பி ஆரத் தழுவ வைத்திருக்கிறது.
பதிவை எழுதியவர் : கானா பிரபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக