புதன், 29 நவம்பர், 2023

குஷ்புவுக்கு எதிரான போராட்டம்.. கைது செய்யப்பட்ட 140 பேர் மீது வழக்கு

மாலை மலர்  : நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பான சமூக வலைதள பதிவில், நடிகை குஷ்பு "சேரி" என்ற வார்த்தை பயன்படுத்தியது பேசுபொருளாக மாறியது. இவரின் வார்த்தை உபயோகத்திற்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் சேரி வார்த்தை தொடர்பாக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
அந்த வகையில், நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறை சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மன்னிப்பு கோராவிட்டால், நடிகை குஷ்பு வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்து இருந்தது.

தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று கூறிய நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினார். இதையடுத்து இன்று காலை குஷ்பு வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் எஸ்.சி. துறை அறிவித்து இருந்தது. இதையடுத்து நடிகை குஷ்பு வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

எனினும், வீட்டின் அருகே குவிந்த காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமானோரை காவல் துறை கைது செய்தது. அந்த வகையில், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 140 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக