புதன், 1 நவம்பர், 2023

இலங்கையில் நிர்மலா சீதாராமன் .. மலையகத்தின் “நாம் 200” நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்

hirunews.lk : “நாம் 200” நிகழ்வில் பங்கேற்கவுள்ளார் இந்திய நிதியமைச்சர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை வந்துள்ளார்.
அவரை, வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதன்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.


தமது விஜயத்தின் போது, மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் நாளை இடம்பெறவுள்ள “நாம் 200” தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் நடைபெறவுள்ள இந்திய - இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டிலும் அவர் உரை நிகழ்த்த உள்ளார்.

அத்துடன், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவதுடன், இன்று மாலை திருகோணமலைக்கு செல்லவுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் இந்தியாவின் அரச வங்கியொன்றின் கிளைகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.

இதுதவிர, லங்கா ஐஓசி எரிபொருள் முனையம், யாழ்ப்பாண கலாசார மையம் மற்றும் யாழ்ப்பாண பொது நூலகத்தையும் அவர் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக