திங்கள், 16 அக்டோபர், 2023

அதிர்ச்சியில் K S அழகிரி! முழுநாள் முயற்சி... 3 நிமிட சந்திப்பு! சோனியா ட்ரீட்மென்ட்....

மின்னம்பலம் - ஆரா " டிஜிட்டல் திண்ணை: முழுநாள் முயற்சி... 3 நிமிட சந்திப்பு! சோனியா ட்ரீட்மென்ட்.... அதிர்ச்சியில் அழகிரி
“மேடையில் நடந்தவை செய்திகளாக வெளிவந்துவிட்டன. சோனியா வந்து சென்ற பின்னரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் குமுறல்கள் இன்னும் காங்கிரஸாருக்குள்ளேயே  எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
சோனியா காந்தி தற்போது நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இருக்கிறார். அவர் சென்னைக்கு அக்டோபர் 13 இரவு வந்தார், அக்டோபர் 14 முழு நாளும் இங்கே இருந்து அக்டோபர் 15 காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்த இரு இரவு ஒரு பகலில் சோனியா காந்தியை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் தனிப்பட்ட முறையில் சந்திக்க கே.எஸ்,. அழகிரி கடும் முயற்சி செய்த பிறகே அதுவும் மிகவும் சில நிமிடங்களே சாத்தியமாயிற்று என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.
சோனியா காந்தி சென்னை வருவது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கே உரிய முறையில் தகவல்  பரிமாற்றம் நடந்திருக்கவில்லை  என்று சொல்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமானவர்கள். அக்டோபர் 13 அன்று இரவு சோனியா, பிரியங்காவை தமிழக முதல்வர் ஸ்டாலினோடு இணைந்து வரவேற்றார் கே.எஸ். அழகிரி.  அதன் பின் அன்று இரவு அவர்கள் ஐடிசி சோழாவில் தங்கினர். சோனியா சென்னை வந்திருக்கிற நேரத்தில் சத்தியமூர்த்தி பவன் வர முடியாத சூழலில் ஹோட்டலிலேயே  காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் போடலாம் என்று அழகிரி மேலிடப் பொறுப்பாளர்கள் மூலமாகக் கேட்டிருக்கிறார்.

சோனியாவின் பாதுகாப்பு பிரிவினர் அதற்கு முதலில் மறுத்துவிட்டார்கள். சோனியா சென்னை வந்து காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்காமல் போய்விட்டால் அது காங்கிரஸ் கட்சிக்கு நன்றாக இருக்காது என்று எடுத்துச் சொல்லி, பாதுகாப்பு அதிகாரிகளை கன்வின்ஸ் செய்தனர்.  அதன் பின் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்தால் கூட்டம் போடலாம் என்றார்கள் பாதுகாப்பு அதிகாரிகள். அதன் பின்னர்தான் எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில முன்னாள் தலைவர்கள், அணி நிர்வாகிகள் ஆகியோர் அடங்கிய கூட்டம் நடந்தது.

அப்போது அனைவரோடும் சேர்ந்து அழகிரியை பார்த்தார் சோனியா. அந்த கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் சோனியாவிடம் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை என்ற இளைஞர்  துடிப்போடு செயல்படுகிறார், அதுபோல ஒருவரை நாம் காங்கிரஸுக்கு தலைவராக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஜோதிமணி உள்ளிட்ட சிலர் மாநிலத் தலைமை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் சோனியாவோ, ‘தலைமையை மாற்றச் சொல்கிறீர்கள். நீங்கள் காங்கிரஸ் கட்சி வளர என்ன செய்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார்.
கூட்டம் முடிவதற்குள் அதே ஹோட்டலில் கனிமொழி ஏற்பாடு செய்த லஞ்ச் தொடங்கிவிட்டது. அதனால் போனிலேயே நான் வரவில்லை என்ற தகவலை கனிமொழிக்கு சொல்லிவிட்டார் சோனியா.

மதிய உணவு முடிந்து மீண்டும் மாலை மகளிர் உரிமை மாநாட்டுக்கு புறப்படுவதற்குள் சோனியாவை சந்தித்துவிட கடுமையாக முயற்சி செய்திருக்கிறார் கே.எஸ். அழகிரி.  டெல்லிக்கு பேசி டெல்லியில் உள்ள சிலர் மூலமாக பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் சோனியாவிடம் தகவல் சொல்லி அதன் பின்னரே… மாநாட்டுக்கு புறப்படும் போது சில நிமிடங்கள் சோனியாவை சந்தித்திருக்கிறார் அழகிரி.  ஐந்து நிமிடங்கள் கூட இருக்காது என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரங்களில். அந்த மூன்று நிமிடங்களில் சோனியாவை சந்தித்து அவரிடம் ஒரு மனுவை அளித்திருக்கிறார் கே.எஸ். அழகிரி.

மாநிலத் தலைவராக யார் இருந்தால் என்ன, அவரோடு சில நிமிடங்கள் மாநில அரசியல் பற்றி சோனியா விவாதித்திருக்கலாமே, ஏன் அவ்வாறு சோனியா நடந்துகொண்டார் என்று அழகிரி ஆதரவாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், ‘சோனியா முன்பு போல இல்லை. அவர் உடல் நலம் கருதி பல நிகழ்வுகளை குறைத்துக் கொண்டுவிட்டார். கலைஞர் நூற்றாண்டு விழா என்பதற்காகத்தான் வந்தார். எனவே இதில் யாரையும் அவர் ஒதுக்கினார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை’ என்று சோனியாவின் லேட்டஸ்ட் செயல்பாடுகள் பற்றி   அறிந்த காங்கிரஸார் கூறுகிறார்கள். ஆனாலும் அழகிரிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் வருத்தம்தான்.

இவர்களுக்கு இடையே அழகிரி மீது டெல்லிக்கு திருப்தி இல்லை, அதனால்தான் இந்த மாதிரியெல்லாம் நடந்திருக்கிறது விரைவில் அழகிரி மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளன என்று  அழகிரிக்கு எதிர்க் கூடாரத்தினர் மீண்டும் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

மகளிர் உரிமை மாநாட்டிலும் காங்கிரஸாருக்கு உரிய இடம் அளிக்கவில்லை என்ற வருத்தம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. மொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு 75 அழைப்பிதழ்கள்தான் கொடுக்கப்பட்டிருந்தன என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். அதிலும் இருக்கை ஒதுக்கீடுகள் திருப்தியாக இல்லை என்ற குறையும் காங்கிரசாரிடம் இருக்கிறது”  மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக