திங்கள், 30 அக்டோபர், 2023

பிரியங்கா காந்தி ; இந்தியாவின் முடிவிற்கு நான் வெட்கப்படுகிறேன்!

மாலை மலர் :  கடந்த அக்டோபர் 7 முதல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசாவில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளத
உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இந்நிலையில், ஐ.நா. கூட்டமைப்பின் பொதுச்சபையில் (UNGA) நேற்று முன் தினம் ஜோர்டான், "காசாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்க உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசியமான தேவைகளும் தங்கு தடையற்று கிடைக்க வேண்டும்," என்றும் கோரிக்கை வைத்து ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது.
ஜோர்டானின் தீர்மானத்திற்கு ஐ.நா. உறுப்பினர் நாடுகளில் 120 நாடுகள் ஆதரவும், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன.

இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

"இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று நடைபெற்ற ஹமாஸ் தாக்குதல் அதிர்ச்சிகரமானது. ஆனால், அது குறித்து தீர்மானத்தில் வாசகங்கள் இடம் பெறவில்லை. பொதுமக்கள் காசாவில் கொல்லப்படுவதும் கவலையளிக்கும் செயல். இதனால் இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்தது" என இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து ஐ.நா. சபைக்கான இந்திய துணை நிரந்தர தூதர் யோஜ்னா படேல் (Yojna Patel) தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கண்டித்துள்ளார்.

அவர் இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:

'தன் கண்ணை பிடுங்கியவனின் கண்ணை பிடுங்க வேண்டும் எனும் எண்ணமும், செயலும், உலக மக்கள் அனைவரையும் குருடர்களாக்கி விடும்' என தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியிருந்தார். அகிம்சையும், உண்மையுமே நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளம். உணவு, குடிநீர், மருந்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் அனைத்தும் காசா பொது மக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மிகுந்த துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஜோர்டானின் போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தில் பங்கேற்காததன் மூலம் நம் நாடு எந்த உயர்ந்த எண்ணங்களை தாங்கி பல காலங்களாக நிலை நிற்கிறதோ அவை அனைத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை இப்போது இந்தியா எடுத்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு. இந்த முடிவிற்காக ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன்.

இவ்வாறு பிரியங்கா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக