ஞாயிறு, 8 அக்டோபர், 2023

பிரதமர் மோடி : இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்!

 tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் :  "இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்".. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.. குவியும் ஆதரவு
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் பயங்கர தாக்குதலை நிகழ்த்தி இருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அணி திரளும் நாடுகளில் இநதியாவும் இணைந்திருக்கிறது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாத படையினர் நடத்தியுள்ள தாக்குதல் உலக நாடுகளையே அதிரச் செய்திருக்கிறது.



 இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்டகாலமாகவே மோதலும், சண்டைகளும் நடந்திருந்தாலும், இதுபோன்ற ஒரு மோசமான தாக்குதல் இஸ்ரேல் மீது நடத்தப்பட்டது இல்லை. வான் வழியாகவும், தரை வழியாகவும் ஹமாஸ் படையினர் ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் இஸ்ரேலில் உள்ள முக்கிய நகரங்கள் நிலைக்குலைந்துள்ளன.

இஸ்ரேலின் அடுத்த அதிரடி 'மூவ்'.. ஹமாஸ் அமைப்பை நிர்மூலமாக்கும் ஆபரேஷன்..
இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஹமாஸ் படையினரின் தாக்குதலால் கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரமதர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்ப் பிரகடனம் செய்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், "இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அறிந்து கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானேன். இந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ள அப்பாவி மக்களுக்காக நான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். இந்த கடினமான சூழலில், இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கும்" என தனது பதிவில் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தது முதலாக இஸ்ரேலுடனும், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனும் நெருங்கிய நட்பை பேணி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக