ஞாயிறு, 8 அக்டோபர், 2023

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 200 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது

BBC News : இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. இதில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி விட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலோ, ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல்
இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், அங்கே குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. எனினும், 2021-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்கவில்லை. அதற்கு ஹமாஸ் அமைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதில், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 740 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்
"அத்துடன், இது ஒரு போர், இந்த போரில் நாங்கள் வெல்வோம். எங்கள் எதிரிகள் அவர்கள் இதுவரை அறிந்திராத பெரும் விலையை கொடுக்க நேரிடும்" என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, காசா பகுதியில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், பல ஆயிரம் ரிசர்வ் படை வீரர்களையும் இஸ்ரேல் ராணுவம் பணிக்கு அழைத்துள்ளது.

இஸ்ரேல் விமானப்படையின் 12 போர் விமானங்கள் காசா பகுதியில் பறந்து குண்டு மழை பொழிந்தன. இதனால், காசா பகுதியில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் 17 ராணுவ முகாம்களையும், 4 மண்டல தலைமை அலுவலகங்களையும் குறிவைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேவேளையில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் 161 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

இஸ்ரேல் மீது பாலத்தீன ஆயுதக் குழுவினர் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எந்த வித காரணமும் இன்றி நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறினார்.

"பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நாங்கள் இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுடன் உறுதியாக நிற்கிறோம், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்காக எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்."

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாச்சி ஹானெக்பியுடன் பேசியதாகவும், "எங்கள் இஸ்ரேலிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் உள்ளது" என்றும் அவர் கூறினார்.

பாலத்தீன தாக்குதலுக்கு இரான் ஆதரவு
இரானின் தலைவர் அலி கமேனியின் ஆலோசகர், இஸ்ரேல் மீதான பாலத்தீனியர்களின் தாக்குதலை ஆதரிப்பதாக எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன.

"பாலத்தீன போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக ISNA செய்தி நிறுவனம் கூறுகிறது.
"பாலத்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் பாலத்தீன போராளிகளுக்கு துணை நிற்போம்" என்று அவர் கூறினார்.

ஹமாஸ் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா ஆதரவு
லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, காஸாவின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், "பாலத்தீன ஆயுதக் குழுவினரின் தலைமையுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும்" கூறியுள்ளது.

அது ஹமாஸ் தாக்குதல்களை "இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமான பதில் மற்றும் இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு வர விரும்புவோருக்கான ஒரு செய்தி" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆயுதக் குழு இஸ்ரேலின் முக்கிய எதிர்ப்பாளராகத் திகழ்ந்து வருவதாகவும், 2006 இல் அந்நாட்டுடன் போருக்குச் சென்றது என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானின் இராணுவ மற்றும் நிதி உதவியை நம்பிச் செயல்பட்டு வருகிறது.
காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறிய பிறகு நடந்த மோதல்கள்
ஆகஸ்ட் 2005 - மத்திய கிழக்குப் போரில் எகிப்திடம் இருந்து காசாவைக் கைப்பற்றிய 38 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலியப் படைகள், அனைத்தையும் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு காசாவிலிருந்து வெளியேறின.
    ஜன. 25, 2006 - பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆயுத போராட்டத்தை கைவிடவும், இஸ்ரேலை அங்கீகரிக்கவும் ஹமாஸ் மறுத்ததால் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்தின.
    ஜூன் 14, 2007 - மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளை வீழ்த்தி காசாவை ஹமாஸ் கைப்பற்றியது.
    டிசம்பர் 27, 2008 - தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகள் வீசியதை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 22 நாள் நடந்த தாக்குதலில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
    நவம்பர் 14, 2012 - ஹமாஸின் ராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொலை செய்தது.
    ஜூலை-ஆகஸ்ட் 2014 - மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்தி ஹமாஸ் கொலை செய்தது. இதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்த போரில் 2,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
    மார்ச் 2018 - பாலஸ்தீனிய அகதிகளை தங்கள் நிலங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது.
    மே 2021 - ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.
    ஆகஸ்ட் 2022 - மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதி தய்சீர் அல்-ஜபரியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த மோதலில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர்.
    ஜனவரி 2023 - இஸ்ரேலிய படைகள் ஒரு அகதிகள் முகாமைத் தாக்கி ஏழு பாலஸ்தீன ஆதரவு தாக்குதல்தாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்களையும் கொன்றதை அடுத்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் பதில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
    அக்டோபர் 2023 - தற்போது எல்லை தாண்டிச் சென்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ளது. தனது போராளிகளும் இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளதாக இசுலாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக