வெள்ளி, 20 அக்டோபர், 2023

நடிகை ஜெயப்பிரதா மீதான சிறை தண்டனையை நிறுத்திவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு தள்ளுபடி-

மாலைமலர் : சென்னை நடிகை ஜெயபிரதா, சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார்.
அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கீழ் கோர்ட்டு தண்டனையை நிறுத்திவைக்க கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஜெயபிரதா உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.37 லட்சத்து 68 ஆயிரத்தை செலுத்த முடியுமா? என்று ஜெயபிரதா தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

ஆனால், ரூ.20 லட்சம் செலுத்துவதாக ஜெயபிரதா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கு இ.எஸ்ஐ. தரப்பு வக்கீல் டி.என்.சி.கவுசிக், எதிர்ப்பு தெரிவித்துவாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், "கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜெயபிரதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய பின்னர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கீழ் கோர்ட்டு நிறுத்திவைக்கலாம். இல்லை யென்றால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக