புதன், 4 அக்டோபர், 2023

சனாதனத்தில் பெண்கடவுளே இல்லை! ஆதார கட்டுரை #சனாதனலீக்ஸ்

May be an image of temple and text that says 'சனாதனத்தில் பெண் கடவுளே இல்லை! "பழமைபெற்ற பதினெட்டு மஹாபுராணங்களிலும், ராஜஸ் தாமஸ் புராணங்களில் முறையே பிரமனுக்கும் சிவனுக்கும் பெருமை சொல்லப்பட்டதேயொழிய சிவ பத்னியான காளிக்குப் பெருமை சொல்லும் புராணம் எதுவுமில்லை." "சுமார் ஐந்நூறு வருடங்களுக்குள்ளாகவே தேவிபாகவதம், ஸௌந்தர்ய லஹரி முதலான நூல்கள் கற்பிக்கப்பட்டன. அப்பய தீகூிதர் காலம் வரையில் அத்வைதிகள் சிலர் சிவபரத்வம் கூறினார்களேயொழிய இந்த சாக்த நூல்களைக் கொண்டு சக்தி பரத்வம் கூறவில்லை." -இராமபாணம்(முதல் தொகுதி) நூல் ஆசிரியர் ஆழ்வார் திருவடிப்பொடி சேபக்மநாபன் அவர்கள்( 2002 சனாதனலீக்ஸ்!'

Dhinakaran Chelliah :  சனாதனம் அறிவோம்(பாகம் 31) #சனாதனலீக்ஸ்
பெண்தெய்வ வழிபாடு
பெண்களைத் தெய்வமாக வழிபடுகிறோம்,அதில் பெருமை கொள்கிறோம் என்கிற அப்பாவி ஹிந்துக்களாக, சனாதனிகளாக, சாக்தர்களாக, சைவர்களாக, வைஷ்ணவர்களாகத்  தங்களைக் கருதிக் கொண்டிருப்பவர்களுக்காக இந்தப்பதிவு சமர்ப்பணம்.
சனாதனிகளில் தாய்த் தெய்வ வழிபாட்டை விமர்சித்து எழுதியவர்கள் மிகக் குறைவே.
அப்பேற்பட்ட கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன்.
அந்தக் கட்டுரை இராமபாணம்(முதல் தொகுதி) இடம் பெற்றுள்ளது, நூல் ஆசிரியர் ஆழ்வார் திருவடிப்பொடி சே.பத்மநாபன் அவர்கள்.
இந்நூல் 2002 ஆம் ஆண்டு பதிப்பு.இந்நூலில் விமர்சிக்கப்பட்டுள்ள பத்திரிக்கைகள் என ஞானபூமி,குமுதம் பக்தி ஸ்பெஷல்,ஆன்மீகம்,ஞானமணி,அம்மன் தரிசனம்,தினபூமி-ஆன்மீக பூமி,காமகோடி,ஶ்ரீ பெரும்புதூர் தேவஸ்தானம்,ஆன்மீக ஜோதி,தினமலர் பக்திமலர்,துக்ளக்,தெய்வம் பேசுகிறது,
ஓம் சக்தி,ஆன்மீக ஆலயம்,அருள்பூமி,நல்லநேரம் என இருபது இதழ்களின் பட்டியல் உள்ளது. சனாதனிகளிடையே 2002 களில் இருந்த சகிப்புத் தன்மை இப்போது இல்லை என்பதே கசப்பான உண்மை.
அந்த வகையில் துணிச்சலாக தனது விமர்சனங்களை இராமபாணம் நூலில் பதிவு செய்த ஆசிரிரைப் பாராட்டலாம். இப்போ ஆசிரியரின் கட்டுரைக்கு வருவோம்,


'அருள்பூமி' அக்டோபர் 2001 இதழில் "கருணைக் கடலின் கருணை அலைகள்" என்ற தலைப்பில் 'அங்கயற்கண்ணி அடிமை' என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், "தேவி பராசக்தியே முத்தொழிலுக்கும் காரணமான பரம்பொருள் என்றும் பராசக்தியின் திருவடித்தூளை எடுத்துத்தான் பிரமன் உலகைப் படைத்தான் என்றும், திருமால் அந்த தூளை எடுத்துத்தான் உலகைக்காக்கிறார் என்றும், சிவபெருமான் அதே தூள் கொண்டுதான் அழிக்கும் ஆற்றல் கொண்டான் என்றும் சௌந்தர்ய லஹரியில்
சொல்லப்படுவதாக எழுதியுள்ளார். மேலும் "திருமாலாகிய ராமன் தேவியின் அம்ஸமாகையால் அவனது பாத தூளி பட்டு பாபம் செய்த அகலிகை பாபம் நீங்கப்பெற்றாள்" என்றும் எழுதியுள்ளார்.
இவர் சொல்கின்ற கருத்துக்கு வேதம், இதிஹாசம், ஸாத்விக புராணங்கள் மற்றும் சங்க இலக்கியங்கள் முதலான எதிலுமே ஆதாரமில்லை.
வேதம், இதிஹாஸம், ஸாத்விக புராணங்கள் இவற்றிலெல்லாம் திருமாலே முத்தொழிலுக்கும் அதிபதியான பரம்பொருளாகப் பேசப்படுகிறான். நமது சங்கத் தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் திருமாலே முழுமுதல்வனாகவும் பரம் பொருளாகவும் போற்றப்படுகிறான்.
காளி சுடுகாட்டைக் காக்கும் தெய்வமாகவே சங்க நூல்களில் காணப்படுகிறாள்.
''முதல்முறை,இடைமுறை, கடைமுறை தொழிலின் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே- என்று திருமாலைப் போற்றுகிறது சங்க இலக்கியமான பரிபாடல்.
கட்டுரை ஆசிரியர் தம் கருத்துக்களுக்கு ஸௌந்தர்ய லஹரியை ஆதாரம் காட்டுகிறார். சக்தி உபாஸகர்களான சாக்தர்களில் யாரோ ஒருவர் செய்தது இந்தநூல்.இந்நூல் சுமார் 500 வருடங்களுக்கு உட்பட்டதே. கட்டுரை ஆசிரியரே தனது கட்டுரையில் ஓரிடத்தில் "இவ் வழகிய நூல் ஸ்ரீ சங்கராசாரியார் இயற்றியது என்றும், சிவபெருமான் செய்தது என்றும், அம்மை லலிதாம்பிகையே செய்தது என்றும் பலவிதமாகக் கூறுவர்.

இது தெய்வீகமான ஒரு மகாத்மாவால் செய்யப்பட்டது என்பதுதான் முடிவு" என்று கூறுகிறார். ஆகவே இந்நூலை இயற்றியது யார் என்று கட்டுரை ஆசிரியராலேயே முடிவு செய்ய இயலவில்லை என்பது புரிகிறது. இயற்றியவர் யார் என்றே தெரியாத ஒரு நூலை ஆதாரங்காட்டி, வேதக் கருத்துக்களுக்கு முரணாகப் பேசுவது இவரது அறிவின்மையையே பறை சாற்றுகின்றது.

மேலும் ஸ்ரீராமனை தேவியின் அம்சம்' என்கிறார் இவர். ஸ்ரீராமன் தேவியின் அம்சம் என்று எந்த ராமாயணத்தில் உள்ளது? திருமாலின் அவதாரங்களில் மோஹினி அவதாரமும் ஒன்று என்பதால் திருமாலை சிவசக்திகளில் ஒன்றாக சைவர்கள் கூறுவர்.

ஆண்தான் பெண் வேடத்தில் உள்ளார் என்பதைக்கூடப் புரிந்துகொள்ள இயலாமல் சிவன் காமவசப் பட்டான் என்றால், அது சிவனுக்குத் தாழ்வே தவிர உயர்வு அல்ல. இதைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் சைவர்கள். ஆகவே திருமால் தேவியின் அம்சம் என்பதற்கு வேதங்களிலோ இதிஹாஸங்களிலோ, ஸாத்விக புராணங்களிலோ, சங்க இலக் கியங்களிலோ ஆதாரமில்லை.

ஸ்ரீமத் பாகவதத்தில், இவர்கள் சொல்லும் 'ஆதிபராசக்தி' கண்ணனின் சகோதரியாகச் சொல்லப் படுகிறாள். பகவானின் யோகமாயையே இந்தப் 'பராசக்தி'. இவள் பகவானைப் பணிந்து ''எனக்கு என்ன பணி" என்று
கேட்டபோது, "நீ என் சகோதரியாகப் பிறப்பதால் ஆடு மாடு, எருமை போன்றவற்றை பலியிட்டு உனை ஜனங்கள் அர்ச்சிப்பார்கள்.

 நீ அவர்களது புலன் திருப்திக்காக ஆசைகளை விரைவில் திருப்தி செய்வாய். துர்க்கை, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா. சண்டிகா, கிருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா,நாராயணி, ஈசானி, சாரதா, அம்பிகா முதலான வெவ்வேறு விதமான பெயர்களுடன் இவ்வுலக இச்சைகளின் நிறைவை நாடுபவர்கள் உன்னை வழிபடுவார்கள்” என்று அருளிச்செய்தார்.

உண்மை இவ்வாறு இருக்கும்போது தேவியை பரம்பொருள் என்றும், திருமால் அவளது அம்சம் என்றும் கூறுவது ஆதார மற்ற அடிமுட்டாள் தனமான பேச்சாகும்.
இதே பத்திரிகையில் மற்றோர் இடத்தில், "அனைத்தும் அருள்பவள் அம்பாளே" என்ற தலைப்பில் 'ஸ்வப்ரகாச' என்பவர் ஓர் கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரை ஆசிரியரின் பெயரைப் பார்த்தாலே விசித்ரமாக உள்ளது.'

இக்கட்டுரையில் “அம்பிகையே மோக்ஷத்தைக் கொடுப்பவள். ப்ரஹ்மா, விஷ்ணு முதலான தேவர்கள் அவளது காலடியில் விழுந்து கிடக்கின்றனர்" என்று எழுதியுள்ளார்.
இவ்வுலக நலன்களை விரும்புபவர்களே சக்தியை வழிபடுவார்கள் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் மூலம் தெளிவு. வேத, இதிஹாஸ, ஸாத்விக புராணங்களில் எல்லாம் ஸ்ரீமந்நாராயணனே மோக்ஷமளிக்கவல்லவன் என்று முழங்கப்படுகிறான்.
'நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்' என்று சங்க இலக்கியமான பரிபாடல் "திருமாலைத் தவிர வேறு யாரும் மோக்ஷத்தைக் கொடுக்க முடியாது" என்று ஐயம் திரிபறக் கூறுகிறது.
உண்மை இவ்வாறு இருக்க, எந்த ஆதாரத்தையும் காட்டாமல் அம்பி கையே மோக்ஷத்தைக் கொடுப்பவள்' என்று எழுதுவது தன் இஷ்ட தெய்வத்திற்கு ஏற்றம் கொடுப்பதற்காகவேயன்றி உண்மையல்ல, இஷ்ட தெய்வத்திற்கு ஏற்றம் சொல்ல எதையும் எழுதலாம் என்று நினைப்பது மஹா மடத்தனம்: கட்டுரை ஆசிரியர் இதை உணர்வாராக.

இதே கட்டுரையில் ஓரிடத்தில் "ஸதீனாம் அசரமே" அதாவது "அம்பிகை பதிவ்ரதைகளில் முதலானவளாகப் போற்றப்படுகிறாள்'' என்று எழுதியுள்ளார்.
இதே கட்டுரைப் பக்கங்களில் சிவனை ஆசனமாகப் போட்டுக்கொண்டு அம்பிகை சிவன்மேல் உட்கார்ந்து இருப்பதுபோல் படம் வரைந்துள்ளனர். சிவனை அம்பிகையின் கணவனாகச் சொல்கிறார்கள் இவர்கள். இன்னோர்
இடத்தில் உடலெல்லாம் கபாலமாலை அணிந்து. பல்வேறு ஆயுதங்களுடனும், தொங்கிய நாக்குடனும் நிர்வாணமாக சிவனைக்கீழே போட்டு மிதித்த வண்ணம் அம்பிகை கூத்தாடும் படம் வரையப்பட்டுள்ளது.

அம்பிகையை 'பதிவ்ரதைகளில் முதலானவள்' என்று புகழ்ந்துவிட்டு இப்படிப்பட்ட படங்களைப் போட்டால் இப்படங்களைப் பார்த்துவிட்டு 'பதிவ்ரதையின் லட்சணம் இதுதான் போலிருக்கிறது' என்று நினைத்து நம் நாட்டுப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை தூக்கிப்போட்டு மிதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட அபத்தத் தத்துவங்களும் அசிங்கமான வழிபாட்டு முறைகளும் இருப்பதால்தான் சாக்த மதத்தை வேதமார்க்கத்
துக்குப் புறம்பானது என்று ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமாநுஜர் போன்ற மஹான்கள் எடுத்துக்கூடக் கழிக்காமல், ஒதுக்கித் தள்ளி விட்டனர். செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நவராத்ரி
சீஸன் என்பதால் இம்மாதங்களில் வெளிவரும் எல்லா 'ஆன்மீகப்பத்திரிகைகளும் தேவி பாகவதம், தேவி மாஹாத்மியம், ஸௌந்தர்ய லஹரி போன்ற அபத்தக் கற்பனை நூல்களை ஆதாரங்காட்டி சக்தி உபாஸனை மார்க்கங்களையும் விஷ்ணுத்வேஷக் கருத்துக்களையும் பரப்பி வருகின்றன.

பெண்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும்.பெண்களை குஷிப்படுத்துவதற்காகவும் "பெண்ணைப் பெருமைப்படுத்த ஏற்பட்டதே நவராத்ரி விழா" என்றும்,பெண்னை தெய்வ நிலைக்கு உயர்த்துவதே சக்தி உபாஸனாமார்க்கம்'' என்றும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்.

சக்தி உபாஸனா மார்க்கத்தை ஆழமாக சிந்தித்து உள்நுழைந்து பார்த்தால், இந்த உபாஸனை முறை உண்மையிலேயே பெண்ணைப் பெறாமைப்படுத்துகிறதா. அல்லது சிறுமைப்படுத்துகிறதா என்பது தெரியும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிர்வாண ஸ்த்ரீ பூஜை முதலானவை அடங்கிய அநாசாரமதம் என்றும், வேதமார்க்கத்துக்குப் புறம்பானது என்றும் நல்லோர்களால் ஒதுக்கப்பட்ட சாக்தமத விஷயங்களை 'பெண்களுக்குப் பெருமை சேர்க்கிறோம் என்ற பெயரில் பக்கம்பக்கமாக எழுதியும், அம்மஹான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷ்ணுபரத்வத்திற்கு முரணாக எழுதியும் மக்களை ஏமாற்றி வருகின்றன இப்பத்திரிகைகள்.இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்கள் விழிப்புடன்
இருப்பார்களாக!

இதன் தொடர்ச்சியாக ஸுதர்சனர்(ஶ்ரீ S.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்-இவர் ஸுதர்சனர் பதில்கள் என பத்திரிக்கை நடத்தியவர்,ஆதலால் இவர் ஸுதர்சனர் என்றே குறிப்பிடப்படுகிறார்)  எழுதிய “நம்நாட்டில் சாக்த மதத்தின் வளர்ச்சி” எனும் தலைப்பில் அமைந்த கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதையும் கீழே தருகிறேன்,
நம்நாட்டில் சாக்த மதத்தின் வளர்ச்சி
[ஸுதர்சனர்]:
வேதங்களிலும் உபனிஷத்துக்களிலும் 'துர்க்கை' என்னும் தெய்வம் காணப்படுகிறது. ஆனால் அதற்குப் பரம் பொருளுக்குரிய எப்பெருமையும் சொல்லப்படவில்லை.
ஸ்ரீராமாயணம் மஹாபாரதம் என்னும் பழம்பெரும் இதிஹாஸங்களிலும் இந்நிலையே காணப்படுகிறது. ஸாத்விக புராணங்களான ஸ்ரீவிஷ்ணுபுராணம், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றில் பகவான் விஷ்ணு தன் யோகமாயையை யசோதைக்குப் பெண்ணாகப் பிறக்கும்படி நியமித்ததாகவும், மக்கள் அவளுக்கு பலி கொடுத்து வழிபடுவார்கள் என்று வரம் கொடுத்ததாகவும் உள்ளது.

பழமைபெற்ற பதினெட்டு மஹாபுராணங்களிலும், ராஜஸதாமஸ புராணங்களில் முறையே பிரமனுக்கும் சிவனுக்கும் பெருமை சொல்லப்பட்டதேயொழிய சிவ பத்னியான காளிக்குப் பெருமை சொல்லும் புராணம் எதுவுமில்லை. காளிதாஸன் முதலான பழைய வடமொழிக் கவிஞர்களின் காவியங் களிலும் இந்நிலையே உள்ளது.
தமிழ் நூல்களில் மிகப் பழைய சங்க இலக்கியங்களில் திருமால் ஒருவனுக்கே பரம் பொருள் எனும் பெருமை சொல்லப்பட்டது. துர்க்கை 'காடுகாள்' எனும் பெயரில் சுடுகாட்டைக் காக்கும் தெய்வமாகவே சங்க நூல்களில் குறிப்பிடப்படுகிறாள். மூன்று மதாசார்யர்களின் நூல்களிலும், பழந்தமிழ்க் காவியங்களிலும் துர்க்கைக்கு எங்கும் பரத்வம் சொல்லப்படவில்லை.

நாயன்மார்களும், ராமாநுஜ மத்வர்களுக்குப் பிறகு தோன்றிய சைவ சித்தாந்திகளும் சிவனுக்குப் பரத்வம் கூறினார்களேயொழிய, சிவபத்னிக்குப் பரத்வம் கூறவில்லை. அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மாமுனிகள், வேதபாஷ்யம் செய்த ஸாயணர் பட்ட பாஸ்கரர் காலம் வரையில் இந்நிலையே நீடித்தது.

சுமார் ஐந்நூறு வருடங்களுக்குள்ளாகவே தேவிபாகவதம், ஸௌந்தர்ய லஹரி முதலான நூல்கள் கற்பிக்கப்பட்டன. அப்பய தீக்ஷிதர் காலம் வரையில் அத்வைதிகள் சிலர் சிவபரத்வம் கூறினார்களேயொழிய இந்த சாக்த நூல்களைக் கொண்டு சக்தி பரத்வம் கூறவில்லை. அவருக்குப் பிற்பட்ட காலத்திலேயே அத்வைதிகளில் பலர் சாக்தர்களாக மாறினார்கள் என்பது வரலாறு காட்டும் மறுக்கமுடியாத உண்மை.

இந்தக் கட்டுரைகள், பெண் தெய்வத்திற்கு கடவுள் தன்மை இல்லை என்பதையும், அப்படி வணங்கப்படும் பெண் தெய்வங்களால் ஆத்ம உய்விற்கு வழியில்லை என்பதையும்,முக்தி நிலைக்கு வழிகாட்டாது என்பதையும்,மோட்சத்திற்கு அவை இட்டுச் செல்வதில்லை என்பதையும் ஆணித்தரமாக விளக்குகின்றன. இக்கட்டுரைகள்,சனாதனத்தில் பெண் கடவுளர்களாக போற்றப்படவில்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
ஆணாதிக்கத்தின் உச்சம் சனாதனம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
இதுதான் நாம் இன்றுவரைப் பழகிவந்த ஆணாதிக்க ஆன்மீகம் மற்றும் பக்தி மார்க்கம்,ஞான மார்க்கம் வழிகாட்டும் சனாதன நெறி. இந்த சனாதன ஆபத்தைப் புரிந்து கொள்ளாத வரை அதிலிருந்து மீள்வது சுலபம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக