செவ்வாய், 31 அக்டோபர், 2023

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்!

மின்னம்பலம்  :  திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
2014 – 2018 காலகட்டத்தில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் ரூ.118 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பிருப்பதாகவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து 2021-ஆம் ஆண்டு ஆந்திர மாநில சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் செப்டம்பர் 9-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்தனர்.

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஜாமீன் கேட்டு ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில் மருத்துவ காரணங்களுக்காக நான்கு வாரங்களுக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி மல்லிகார்ஜூன ராவ் இன்று (அக்டோபர் 31) உத்தரவிட்டார்.

சந்திரபாபு நாயுடு சிறைக்கு வெளியில் இருக்கும் போது தன் மீதான வழக்கில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அச்சுறுத்துவது, வாக்குறுதி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து ராஜமுந்திரி சிறையிலிருந்து சந்திரபாபு நாடு விடுவிக்கப்பட்டார். சிறைக்கு முன்பாக திரண்டிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் சந்திரபாபு நாயுடுவை வரவேற்றனர்.

சிறையிலிருந்து வெளியே வந்ததும் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசியபோது, “எனக்கு சோதனை வரும்போது ஆந்திர மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள். எனக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். என் மீது அன்பு காட்டும் ஆந்திர மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் நான் மறக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக