ஞாயிறு, 1 அக்டோபர், 2023

குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து:8 பேர் உயிரிழப்பு

தினமலர் : குன்னூர்: குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைபாதையில சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம், கடையம் தாலுகாவை சேர்ந்த, 54 பேர் ஊட்டிக்கு, பஸ்சில் சுற்றுலா வந்து, நேற்று மாலை குன்னுார் வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். டிரைவர் முத்துபாண்டி 60, பஸ்சை ஓட்டி சென்றார்.
குன்னுார் மேட்டுப்பாளையம் மலைபாதையில் மரப்பாலம் அருகே, 5:30 மணிக்கு பஸ் செல்லும் போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது. அங்கிருந்த மரம் பஸ் பள்ளத்தில் உருளாமல் தடுத்தது.
தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர், போலீசார், தனியார் டிரைவர்கள், பஸ்சில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு, கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். 10க்கும் மேற்பட்ட,108 ஆம்புலென்ஸ் வாகனங்களில், குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், 5 பெண்கள் உட்பட, 8 பேர், இரவு, 9:00 மணி வரை உயிரிழந்தனர்.

பஸ்சில் பயணம் மேற்கொண்ட அனைவரும் காயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு, பஸ்சிற்குள் சிக்கிய, 54 பேரும் மீட்கப்பட்டனர். காயமடைந்த 40 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .அவர்கள் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கேரளா மாநிலம் குருவாயூர் சென்று விட்டு, ஊட்டிக்கு வந்து திரும்பும் போது இந்த கோர விபத்து நடந்ததுள்ளது.சம்பவம் நடந்த பகுதியை, நீலகிரி கலெக்டர் அருணா; எஸ்.பி., பிரபாகர் ஆகியோர் பார்வையிட்டனர்.

உயிரிழந்தவர்களின் விபரம்
கடையம் தாலுகாவில், பிரகாசபுரத்தை சேர்ந்த நிதீன்,15, ராமாத்தி சாலை பகுதியை சேர்ந்த தேவிகலா,36, ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த முருகேசன், 65, முப்பிடாத்தி, 67, சி.எஸ்.ஐ., சர்ச் தெருவை சேர்ந்த கவுசல்யா,25, இளங்கோ,64, ஜெயா, 50, தங்கம்,40, ஆகியோர் விபத்தில் பலியாகினர்.

குன்னுார் அருகே பஸ் விபத்து இறந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் உறவினர் தொடர்பு கொள்ள அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம்,குன்னுார் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் சுற்றுலா பயணிகளை , சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மாவட்ட கலெக்டர் அருணா, எஸ்.பி., பிரபாகரன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், '' பஸ்சில் வந்த சுற்றுலா பயணிகளில், 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் கோவை மருத்துவமனையிலும், இருவர் ஊட்டி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் குன்னுாரில், சிகிச்சை பெறுகின்றனர். பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்துள்ளது,'' என்றார். மாவட்ட கலெக்டர் அருணா கூறுகையில்,'' காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அவசர கால எண், 1077, அல்லது 0423--2450034 எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்,''என்றார்.


விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்தெரிவித்துள்ளார். மேலும் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியும், காயமடைந்தோருக்கு ரூ. 1 லட்சம் நிதியும், லேசான காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக