சனி, 30 செப்டம்பர், 2023

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கடைசி தேதி நீட்டிப்பு: ஆர்.பி.ஐ.

 மாலை மலர் : பல்வேறு காரணங்களால் மத்திய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் புழக்கத்தில் இருந்த '500 ரூபாய்' மற்றும் '1000 ரூபாய்' நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட 2016 நவம்பர் மாதமே, மத்திய ரிசர்வ் வங்கியால் '2000 ரூபாய்' நோட்டுக்கள் புதியதாக புழக்கத்தில் விடப்பட்டன.
அந்த புதிய நோட்டுக்களை அச்சிடும் பணியும் 2018-19 காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புழக்கத்தில் உள்ள '2000 ரூபாய்' நோட்டுக்களை திரும்ப பெற்று கொள்ள போவதாக கடந்த மே 10 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்கு இறுதி நாளாக செப்டம்பர் 30 வரை காலக்கெடு வைத்திருந்தது.


இதனையடுத்து, இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் அனைவரும் வங்கிகளில் இதனை செலுத்தி ஈடாக வேறு மதிப்பில் ரூபாய் நோட்டுக்களை பெற்று கொள்ள தொடங்கினர். சுமார் 4 மாதத்திற்கும் மேலாக கால அவகாசம் இருந்ததால் வங்கிகளில் முண்டியடித்து கொள்ளாமல் மக்கள் அன்றாட வங்கி அலுவல்களிலேயே இந்த பரிமாற்றத்திற்கு ஒத்துழைத்தனர்.

நாட்டில் இருந்த 93 சதவித '2000 ரூபாய்' நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதாக மத்திய ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் 1 அன்று அறிவித்தது.

இந்நிலையில், இன்றுடன் காலக்கெடு நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த காலக்கெடுவை சற்று நீட்டித்து மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி, வரும் அக்டோபர் 7 வரை '2000 ரூபாய்' நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளவோ அல்லது தங்களது வங்கி கணக்கில் செலுத்தவோ அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7-க்கு பிறகும் கூட மத்திய ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.பி.ஐ. விதித்த இந்த 'ரூபாய் நோட்டு தடை'க்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொது நல மனு, கடந்த ஜூலை 3 அன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக