ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

சனாதனம் - உதயநிதி பேச்சு: கொந்தளித்த அமித் ஷா - இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுத்தாரா? BBC

 bbc.com :  முருகேஷ் மாடக்கண்ணு :  சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
அதில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி தொல். திருமாவளவன் உட்பட பலர் கொண்டனர்.
மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாக உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி போலிஸில் புகார் அளித்துள்ளார்.



மேலும், இந்து மகாசபை உட்படப் பல்வேறு மத அமைப்புகளும் பாஜக போன்ற அரசியல் கட்சிகளும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
சனாதன ஒழிப்பு மாநாட்டில் நேற்று வாழ்த்துரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்.

சனாதனம் அப்படிங்கிற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. சனாதனம், சமத்துவத்துக்கும் – சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்.

ராஜ்பவனில் இருந்து அடிக்கடி சனாதனம், சனாதனம் என்ற குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. நாம இந்த நிலையில இருக்கும்போது கூட, பள்ளிகளில் காலை உணவு போடுவதால், பள்ளியின் கழிவறை நிரம்பி வழிவதாக ஒரு செய்தித்தாளில் செய்தி வெளியிடுகிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் , உடனே ட்விட்டர்ல ஒரு பதிவு போட்டார். நிலாவுக்கு சந்திரயானை ஏவும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படி செய்தி போடுகிறது என்றால், 100 ஆண்டுகளுக்கு முன்பு என்ன ஆட்டம் ஆடியிருக்கும் எனக் கேட்டார்.

இங்கே கூடி இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். தொடக்கத்தில் கலைகளும், எழுத்துகளும் சனாதனக் கருத்துகளை திணிக்கத்தான் பயன்படுத்தப்பட்டன. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் தோன்றிய பிறகுதான் கலையும், எழுத்தும் உழைக்கிற மக்களுக்கானதாக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதாக மாறியது. அதற்கு முன்பு இங்கே ராமாயணமும், மகாபாரதமும் தான் மக்களுக்கு கலையாகவும், எழுத்தாகவும் சொல்லப்பட்டன.

பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி உடன்கட்டை ஏற வைத்தது. கைம்பெண்களுக்கு மொட்டையடித்து வெள்ளைப் புடவை உடுத்தே சொன்னது. குழந்தைத் திருமணங்களை நடத்த்தி வைத்தது. இதைத் தானே பெண்களுக்கு சனாதனம் செய்தது.

ஆனால், பெண்களுக்கு திராவிடம் என்ன செய்தது என்று நினைத்துப் பாருங்கள். பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய்.

அண்ணா பிறந்த செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் வீடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போகிறது திராவிட மாடல் அரசு.

மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றுகிறது. ஆனால், ஒன்றிய அரசு நமது மக்களைப் பின்னோக்கித் தள்ளப் பார்க்கிறது. மணிப்பூர் மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாஜக ஆளும் மாநிலம் அது. சொந்த மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டிவிட்டுள்ளார்கள். இதுதான் சனாதனம்.

பொய்ச் செய்தி பரப்புவதும், கலவரத்தைத் தூண்டுவதும்தான் சனாதனம். நம் ஊரில் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று ஒரு பொய்யைப் பரப்பினார்கள். ஆனால், அதை நம்முடைய முதலமைச்சர் மிகச் சிறப்பாகக் கையாண்டார்.

பல்வேறு தொழில்களில் இருக்கும் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிப்பதாகச் சொல்லி ஒன்றிய அரசு விஸ்வகர்மா திட்டத்தைக் கொண்டு வருகிறது. ஆனால், அதில் ஒரு சதி இருக்கிறது. கைவினைக் கலைஞர்கள் குடும்பங்களில் இருக்கும் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் அந்தத் திட்டத்தில் பயிற்சி கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

இதைத்தான் குலக்கல்வி திட்டம் என்று 1953ஆம் ஆண்டு ராஜகோபாலச்சாரியார் இங்கே கொண்டு வந்தார். தந்தை பெரியார் அந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை அறிவித்தார். அதனால், ராஜகோபாலச்சாரியார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் நிலை வந்தது. பின்னர் முதலமைச்சரான காமராஜர் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அந்த காமராஜரின் பெயரில் இருக்கும் அரசங்கத்தில்தான் இன்று இந்த மாநாடு நடக்கிறது.

இந்த காமராஜர் அரங்கத்தில் இருந்து உறுதியாகச் சொல்கிறோம். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க கடுமையாக எதிர்க்கும். எப்படி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்த ராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினாரோ, அதேபோல் இந்த விஸ்வகர்மா திட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் நரேந்திர மோதி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும்,” என்று பேசியிருந்தார்.

இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்ட அமித் மால்வியா

உதயநிதியின் இந்தப் பேச்சை தனது X சமூக ஊடகத்தில்(முன்பு ட்விட்டர்) பகிர்ந்த பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் திமுக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை மலேரியாவுடனும் டெங்கு உடனும் தொடர்புபடுத்திப் பேசுகிறார்.

அதை வெறுமனே எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும் என்பது அவர் கருத்து. சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய உறுப்பினராகவும் காங்கிரஸின் நீண்ட கால கூட்டாளியாகவும் திமுக உள்ளது. இதுதான் மும்பை சந்திப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பொய்ச் செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் - உதயநிதி

இதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களைப் படுகொலை செய்ய வேண்டும் என்று நான் கூறவே இல்லை. மதத்தின், சாதியின் பெயரால் சனாதன தர்மம் மக்களைப் பிளவுபடுத்தியுள்ளது.

சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன்.

நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்,” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனத்தை வெளிப்படுத்தத் தொடங்கின. இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி, "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் கருத்து அவரது குறுகிய மனப்பான்மையையும் இந்தியா(I.N.D.I.A) கூட்டணிக் கட்சிகளின் புனிதமற்ற கூட்டணியையும் காட்டுகிறது," என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுடன் இந்தியா கூட்டணி சண்டையிடவில்லை, அவர்கள் சனாதன தர்மத்துடன் போராடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக, “கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் வருவதற்கு முன்பே சனாதன தர்மம் என்ற வார்த்தை இருந்தது. 'சனாதன தர்மம்' என்றால் நித்திய, காலமற்ற தர்மம். சனாதன தர்மம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

நேற்று உதயநிதி பேசியது நாட்டின் 142 கோடி மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். ஏனென்றால் நேற்று ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பு வெளிப்பட்டது. ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை அழிப்பது என்பது இனப்படுகொலைதான். சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தனது சமூக ஊடக பக்கத்தில், “உதயநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள், உங்கள் தந்தை, அல்லது உங்கள் லட்சியவாதிகள் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து பெற்ற திட்டங்களைக் கொண்டுள்ளீர்கள்.

அந்த மிஷனரிகளின் எண்ணம் உங்களைப் போன்றவர்கள் தங்களின் தீ சித்தாந்தத்தை வளர்க்க வேண்டும் என்பதே. தமிழகம் ஆன்மீக பூமி. நீங்கள் செய்யவேண்டியது, இதுபோன்ற நிகழ்வில் மைக்கை பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான்,” என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார்

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் டெல்லி காவல் ஆணையர், வடகிழக்கு துணை காவல் ஆணையர், சைபர் செல் ஆகியவற்றில் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி முகமைக்குப் பேட்டியளித்த வினீத் ஜிண்டால், “இது 'சனாதன தர்மத்திற்கு' எதிரான உணர்வைத் தூண்டும் பேச்சு.

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரியுள்ளோம். இதுபோன்ற நபர்களுக்கு சரியான இடம் சிறைதான். அவரை சிறைக்கு அனுப்ப எங்களால் முடிந்ததைச் செய்வோம்,” எனக் கூறினார்.

சனாதனத்தை இழிவுப்படுத்தும் இந்தியா கூட்டணி - அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, “கடந்த இரண்டு நாட்களாக சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி இழிவுப்படுத்தி வருகிறது. வாக்கு அரசியலுக்காக சனாதன தர்மத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர்கள் இவ்வாறு பேசுவது முதன்முறையல்ல,” என்று விமர்சித்தார்.

“இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களின் திட்டம் தொடர்பாக மூன்று நாட்களுக்கு முன்பு மும்பையில் கூடிய நிலையில் இதுபோன்ற கருத்தை உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அரசியல் திட்டமா?” என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

இதேபோல் இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் தொடர்புப்படுத்தி கருத்துகளை தெரிவித்தனர்.

திமுக ஒரு புற்றுநோய் - நாராயணன் திருப்பதி
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இது குறித்துப் பேசும்போது, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வைத்துள்ள ஒரு நம்பிக்கையை கேவலமாகப் பேசுவது கொடுமையான செயல் என்று கூறினார்.

"திமுகவினர் இதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். நாங்களும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என்பதற்காக திமுகவினர் இவ்வாறு பேசுகின்றனர்.

சனாதன தர்மத்தை கொசு என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். திமுக என்பது ஒரு புற்றுநோய். அந்த புற்றுநோயை பாஜக கண்டிப்பாக ஒழிக்கும்," என்று தெரிவித்தார் நாராயணன் திருப்பதி.

உதயநிதி பேச்சு கூட்டணியை பாதிக்குமா?

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு திமுகவின் கொள்கைகள் என்ன என்று தெரியும். ஆகவே உதயநிதியின் பேச்சு கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார் திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ். பாரதி.

"அண்ணா, கலைஞர் பேசி வந்ததைத்தான் உதயநிதியும் பேசுகிறார். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. மக்களிடம் ஆதரவு உள்ளது. இதைக் கண்டு பாஜக பயப்படுகிறது. எனவே இத்தகைய செயலில் ஈடுபடுகிறது," என்றார்.

தமிழ்நாடு குறித்தும் திராவிட இயக்கங்கள் குறித்தும் அறிந்தவர்கள் இந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார் மூத்த ஊடகவியலாளர் ப்ரியன்.

“திமுக இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக சனாதன எதிர்ப்பு குறித்துப் பேசி வருகிறது. சனாதன எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. சமீப காலமாக ஆளுநரின் செயல்பாடுகள் திமுகவை சனாதனம் குறித்து மேலும் தீவிரமாகப் பேச வைத்துள்ளது.

சனாதனத்தின் உச்சகட்டம் வள்ளலார் என்று ஆளுநர் பேசியது, ஒரு நாளிதழில் காலை உணவுத் திட்டம் குறித்து இழிவாகக் குறிப்பிட்டது ஆகியவற்றை வைத்துதான் உதயநிதி பேசியுள்ளார்.

தமிழ்நாடு சார்ந்து உதயநிதி பேசியுள்ளார். இதை இந்திய அளவிலான பிரச்னையைப் போன்று காட்ட பாஜக முயல்கிறது. ஆனால், உதயநிதியின் பேச்சு கூட்டணியைப் பாதிக்காது, எந்தப் பிளவையும் ஏற்படுத்தாது.

அமித் மால்வியா போன்றவர்கள் சமூக ஊடகத்தில் இந்த விவகாரத்தை பெரிய பிரச்னை போன்று ஊதிப் பெருசாக்க முயன்றாலும் அதனால் பெரிய தாக்கம் இருக்காது,” என்றார்.

அன்று அண்ணா சொன்னது இன்றும் பொருந்தும் - தராசு ஷ்யாம்

மூத்த ஊடகவியலாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், “கட்சிகளுக்கு என்று தனித்தனி கொள்கைகள் இருக்கத்தான் செய்யும். ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக காங்கிரஸ், திமுக இடையே வேறுவேறு கருத்துகள் உள்ளன. ஆனாலும் கூட்டணியில் பிரச்னை இல்லையே.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதிலும் பாஜக, அதிமுக இடையே வெவ்வேறு கொள்கைகள் உள்ளன. அதனால், உதயநிதியின் பேச்சு இந்தியா கூட்டணியின் மொத்த கருத்தாக எப்படி மாறும்? அவரின் கருத்தால் கூட்டணி பலவீனமாகிவிடும் என நான் கருதவில்லை. இது சித்தாந்த மோதலாக மட்டுமே இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “1967இல் அண்ணாவின் கூட்டணியில் சுதந்திரக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை இடம் பிடித்திருந்தன. தமிழ் தேசியம் பேசிய சி.ப.ஆதித்தனாரும் அண்ணா கூட்டணியில் இடம்பெற்றிருந்தார். இது முரணான கூட்டணியாகப் பார்க்கப்பட்டது.

இது குறித்து அண்ணாவிடம் கேட்கப்பட்டபோது, 'என் வீட்டில் ஒரு பாம்பு வந்துவிட்டால் அதை அடிக்க தடியைத் தேடுவேன். பாம்பை அடிப்பதுதான் நோக்கம், அதை அடிக்கப் பயன்படும் தடி சுதந்திர தடியா, கம்யூனிஸ்ட் தடியா என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்' என்றார்.

அதேபோல், தற்போது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதான நோக்கமாக உள்ளது. அந்த வகையில் அண்ணா சொன்னது இந்தியா கூட்டணிக்கும் பொருந்தும் ” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக