Annamalai Arulmozhi : தமிழ்நாட்டில் நாங்குநேரியில் பள்ளியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மறவர் ஜாதிச்சிறுவர்கள் சிலர் சேர்ந்து தங்கள் ஜாதிப்பெருமையை, தங்கள் வகுப்பில்
‘படிக்கும்’ ஒரு பட்டியல் சாதிச் சிறுவனின் உடம்பில் அரிவாளைக்கொண்டு எழுதியிருக்கிறார்கள். அந்தச்சிறுவனின் தங்கை தடுக்கவந்ததால் அந்தச்சிறுமியையும் வெட்டியிருக்கிறார்கள். இந்தக்கொடுமையைக் கண்ட அவர்களின் உறவினர் ஒருவர் மாரடைப்பால் இறந்து விட்டார்.
சத்துணவுப் பணியாளரான தாயின் வளர்ப்பில் அண்ணனும் தங்கையும் நன்றாகப் படித்து வருகிறார்கள் என்பதே பலரை பொறாமைப்பட வைக்கும். உடன்படிக்கும் மாணவன் மீது அன்பும் நட்பும் கொள்ள வேண்டிய பள்ளிச் சிறுவர்கள் மனதில் ஜாதித் திமிரையும், வசதி வாய்ப்பு இல்லாத, அதிலும் சாதியால் எளியவர்களை வதைக்கும் கொடுமனத்தையும் உருவாக்குபவர்களே இவ்வழக்கின் முதல் குற்றவாளிகளாக வேண்டும்.
கொலைமுயற்சி மற்றும் சாதி வன்கொடுமைகள் என குற்றம் தொடர்பான அனைத்துப் பிரிவுகளிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள அந்த மாணவர்களை சீர்திருத்த வேண்டிய பள்ளிகள் எப்படி இருக்கின்றன? ஜாதிப் பெருமையும் ஆணவமும் பொங்கி வழியும் இச்சிறுவர்களை திருத்துவதற்கேற்ற அதிகாரிகளைக் கல்வித்துறை கொண்டுள்ளதா ? என்ற கேள்வியும் இருக்கிறது.
தன் பிள்ளைகள் படித்து, பொறுப்புடன் வளர்ந்து நிமிர்ந்து நிற்பார்கள் என்ற அந்தத் தாயின் நம்பிக்கையை பதறடித்திருக்கும் இக்கொடுஞ்செயலுக்கு உரிய தண்டனையை வழங்க, காவல்துறையும் நீதிமன்றமும் சரியானமுறையில் எடுக்கும் நடவடிக்கையும் அளிக்கும் தீர்ப்பும் மட்டுமே மீட்டுத்தரும்.
தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். அந்தத் தம்பியை ஒரு அண்ணனாக நான் படிக்க வைப்பேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பது அக்குடும்பத்திற்கு நம்பிக்கை ஊட்டும்.
பள்ளி மாணவர்களுக்கு சமூக அறிவியலை போதிக்கவும் அதிகமான நூலக வகுப்புகளை அறிமுகப்படுத்தியும் வீட்டிலும் வீதியிலும் ஊரிலும் அந்த மனங்களில் ஏற்றப்படும் சாதி நஞ்சினை பள்ளிக் கூடங்களின் அணுகுமுறையால் முறியடிக்கவும் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய கூடுதலான பொறுப்பு அமைச்சரிடம் இருக்கிறது. அதனை நிறைவேற்ற அனைவரும் துணைநிற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக