புதன், 23 ஆகஸ்ட், 2023

மத்திய பிரதேச தேர்தல் ரூ. 500-க்கு எல்.பி.ஜி. சிலிண்டர்.. காங்கிரஸ்.. கார்கே அதிரடி..

 மாலை மலர்  :   ரூ. 500-க்கு எல்.பி.ஜி. சிலிண்டர்.. பெண் வாக்காளர்களை குறிவைக்கும் காங்கிரஸ்.. கார்கே அதிரடி..!
இந்தியாவின் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
2018-ல் இங்குள்ள சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை வென்று, கமல் நாத் தலைமையில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.விற்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
ஆனால், மார்ச் 2020ல், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கமல்நாத் அரசை எதிர்த்து தனது அணியுடன் பா.ஜ.க.வை ஆதரித்ததால், பா.ஜ.க. அரசு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. தற்போது அங்கு அவர் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ம.பி.யில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருக்கிறது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இங்கு கடுமையாக போட்டி போடுகின்றன.

மத்திய பிரதேச பண்டல்கண்ட் பகுதியில் 6 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சாகர் எனும் பகுதியில், ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு இப்போதுதான் கார்கே முதல்முறையாக மத்திய பிரதேசத்திற்கு வந்திருக்கிறார். கார்கேயின் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இப்பின்னணியில் அவர் உரையில் மக்களுக்கு அக்கட்சி சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

எதிர்பார்த்ததை போலவே வாக்காளர்களை ஈர்க்கும் பல சலுகைகளை அவரது உரையில் உறுதியளித்தார். அதன்படி, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ.500-க்கு வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். முதல் 100 யூனிட்டுகள் வரை நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும், என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் நெருங்கும் போது இரு கட்சிகளின் சலுகைகளும் முழுவதுமாக தெரிய வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக