வியாழன், 20 ஜூலை, 2023

மறைந்த கேரள முன்னாள் முதல்வர் திரு உம்மன் சாண்டி அவர்களின் வரலாறு

தினமலர்  : மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, 2016ல் முதல்வராக இருந்த போதுஜி.வி.ரமேஷ் குமார் எழுதி தாமரை பிரதர்ஸ் மீடியா (பி) லிட் வெளியிட்ட 'OC என்ற CM' என்ற புத்தகத்தில் இருந்து அவரது எளிமை வாழ்வின் சில பகுதிகள்...
அப்பாவை பார்க்க காத்திருக்கும் மகன்
கேரளாவில் எந்த சிறு பிரச்னை என்றாலும் பந்த் அறிவித்து விடுவார்கள்.
ஆனால் மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் பந்த் போன்ற போராட்டங்களுக்கு உம்மன் சாண்டி எதிரி என்றாலும், 2006--2011 அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, இரண்டு முறை பந்த் நடத்தினார்.
ஆனால் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 14 முறை பந்த் நடத்தியது.
இந்த பந்தால், எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றார் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன். அன்று தான் அப்பாவை பார்க்க முடியுமாம். 'பந்த்' நடக்கும் போது தான், உம்மன் சாண்டி முழுமையாக வெளியே எங்கும் போகாமல் வீட்டில் இருப்பார்.

அவருக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தை, மூன்று பேர் பிறக்கும் போதும், பக்கத்தில் கணவர் இருக்கவில்லை என்பது மனைவி மரியாம்மாவின் மாறாத வருத்தம். ஒரு குழந்தை பிறக்கும் போது, கட்சிக்கூட்டம் என்று போய் விட்டார். இன்னொரு குழந்தை பிறக்கும் போது கட்சி கூட்டத்திற்கு போய் விட்டு வந்து வீட்டில் துாங்கி கொண்டிருந்தாராம்..

மகன் சாண்டி உம்மனை முழுமையாக பார்த்தது, அவரது மூன்று வயதில், ஒரு பந்த் நாளில்! அது மகனுக்கு பசுமையான நினைவாக இன்றும் இருக்கிறது.

பின் இருக்கையில் ஒரு குட்டி துாக்கம்

நாட்டிலேயே அனேகமாக விமானத்தில், 'எக்கானமி' வகுப்பில் பயணம் செய்யும் ஒரே முதல்வர், உம்மன் சாண்டியாக தான் இருப்பார். விமானம் ஏறியதும் துாங்கி விடுவார்; ஒருமுறை டில்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை அருகே ஒரு பெண்ணிற்கும், குழந்தைக்கும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த பெண் கேட்டுக்கொண்டதால், உம்மன் சாண்டியை பின் வரிசை இருக்கையில் சென்று அமருமாறு விமானப்பணிப்பெண் கேட்டுக் கொண்டார்.

உம்மன்சாண்டியும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பின்னால் சென்று விட்டார். ஆனால் இதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாத பயணி ஒருவர் 'நீங்கள் ஒரு மாநிலத்தின் முதல்வரை பின் இருக்கையில் போய் அமர கட்டளையிடுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்' என்று ஆவேசமானார்.

பதறிப்போன பணிப்பெண் மன்னிப்பு கேட்க, பின் வரிசை இருக்கைக்கு சென்றார். அங்கு உம்மன் சாண்டி நிம்மதியாக துாங்கி கொண்டு இருந்தார்.

அரசுக்கு சொந்தமான இன்னொவா காரில் பயணம் செய்வார். கட்சிக்காரர்களை எல்லாம் காரில் ஏற்றி செல்வார். ஒரே ஒரு போலீஸ் வாகனம் மட்டும் முன்பாக செல்லும். முதல்வர் செல்கிறார் என்பதற்காக பிற வாகன போக்குவரத்தை நிறுத்துவது இல்லை.

மனைவியின் கடிதம்

உம்மன்சாண்டி அமைச்சராக இருந்த போது, 1977 மே 30ல் திருமணம் நடந்தது. மாலை வரை அரசு அதிகாரிகளின் கூட்டம் நடத்தி விட்டு, இரவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். எப்போதும் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து, காலையில் கிளம்பி விடும் வழக்கம் உடையவர்.

முதல்வரான உடன் அரசு இல்லத்திற்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள சமையல்காரரை மாற்றி விட்டு, தங்கள் வசதிக்கு ஒருவரை நியமிக்க, கணவருடன் கேட்க பல நாட்கள் முயற்சித்தார் மனைவி. நள்ளிரவு வீட்டிற்கு வந்து, அதிகாலையில் கட்சியினர், அதிகாரிகள் சூழ வெளியே செல்லும் சாண்டியிடம் இதைக்கூறவே முடியவில்லை. ஒரு மாதம் வரை பொறுத்து பார்த்தார் மனைவி. பின்னர், முதல்வரிடம் மக்கள் அளிக்கும் மனுவோடு தன் கோரிக்கை மனுவையும் அனுப்பி வைத்தார்.

அதில் 'மதிப்பிற்குரிய மாநில முதல்வருக்கு... என் கணவர் மாநில முதல்வர்; எங்களது அரசு வீட்டின் சமையல்காரரை மாற்றித்தர வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார். மனுக்களோடு மனுவாக வந்த, இந்த மனுவை பார்த்து நடவடிக்கை எடுத்தார் உம்மன்சாண்டி.

'ஓசி'யானது எப்படி

உம்மன் சாண்டி என்ற பெயரில் கேரளாவில் இன்னொருவர் இல்லை. இவர் எம்.எல்.ஏ., ஆக இருந்தாலும், முதல்வராக இருந்தாலும் சொந்த ஊரான புதுப்பள்ளியில், பொதுமக்கள் குஞ்குஞ்சு என்று தான் அழைக்கிறார்கள். மனைவியும் இப்படித்தான் அழைக்கிறார். இதற்கு குழந்தை என்று அர்த்தம். இவரது பெற்றோரிட்ட பெயர் சண்ணி; இவரே சிறு வயதில் குஞ்குஞ்சு என செல்லப்பெயராக மாற்றிக்கொண்டார்.

அரசியலில் அதிகாரபூர்வப்பெயர் உம்மன் சாண்டியை (Oommen chandy) ஓ.சி., (O.C) என்று சுருக்கி அழைக்கின்றனர். சி.எம்.. என அழைப்பவர் சிலர் தான், மற்றபடி எங்கும் ஓ.சி., தான்.

மாணவர் காங்கிரஸ் நிர்வாகியாக இருக்கும் போது, மாணவர் ஒருவர் கல்லுாரி கட்டணம் செலுத்த அன்று 30 ரூபாய் தேவைப்பட்டது. கையில் மோதிரமும், கழுத்தில் தங்க செயினும் அணிந்திருந்த உம்மன் சாண்டி மோதிரத்தை அடகு வைத்து மாணவனுக்கு பணம் தந்தார். அதனை மீட்க முடியாமல் மோதிரம் போனது.

இதனை அறிந்த, கண்டிப்பு குணம் நிறைந்த தாய் இவரை அழைத்தார். அவர் கோபம் அடைவார் என தயங்கியபடி சென்றார். தாய் எதுவும் பேசவில்லை. கழுத்தில் கிடந்த செயினை மட்டும் வாங்கி விட்டு அனுப்பி வைத்தார்.

இந்தியாவின் சாதனை எம்.எல்.ஏ.,

அரசியலில் நீண்ட அனுபவம் பெற்றவர் உம்மன் சாண்டி, 79. இரண்டு முறை முதல்வர், 53 ஆண்டுகள் எம்.எல்.ஏ., ஐந்து முறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

* 1943 அக்.31: கேரளாவின் கோட்டயத்தில் உள்ள புதுப்பள்ளி கிராமத்தில் பிறந்தார்.

* பி.ஏ., சட்டப்படிப்பு முடித்தவர்.

* 1969: இளைஞர் காங்., தலைவரானார்.

* 1970: புதுப்பள்ளி தொகுதியில் முதன்முறையாக எம்.எல்.ஏ.,யாக தேர்வு. தொடர்ந்து 12 முறை இத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.

* 1977 - 78: தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

* 1981 - 82: உள்துறை அமைச்சர்

* 1991 - 94: நிதித்துறை அமைச்சர்

* 2004 - 2006: முதன்முறை கேரள முதல்வர்

* 2000 - 2011: எதிர்க்கட்சி தலைவர்

* 2011 - 2016: இரண்டாவது முறை கேரள முதல்வர்

* 2022 ஆக.2: இந்தியாவின் நீண்டகால எம்.எல்.ஏ., (18,728 நாள்) சாதனை

* 2023 ஜூலை 18: கேன்சர் பாதிப்பால் காலமானார்

* வாரம் ஒருமுறை தனது 'புதுப்பள்ளி' தொகுதி மக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

* பஸ், ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்.

*2013ல் ஐ.நா., சபையின் பொது சேவை விருது வழங்கப்பட்டது.

* அலைபேசி பயன்படுத்தியதில்லை. அருகில் இருப்பவர்களிடம் அல்லது தனி அதிகாரி, பாதுகாப்பு அதிகாரிகளின் அலைபேசியை பயன்படுத்துவார்.

1974ல் ஐந்து நிமிட தாமதத்தால் உயிர் தப்பிய உம்மன் சாண்டி

மூணாறு: ஐந்து நிமிடம் காலதாமதமானதால் மூணாறு அருகே 34 பேரை பலி வாங்கிய பஸ் விபத்தில் சிக்காமல் உம்மன்சாண்டி உயிர் தப்பினார்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி 79, உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை பெங்களூருவில் காலமானார். அவர் முதல்வராக இருந்தபோது மூணாறுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதையும், 2015ல் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.69 ஊதிய உயர்வு வழங்கியதையும் மறக்க இயலாது என்றபோதும் அவர் பஸ் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியதை மூத்த காங்கிரஸ் பிரமுகர்கள் நினைவு கூர்கின்றனர்.

மூணாறில் இருந்து கோட்டயம் நோக்கிச் சென்ற கேரள அரசு பஸ் 1974 மே 29ல் காலை 9:30 மணிக்கு மூணாறு அருகே கரடிப்பாறை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து 34 பேர் பலியாகினர். இந்த விபத்து கேரளாவை உலுக்கியபோதும் அன்று ஐந்து நிமிடம் காலதாமதத்தால் உம்மன்சாண்டி உயிர் தப்பிய தகவல் பலருக்கு தெரியாது.

1974 ல் இளைஞர் காங்கிரசில் இருந்த உம்மன்சாண்டி கே.எஸ்.யு. மாணவர் அமைப்பின் பயிற்சி முகாமில் பங்கேற்க 1974 மே 28ல் மூணாறுக்கு வந்தார். அன்று மாலை கோட்டயத்தில் இருந்து இடம்பெயர்ந்து காந்தலூரில் வசித்தவர்களை பார்க்க சென்றார். மறுநாள் காலை 9:00 மணிக்கு கேரள அரசு பஸ்சில் கோட்டயம் செல்ல திட்டமிட்டு வந்தவர் ஐந்து நிமிடத்திற்கு முன் பஸ் புறப்பட்டு சென்று விட்டதை அறிந்தார். அந்த பஸ் சென்ற அரை மணி நேரத்தில் விபத்தில் சிக்கி 34 பேர் பலியாயினர்.

அதனை அறிந்தவர் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்களுடன் மீட்பு பணியிலும் சித்திராபுரம் மருத்துவமனையிலும் நாள் முழுவதும் செலவிட்டு உதவிய பிறகு சொந்த ஊர் திரும்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக