Karthikeyan Fastura : மாமன்னன் படத்திற்காக பா.ரஞ்சித் நேர்மறையாக, நேரடியான வார்த்தைகளில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தினாலும் அதில் இல்லாத குறைகளை கண்டுபிடித்து உருட்டுவது யாரெனில் திமுக அரக்கர் குரூப்.
இவர்களுக்கு என்றுமே திமுகவையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பிரித்தே வைக்கவேண்டும்! .
மாமன்னன் படம் இரத்தினவேல் கதாபாத்திரம் மூலம் தெரியப்படுத்திய செய்தியும் அதே.
இணையத்தில் உழலும் இந்தமாதிரி இரத்தினவேல்கள் தான் ஆகப் பெரும் ஸ்பாய்லர்ஸ்.
மின்சாரகண்ணா படத்தில் மன்சூர் அலிகான்க்கு 3 அல்லக்கைகள் இருப்பார்கள்.
அவர்கள் செய்யும் சேட்டைகளெல்லாம் மன்சூர் அலிகான் கணக்கில் வரும்.
மன்சூர் ஒரு காட்சியில் புலம்புவார் " இவனுங்கள வச்சுக்கவும் முடியல விரட்டவும் முடியல" என்று. அது மாதிரி தான் இருக்கிறது திமுகவின் நிலை
இவங்களுக்கு மத்தியில் கட்சியை காப்பாற்றி இழுத்துச் சென்ற கலைஞர்,
இப்போது செல்லும் திமுக தலைமையை நினைத்தால் கஷ்டமாத்தான்யா இருக்கு.
இதற்காகவே கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என்று வாரிசுஅரசியல் தொடரட்டும் என்பதே என் நிலைப்பாடு.
உதயநிதிக்கு வந்திருக்கும் சமூகநீதியின்பால் உள்ள ஈர்ப்பும், பக்குவமும், அதனை சினிமா அல்லது வேறு ஏதேனும் ஊடகத்தின் வழியே கவனப்படுத்தும் முனைப்பும் பிற திமுக கழக பிரமுகர்களுக்கு, அவர்களின் வாரிசுகளுக்கு இருக்கிறதா என்றால் இல்லையே..
மனிதர்கள் தினமும் குளித்து புறத்தை சுத்தமாக வைத்திருப்பது போல அகத்தையும் தினமும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பார் புத்தர்.
அதற்கு நிறைய வாசிக்கவேண்டும், மக்களை உற்று நோக்க வேண்டும், பயணங்கள் மேற்கொள்ள வேண்டும், அங்கு படிப்பினைகளை கற்றுக் கொள்ளவேண்டும். ( இவ்வளவும் செய்தும் புத்தி வராத வறட்டு கூவைகளும் இருப்பார்கள்)
இணைய இரத்தினவேல்கள் கடைசியாக அகத்தை கழுவியது எப்போது என்று தேடினால்..பிம்பிளிக்கா பியாப்பி தான்.
Karthikeyan Fastura : திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய காலத்தில் அதனை பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்க்க சினிமா துறையும் நாடகத் துறையும் முக்கிய பங்காற்றின.
திரைத்துறையின் அத்தனை முக்கிய கலைஞர்களும் அண்ணாவின் பின் நின்றனர். எம் ஆர் ராதா, எம்ஜிஆர், சிவாஜி, கலைவாணர், எஸ் எஸ் ராஜேந்திரன் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டு இருப்பதை வரலாற்றில் காணலாம்.
அவர்கள் உருவாக்கிய அந்த திராவிட முற்போக்கு கலை பாரம்பரியம் என்பதுகளுக்கு பிறகு தேய ஆரம்பித்து இரண்டாயிரத்தை தொடும்போது முற்றிலுமாக கரைந்து விட்டது.
திரும்பவும் அது போன்ற திராவிட பாரம்பரியத்துடன் கூடிய முற்போக்கு சிந்தனை படங்கள் இப்பொழுது வெளிவர ஆரம்பித்து இருப்பது மிக மிக ஆரோக்கியமான அம்சம்.
சார்பட்டா பரம்பரை, நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் குறிப்பிடத்தக்க படங்கள்.
கதையில் மாமன்னன் சார்ந்து இருக்கும் கட்சி திமுக என்பதும், எதிர்க்கட்சி அதிமுக என்பதும் கட்சிக் கொடியிலிருந்து பெயர் வரை எல்லாவற்றிலும் காண்பித்து விட்டார்கள்.
மாமன்னன் கட்சியில் இருந்து கொண்டு அதன் அடிப்படைக் கொள்கைகள் புரியாமல் அதிகாரத்தின் மீது மோகம் கொண்டு இருக்கும் ஆதிக்கவாதிகளின் மீது விமர்சனம் வைக்கிறது.
அதேபோல சாதிய ஆதிக்கவாதிகளின் நோக்கம் அதிகாரம் மட்டுமே. அவர்களுக்கு கட்சியின் மீதும் பற்று கிடையாது,
தான் சார்ந்த சாதிகளின் முன்னேற்றத்தின் மீதும் அக்கறை கிடையாது என்பதையும் தெளிவாக காட்டுகிறது. இவர்களை கட்சியும் நிராகரிக்க வேண்டும், சாதிய வட்டத்திலிருந்து வெளிவந்து மக்களும் நிராகரிக்க வேண்டும் என்று தான் படம் கூறுகிறது.
கூடவே திமுக தலைமை சாதிரீதியான உட்கட்சி பூசலை, சமத்துவமின்மையை அறவே வெறுக்கின்றது என்பதை காட்சியாகவும், உதயநிதி ஸ்டாலின் வழியாக சொல்வதின் மூலமாகவும் இதனை அழுத்தம் திருத்தமாக பதிய வைக்கின்றது.
படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவானவை. இலவசபாடசாலையை அடித்து நொறுக்கும் காட்சியாக இருக்கட்டும், கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது கல்லெறிந்து கொள்ளும் காட்சியாக இருக்கட்டும், அந்த இடைவேளை காட்சியாக இருக்கட்டும், படத்தின் தேர்தல் காட்சியாக இருக்கட்டும், இறுதிக்காட்சியாக இருக்கட்டும் அனைத்தும் வெவ்வேறு உண்மை சம்பவங்கள் தான்.
இந்தப் படத்தின் கதை தான் கற்பனை, காட்சிகள் நிஜம்
இடைவேளைக் காட்சி இயக்குனர் மாரி செல்வராஜ்ஜுக்கு நேர்ந்த உண்மை சம்பவம். பரியேறும் பெருமாள் படம் வெளியாகி 15 நாளில் தனது தந்தையை பார்க்க சென்றவருக்கு அந்த ஊரில் உள்ள முக்கிய புள்ளிகள் கொடுத்த அனுபவம் அது. இதனை சில நேர்காணல்களில் அவரே குறிப்பிட்டு இருக்கிறார்.
படத்தில் நுணுக்கமாக நான் ரசித்த ஒரு விஷயம் என்னவென்றால் " பகத்தின் அண்ணன் கீர்த்தி சுரேஷின் இலவச பாடசாலையை போட்டியாக கருதி உடைப்பதை பகத் பாசில் கடுமையாக கண்டிப்பார்.
மூன்று இடங்களில் இதனை செய்திருப்பார். "எல்லாம் உன்னால.. வந்தது" என்று அழுத்தம் திருத்தமாக கண்டிப்பார் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக. ஆனால் அவரே சாதிய அடுக்கில் ஊறியவராய் உள்ளுக்குள் இருக்கும் அகம்பாவத்தை காட்டி பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வார்
இடைவேளை காட்சியில். பல திமுக முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் தங்களது சாதிய மேட்டிமைத்தன புத்தியால் அவசர குடுக்கைத்தனமாக பொது இடத்தில் எதையாவது செய்து அல்லது உளறி மாட்டிக் கொள்வதை பார்க்கிறோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் கூட "இன்று என்ன பிரச்சனை கொண்டு வருவார்களோ என்ற கவலையுடன் ஒவ்வொரு நாளும் எழுந்திருப்பதாக" கூறி இருக்கிறார்.
அந்த வகையில் இது ஒரு விஷுவல் பாடம்.
இடைவேளை காட்சி வரை அதிகாரத்துடன், சுயமரியாதை உடன் வலம் வந்த பகத் எதிர்க்கட்சியில் இணைந்த பிறகு சுயமரியாதை இழந்து காலில் விழும் அவலம் நடக்கும். அதன் ஒரு குறியீடாக அவரது மேல்சட்டை என்ற மானத்தை இழந்து தான் அதிகாரம் என்னும் குதிரையில் பயணிப்பதாக காட்சி வைத்திருப்பார் இயக்குனர்.
இன்னொரு விதமாகவும் புரிந்து கொள்ளலாம். அதிமுக மாதிரியான சந்தர்ப்பவாத கட்சியில் இணையும்போது சுயமரியாதையும் இழந்து விடக்கூடும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒடுக்கப்பட்டவர்கள் கட்சி அரசியலில் இறங்கும்போது எந்த விதத்திலும் சுயமரியாதை இழக்கக்கூடாது. அப்படி இழந்த பெறும் அதிகாரத்தால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை என்பதுதான் வடிவேலு கதாபாத்திரத்தின் அடிப்படை அம்சம்.
நிறைய காட்சிகள் வெட்டி இருப்பது போல் தோன்றுகிறது. வசனத்தில் தயக்கம் தெரிகின்றது.
காட்சி வடிவமைப்பில் துல்லியம் இல்லை. ரொம்பவும் வன்முறையாக தோன்றக்கூடாது என்பதால் இருக்கலாம். காட்சிகள் வெட்டப்படாத முழு திரைப்படம் OTTல் வரும் என்று நினைக்கின்றேன்.
ஒரு பிரெஞ்சு திரைப்பட இயக்குனருக்கு உள்ள பரிபூரண சுதந்திரம் மாரிசெல்வராஜுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று அடிக்கடி யோசிப்பதுண்டு.
அதற்கு மக்களும் பிரெஞ்சு மக்கள் போல பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கிரிஞ்ச் மக்களாக இருந்தால் என்ன செய்வது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக