புதன், 31 மே, 2023

பாம்புபிடி வீரர் நரேஷ் ஸ்கூட்டருக்குள் வைத்த நாக பாம்பு தீண்டி பலி. bredcrumb ராஜநாகம்.. மலைப்பாம்புகளை மீட்ட

tamil.oneindia.com - Halley Karthik  : பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்மகளூருவில் விஷ பாம்பு கடித்ததில், பாம்பு பிடி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் மனிதர்கள் பரிணாமம் அடைவதற்கு முன்னரே பாம்புகள் தோன்றிவிட்டன. அது தோன்றிய காலம் முதல் பாம்பு-மனிதன் மோதல்கள் தவிர்க்க இயலாததாக நீடித்து வருகிறது.
பாம்பு எல்லா காலநிலைக்கும், எல்லா இடத்திலும் வாழும் தன்மையை பெற்றிருப்பதால் விவசாய நிலங்கள் தொடங்கி வீடுகள் வரை இந்த மோதல்கள் நிகழ்ந்துவிடுகிறது.
இருப்பினும் மனிதன் இயற்கையை மெல்ல புரிந்துக்கொள்ள தொடங்கிய பின்னர் பாம்புகள் குறித்தும் சரியான புரிதலை வளர்த்துக்கொண்டான்.


இதன் பின்னர் பாம்பை பார்த்தவுடன் கொல்வதற்கு பதிலாக பாம்பு பிடி வீரர்களிடம் தகவல் கொடுக்கப்படுகிறது.
அவர்கள் பாம்புகளை லாவகமாக பிடித்து அடர் வனப்பகுதியில் விட்டுவிடுகின்றனர். இது ஒரு கலை என்றே சொல்லலாம். இதற்கு அசாத்திய துணிச்சலுடன் பாம்புகள் பற்றிய புரிதல்களும் அவசியமாகிறது.

இந்த இரண்டு விஷயங்களிலும் கைதேர்ந்தவர்தான் சிக்மகளூரை சேர்ந்த பிரபல பாம்பு நரேஷ். ஒரு நொடி கவனம் சிதறினாலும் கூட மரணம் நிச்சயம் எனும் இந்த விவகாரத்தில் நரேஷூக்கு ஆர்வம் வந்தது ஓர் வித்தியாசமான கதை என்றே சொல்லலாம். தொடக்கத்தில் இவருக்கு தையல் தொழில் மட்டுமே தெரிந்திருந்தது. இதில் கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு அன்றாடம் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஒருநாள் எதிர்பாராத விதமாக இவரது நண்பர் ஒருவரை பாம்பு கடித்துவிட, நண்பர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அப்போதுதான் இவருக்கு பாம்புகளை பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சினிமா கதைகளில் வருவதை போல, ஏதோ ஆர்வத்தில் இந்த துறைக்குள் வந்துவிட்டு கண்ணில் பட்ட பாம்பை எல்லாம் பிடித்து இவர் ஹீரோவாக ஆகிவிடவில்லை. மாறாக பாம்பை புரிந்துகொள்வதில் இவர் பட்டபாடு, இவருக்கு மட்டும்தான் தெரியும்.

மட்டுமல்லாது இதுபோன்ற பாம்பு பிடிக்கும் முயற்சி ஒன்றில் எதிர்பாராத விதமாக பாம்பு கடித்ததால் தன்னுடைய விரல் ஒன்றையும் நரேஷ் இழந்திருக்கிறார். இருப்பினும் பாம்புகளை மீட்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இதற்கு ஊக்கமாக அமைந்தது, இதே பாம்புகள்தான். பாம்புகளில் சுமார் 3,600 வகை இருக்கிறது. ஆனால் இதில் வெறும் 600 வகையான பாம்புகள்தான் விஷம் கொண்டவை. மற்ற பாம்புகள் இந்த சூழலியலை பாதுகாக்க உதவுகிறது.

இது தெரியாமல் பாம்பு என்றாலே மக்கள் அதை கொல்வது, நரேஷை வெகுவாக பாதித்திருக்கிறது. எனவே பாம்புகளை பாதுகாக்கவும், பாம்புகள் குறித்த புரிதல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் இந்த பாம்பு பிடி தொழிலில் தீவிரமாக பணியாற்றினார்.

அடடா மழைடா.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அடடா மழைடா.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

இப்படி இருக்கையில் நேற்று சிக்மகளூரில் குடியிருப்பு ஒன்றில் பாம்பு புகுந்துவிட்டதாக இவருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து அங்கு சென்ற அவர், ஒளிந்திருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்து தனது பைக்கின் டிக்கியில் போட்டு எடுத்து வந்திருக்கிறார். அதனை எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக நரேஷை கடித்திருக்கிறது. இந்த சம்பவத்தை கவனித்த அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இவரது உயிர் பிரிந்துள்ளது.

51 வயதான இவர் கடந்த 27 ஆண்டுகளாக பாம்புகளை பிடித்து வந்திருக்கிறார். தற்போது வரை 400க்கும் அதிகமான ராஜ நாகங்களையும், 50க்கும் அதிகமான மலைப்பாம்புகளையும் இவர் பிடித்திருக்கிறார். விஷ முறிவு மருந்தை அவர் தன்னோடு வைத்திருக்கவில்லை என்பது இந்த சோக சம்பவத்திற்கு காரணமாகியுள்ளது.

இவருடைய இந்த வேலைதான் இவரை பிரபலமாக்கியது. சிக்மகளூர் மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களிலும், கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடிக்க வேண்டும் எனில் பலரும் இவரைத்தான் நாடுவார்கள். அதேபோல கடந்த 2013ம் ஆண்டு சிக்மகளூர் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார்.

வாழ்க்கையில் பல வித்தியாசமான பாம்புகளை கையாண்ட இவரை போன்ற பாம்பு பிடி வீரர்கள் ஏதோ ஒரு பாம்பை பிடித்துவிட்டுதான் இந்த தொழிலுக்குள் வருகிறார்கள். அதேபோல ஏதோ ஒரு பாம்பு கடித்த பின்னர்தான் இந்த தொழிலை விட்டு வெளியேறுகிறார்கள். அந்த வகையில் நரேஷ் சேவை சிக்மகளூர் மக்களால் என்றென்றும் நினைவு கூறப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக