புதன், 31 மே, 2023

இறந்த மூதாதையர்களை நாம் சந்திக்க முடியுமா? - ஐன்ஸ்டீனின் குவாண்டம் மெக்கானிக்ஸ் சொல்வது என்ன?

ஐன்ஸ்டீன்

bbc.com  -  டாலியா வென்ச்சுரா : சபின் ஹோசன்ஃபெல்டர் ஓர் இளைஞருடன் டாக்ஸியில் இருக்கும் போது தான் ஓர் இயற்பியலாளர் என்று அறிமுகப்படுத்தியதும் அந்த இளைஞர் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
"குவாண்டம் மெக்கானிக்ஸ் காரணமாக என் பாட்டி இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு மதகுரு என்னிடம் சொன்னார். அது உண்மையா?" என்பதே அந்தக் கேள்வி.
இது மாதிரியான கேள்விகளைக் கேட்க அவர் பொருத்தமானவர்தான்.
ஏனெனில், ஜெர்மனியின் மியூனிக் பல்கலைக்கழக கணித தத்துவ மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானியான சபின் ஹோசன்ஃபெல்டர், இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவதில் நேரத்தை செலவிடுபவர்.


"பதிலளிக்க கடினமாக இருக்கும் இது போன்ற பெரிய கேள்விகள்தான் ஆரம்பத்தில் இருந்தே இயற்பியலில் என்னை ஈர்த்தன" என பிபிசி முண்டோ சேவையிடம் சபின் ஹோசன்ஃபெல்டர் கூறினார்.
'’20 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் என்னிடம் பதில் இல்லை. ஆனால், என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் என்னால் நீண்ட பதிலை அளிக்க முடியும்’’ என்றும் அவர் கூறினார்.

"இந்த பிரபஞ்சத்தில் நாம் எவ்வாறு பொருந்துகிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான விருப்பம், இயற்பியலில் நாம் பயன்படுத்தும் அடிப்படை விதிகள் அதைப் பற்றி நமக்கு என்ன கூறுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான விருப்பம் ஆகியவை இதன் மீதான ஈர்ப்பிற்கு காரணம் என நான் நினைக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

"அவை எல்லா பெரிய கேள்விகளுக்கும் சரியாக பதிலளிப்பதில்லை, ஆனால் எது சாத்தியம் மற்றும் எது சாத்தியமற்றது என்பதற்கான குறிப்பை நமக்கு வழங்குகின்றன" என்கிறார் சபின் ஹோசன்ஃபெல்டர்.

சரி, பழைய கேள்விக்கே திரும்பிச் செல்வோம். அந்த மதகுரு சொன்னது உண்மையா?

சார்பு

"என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் குவாண்டம் மெக்கானிக்ஸ் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையுடன் அதிகம் தொடர்பு கொள்ளவில்லை" என்கிறார் சபின் ஹோசன்ஃபெல்டர்.

“ஆனால், சிறிது காலம் யோசித்த பிறகு, அது முற்றிலும் பொய் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். நீங்கள் குவாண்டம் இயக்கவியலை ஒதுக்கி வைத்தால், விண்வெளி மற்றும் நேரம் பற்றிய நம் கோட்பாடுகள் கடந்த காலத்தின் யதார்த்தத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் நமக்குச் சொல்கின்றன" என்றும் அவர் கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து, விசித்திரமான கேள்விக்கான பதில் அவருக்கு கிடைத்தது.

"ஐன்ஸ்டீன் நமக்குக் கற்றுக் கொடுத்தது என்னவென்றால் கடந்த காலத்தின் இருப்பை சரியாக அங்கீகரிக்காமல், தற்போதைய தருணத்தின் இருப்பைப் பற்றி நீங்கள் பேச முடியாது" என்கிறார் அவர்.

நிகழ்காலம் என்பது கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே உள்ள ஒரு கணம் என்று நீங்கள் கவனித்திருக்கலாம்.

இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் உங்களிடம் கேட்டால், இந்த கட்டுரையைப் படிக்கிறீர்கள் என்று நீங்கள் பதிலளிப்பீர்கள், ஆனால் அந்தப் பதிலில் சிறிது கடந்த காலம் உள்ளது.

"நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும், நீங்கள் பார்க்கும் அனைத்தும், கடந்த காலத்தில் ஒரு சிறிய நேரம்" என்கிறார் ஹோசன்ஃபெல்டர்.

எனவே நிகழ்காலம் என்பது மழுப்பலான ஒன்று.

"தற்போதைய தருணம் என்று நாம் அழைப்பது வேறொருவரின் எதிர்காலம் அல்லது கடந்தகாலமாக இருக்கலாம். ஐன்ஸ்டீன் அதை சம்மந்தப்பட்டவரின் சுதந்திரம் என்று அழைத்தார்" என்கிறார் ஹோசன்ஃபெல்டர்.

ஐன்ஸ்டீனின் கருத்து

இதை நன்றாகப் புரிந்துகொள்ள, ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற சிந்தனை பரிசோதனையை நினைவு கூர்வோம்.

அவர் கற்பனை செய்த காலகட்டத்தில் இரண்டு கருத்துகள் இருந்தன. நியூட்டனியர்கள் ஒளியின் வேகத்தை அளவிடும் போது நீங்கள் எப்படி நகர்ந்தீர்கள் என்பதைப் பொறுத்து அது மாறுபடும் என்று கூறினர். ஆனால், ஒளியின் வேகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மாக்ஸ்வெல்லியர்கள் வாதிட்டனர்.

ஐன்ஸ்டீன் வேகத்தின் முக்கிய கூறான நேரத்தில் கவனம் செலுத்தினார்.

உதாரணமாக, ரயில் 7:05 மணிக்கு வரும் என்று நீங்கள் சொன்னால், அது 7:05ஐக் காட்டும் கடிகாரத்துடன் ஒரே நேரத்தில் நடைமேடையை வந்தடைகிறது என்று அர்த்தம்.

ஒரே நேரத்தில் நடக்கும் இது நீங்கள் எவ்வாறு நகர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது என்று அவர் நினைத்தார்.

கால ஓட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்பது இதன் பொருள்.

ரயில் நிலைய நடைமேடையில் ஒரு மனிதர் நிற்பதை ஐன்ஸ்டீன் படம் பிடித்தார்.

திடீரென இரண்டு மின்னல்கள் அவரின் இரு புறங்களிலும் ஒரே தூரத்தில் வெட்டுகின்றன.

ஒவ்வொரு ஒளியும் துல்லியமாக ஒரே நேரத்தில் அவரின் கண்களை அடைகிறது.

இரண்டு கதிர்களும் ஒரே நேரத்தில் அவரைத் தாக்கின.

ஆனால், அந்தத் துல்லியமான தருணத்தில் ஒளியின் வேகத்தில் ஒரு ரயில் பெண் பயணியுடன் சென்றுகொண்டிருக்கிறது.

ஒளிக்கற்றைகளில் இருந்து வெளிச்சம் வெளிப்படும் போது ரயில் ஒன்றை நோக்கியும் மற்றொன்றிலிருந்து விலகியும் செல்கிறது.

முன்பக்கக் கதிரின் ஒளி, அது பயணிக்கும் திசையில், தூரம் குறைவாக இருப்பதால் முதலில் அவள் கண்களை அடைகிறது.

நடைமேடையில் இருந்த ஆணை போல அல்லாமல் அந்தப் பெண்ணிற்கு நேர மாறுபாடு இருந்தது.

ஒளியின் வேகம் நிலையானது என்றால் யார் சரி?

கடந்த காலம், நிகழ்காலம்

நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நிகழ்கால கருத்தை வரையறுப்பதற்கான இந்த இயலாமை "ஒரே நேர சார்பியல்" என்று அழைக்கப்படுகிறது.

"ஐன்ஸ்டீன் நேரத்தை ஒரு பரிமாணமாகக் கருத வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் விண்வெளி நேரம் என்ற அமைப்பு குறித்து யோசித்தார்’’ என்கிறார் ஹோசன்ஃபெல்டர்.

"நீங்கள் குறிப்பிட்ட நிகழ்காலத்தை வரையறுக்க முடியாது. ஏனெனில் அது அனைவரோடும் பொருந்ததாது".

இதை அடிப்படையாக கொண்டால், ஒவ்வொரு கணமும் இப்போது ஒருவருடையதாக இருக்கலாம் என்கிறார் ஹோசன்ஃபெல்டர்.

அதில் உங்கள் கடந்த காலத்தின் அனைத்து தருணங்களும் உங்கள் எதிர்காலமும் அடங்கும்.

"இது நிகழ்காலத்தைப் போலவே கடந்த காலமும் உள்ளது என்ற முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்லும்" என்கிறார் ஹோசன்ஃபெல்டர்.

இது, நமது நிகழ்காலத்தைப் போலவே உங்கள் கொள்ளுப் பாட்டி உயிருடன் இருக்கும் கடந்த காலமும் இருக்கிறது என்று நம்மை யோசிக்க வைக்கும்.

"நீங்கள் உங்கள் கொள்ளுப் பாட்டியிடம் பேச விரும்பினால், இவை எதுவும் நிச்சயம் உங்களுக்கு உதவாது, ஏனெனில் அது எப்படி என்பது இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை" என்கிறார் ஹோசன்ஃபெல்டர்.

விதிகள்

"இந்த கட்டத்தில் நான் ஒப்புக்கொள்ள வேண்டும், நான் சுவாரஸ்யமாகக் கருதும் இவை சரியாக இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம்" என்கிறார் அவர்.

"நீங்கள் இது பற்றி சிந்தித்தால் ஒருவர் இறக்கும் போது ஒரு வகையில் அவர் தொடர்ந்து இருப்பார்’’ என்றும் ஹோசன்ஃபெல்டர் கூறுகிறார்.

"என்ன நடக்கிறது என்றால், உங்களை ஆளுமையாக்கிய அனைத்து தகவல்களும் மாறலாம். ஆனால் இயற்கையின் அடிப்படை விதிகள் செயல்படும் விதத்தில் இருந்து இந்த தகவல் அழிக்கப்படவில்லை என்பதை நாம் அறிவோம்’’ என்கிறார் ஹோசன்ஃபெல்டர்.

அதாவது, தகவல் இன்னும் உள்ளது, ஆனால் நடைமுறை காரணங்களுக்காக அதை மீட்டெடுக்க முடியாது.

எனினும், ஒரு பில்லியன் ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும் என ஆச்சர்யப்படும் ஹோசன்ஃபெல்டர், பிரபஞ்சம் தொடர்ந்து இருக்கப் போகிறது, எனவே தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சாத்தியம் உள்ளது என்கிறார்.

"தகவல்கள் இனி ஒரே இடத்தில் இல்லை, அதை நம்மால் அணுக முடியாது என்றாலும், அதை எப்படிச் செய்வது என்று வேறு யாராவது கண்டுபிடிப்பார்கள் அல்லது மனிதர்களின் இயல்பில் ஏதாவது மாறலாம்’’ என்கிறார் ஹோசன்ஃபெல்டர்.

"இது பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். உள்ளுணர்வுடன் இதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நிகழ்காலம் பற்றிய நம் கோட்பாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பற்றி அறிந்தவற்றின் அடிப்படையில், நம் இருப்பு காலத்தை மீறுவதாக எனக்குத் தோன்றுகிறது என்கிறார் ஹோசன்ஃபெல்டர்.

நம்மையும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் உருவாக்கும் தகவல்களில் காலமற்ற ஒன்று உள்ளது

ஐன்ஸ்டீன் கூறியது போல, நம் இயற்பியலாளர்களைப் பொறுத்தவரை, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு ஒரு மாயையின் அர்த்தத்தை மட்டுமே கொண்டுள்ளது. எனினும் அது நிலையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக