வியாழன், 11 மே, 2023

அரசு பேருந்தில் பறை இசைக்கருவி: மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்!

 minnambalam.co-  christopher : பறை இசை கருவிகள் எடுத்து வந்த கல்லூரி மாணவியை பாதி வழியிலேயே கீழே இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் இன்று (மே 11) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மாணவி ரஞ்சிதா. இவர் திருநெல்வேலியிலுள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். கல்லூரி ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது சொந்த ஊரில் இருந்து பறை இசைக்கருவிகளை கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் அந்த இசைக்கருவிகளை பேருந்தில் எடுத்து செல்வதற்காக திருநெல்வேலி புதிய நிலையத்தில் மதுரை செல்லும் அரசு பேருந்தில் அவர் ஏறியுள்ளார்.

பேருந்து புறப்பட தயாரான நிலையில், டிக்கெட் வழங்க வந்த நடத்துனர் கணபதி பறை கருவிகளை பார்த்து கோபமடைந்துள்ளார்.  மேலும் அதனையெல்லாம் பேருந்தில் கொண்டு வரக்கூடாது என்று கூறி, மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி பாதி வழியிலேயே கீழே இறங்க சொல்லியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பறை இசைக்கருவிகளுடன் மாணவியை இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் தெரிந்த செய்தியாளர்கள், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு தெரிவித்தனர். அதற்கு அவரும் இதுகுறித்து உடனடியாக போக்குவரத்து கழக அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பின்னர் அரைமணி நேரம் இசைக் கருவிகளுடன் காத்திருந்த மாணவி, கோவை சென்ற பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

பறை இசை கருவியை காரணம் காட்டி மாணவியை தகாத வார்த்தைகளால் அரசுப் பேருந்து நடத்துனர் திட்டியதோடு, அவரை கீழே இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நடத்துனர் கணபதியை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக