வியாழன், 11 மே, 2023

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு - பின்னணி என்ன? - BBC News தமிழ்

 bbc.com  :; பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு - பின்னணி என்ன?
தமிழக அமைச்சரவை சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அமைச்சர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார். நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான பட்டியல் வெளியானதும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.



புதிய மாற்றங்கள் என்னென்ன?
தமிழ்நாட்டு அமைச்சரவையின் புதிய அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார் டி.ஆர்.பி. ராஜா. தற்போதைய அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர், அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மாற்றமின்றி 35 ஆக நீடிக்கிறது.

இருந்தாலும், அமைச்சரவையில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழக நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக அமைச்சரவையில் இணையும் டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பால் வளத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும் மருமகன் குறித்தும் அவர் பேசியவை, கட்சிக்குள் பெரும் புயலையே ஏற்படுத்தின. இந்தப் பின்னணியில்தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அவர் வகித்துவந்த முக்கியத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

யார் இந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்?

நீதிக் கட்சியின் தலைவரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமர் பி.டி. ராஜனின் பேரனும் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மகனுமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டார்.

2006ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானார். ஆனால், பதவியேற்று மதுரைக்குத் திரும்பும் வழியிலேயே அவர் மரணமடைந்தார். அந்தத் தருணத்திலேயே அவரது மகன் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை அவரது தந்தையின் தொகுதியான மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிடும்படி தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வலியுறுத்தினார். ஆனால், அந்த சமயத்தில் அவர் அதனை ஏற்கவில்லை.

இதற்குப் பிறகு 2016ல் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிறகு, மீண்டும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அதில் வெற்றிபெற்றார். தி.மு.கவின் அமைச்சரவையில் நிதியமைச்சர் என்ற முக்கியப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, மிக மோசமான நிலையில் இருந்த நிதித்துறையை மேம்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன. பாராட்டுதல்களையும் பெற்றன. ஆனால், அதே நேரம் அரசின் பல்வேறு துறைகளுக்கு அவர் நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.

மற்றொரு பக்கம், தேசிய அளவில் தி.மு.கவின் முகத்தை மாற்றியமைப்பதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். ஆங்கில ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகள், தொலைக்காட்சி விவாதங்களில் அவர் பங்கேற்று முன்வைத்த கருத்துகள் ஆகியவை நாடு முழுவதும் வெகுவாகக் கவனிக்கப்பட்டன.

தி.மு.கவின் ஐடிவிங்கை தீவிரமாகச் செயல்படவைக்க முடிவுசெய்யப்பட்டபோது, அதன் செயலராக பி.டி.ஆர். நியமிக்கப்பட்டார். தி.மு.க. ஐ.டி. விங்கின் கட்டமைப்பை முழுமையாக உருவாக்கியதிலும் கட்சிக் கட்டமைப்பு குறித்த தரவுகளை ஒழுங்குபடுத்தியதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் செலவுகளில் முறைகேடு இருப்பதாகக் கூறி அவர் வெளியிட்ட விவரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், முதலமைச்சர் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியானது, அவர் பற்றிய நேர்மறை பிம்பம் அனைத்தையும் மாற்றியமைத்தது.

நாசர் நீக்கப்பட்டது ஏன்?

பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசரைப் பொறுத்தவரை, அமைச்சரான நாளில் இருந்து தினமும் ஆய்வுகள், கூட்டங்கள் என பரபரப்பாகவே இருந்தார். அவருக்கு முன்பாக அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியின் ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்தார்.

ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை என்பதோடு, நாசர் மீதே பல புகார்கள் குவிந்தன. பால் வளத்துறையின் கீழே வரும் ஆவினின் நிர்வாகத்தில் குளறுபடிகள், முறைகேடுகள் என புகார்கள் குவிந்தன. அ.தி.மு.க. ஆட்சியில் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இவரது நிர்வாகத்தின் கீழ் ஒரு கட்டத்தில் பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டராகக் குறைந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக சென்னையின் பல பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது, அரசைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

இது தவிர, வேறு சில சர்ச்சைகளிலும் அவரது பெயர் அடிபட்டது. ஊடக கேமராக்களுக்கு முன்பாகவே ஒருவரை கல்லைக் கொண்டு எறிந்தது, அமைச்சரின் மகனும் கவுன்சிலருமான ஆசிம் ராஜா உள்ளாட்சி நிர்வாகத்தில் தலையிடுவது என பலவிதங்களிலும் புகார்களுக்கு உள்ளானார் நாசர். இதனால், இவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என நீண்ட நாட்களாகவே பேசப்பட்டுவந்தது.

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்

புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்படும் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த தி.மு.க. தலைவருமான டி.ஆர். பாலுவின் மகன். 2011ல் முதல் முறையாக மன்னார்குடி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்குத் தேர்வான இவர், தற்போது மூன்றாவது முறையாகவும் அதே தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். துவக்கத்திலேயே அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு திட்டக் குழுவின் உறுப்பினர் பதவிதான் கிடைத்தது. அதற்குப் பிறகு தி.மு.க. ஐ.டி. விங்கின் செயலராகவும் அவர் நியமிக்கப்ப்டடார். ஆட்சி அமைந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு, எடுத்த எடுப்பிலேயே முக்கியத் துறையான தொழில்துறையைக் கொடுத்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியிருந்தாலும், அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கையிலேயே இந்தத் துறை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது, உலக முதலீட்டாளர் மாநாட்டை விரைவில் நடத்துவது போன்ற பெரிய சவால்கள் அவர் முன்பாக இருக்கின்றன.

அமைச்சரவை மாற்றங்களின் பின்னணி

தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையை கவனித்துவந்த மனோ தங்கராஜுக்கு பால் வளத் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆவினின் நிர்வாகத்தைச் சீராக்க வேண்டிய உடனடிப் பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை நிதித் துறையிலிருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டது ஒரு பின்னடைவுதான் என்றாலும், மிகப் பெரிய சர்ச்சைக்குப் பிறகும் அமைச்சரவையில் நீடிக்கிறார் என்பதே குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கும்.

ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சரான கயல்விழி செல்வராஜ் நீக்கப்படுவார், அவருக்குப் பதிலாக தமிழரசி அந்தத் துறையின் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றெல்லாம் பேசப்பட்டாலும், அந்த மாற்றம் நடக்கவில்லை.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் தமிழக அமைச்சரவையில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டிருக்கிறது என்ற விமர்சனமும் இருக்கிறது. அதேபோல, பா.ஜ.க. வெளியிட்ட ஆடியோவுக்காக, திறம்படச் செயல்பட்ட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நீக்க வேண்டுமா என்ற கேள்வியையும் தி.மு.க. தொண்டர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

அமைச்சர்கள் மாற்றம் தவிர, முக்கியத் துறைகளின் செயலர்களும் இந்த வார இறுதிக்குள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பாக தமிழ்நாடு அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

அமைச்சரவை மாற்றம் பற்றி பிடிஆர் கூறியது என்ன?

அமைச்சரவை மாற்றம் தொடர்பான பட்டியல் வெளியானதும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்ட விவரம் பின்வருமாறு:

கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும் . மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் ('21 - '22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் ('22 - '23, '23 - '24) சமர்ப்பித்துள்ளேன். முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.

நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.

உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான #1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை மாண்புமிகு முதல்வர் அவர்கள் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.

தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம். எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிருவகித்த மனோ தங்கராஜ் அவர்களின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக