வெள்ளி, 12 மே, 2023

உதயசந்திரன் இடத்தில் முருகானந்தம்? அமைச்சரவையைத் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம்!

மின்னம்பலம் - Aara :  தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்ட அதிர்வுகள் அடங்குவதற்குள் உயர் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சு, கோட்டை வட்டாரத்திலிருந்து கசியத் தொடங்கியுள்ளது.
அதிலும்  முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். மாற்றம் செய்யப்பட இருக்கிறார் என்ற தகவல் தான் கோட்டை வட்டாரத்தை ஹாட் ஆக்கியிருக்கிறது.  ஈரோடு கலெக்டர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் போன்ற பதவிகளில் இருந்தபோது தனது துடிப்பான பணிகளால் தமிழ்நாடு முழுதும் பேசப்பட்டவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.
2021 இல் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும் அவரது நம்பர் ஒன் (முதன்மை) செயலாளராக பதவி ஏற்றார் உதயசந்திரன். உதயச்சந்திரனுக்கு அடுத்தபடியாக உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் முதலமைச்சரின் செயலாளர்களாக உள்ளார்கள்.

இவர்களில் உதயசந்திரன் மீண்டும் பரபரப்பான செய்திகளில் அடிபட ஆரம்பித்தார். ‌‌பல்வேறு அமைச்சர்களும், ‘அதிகாரிகள் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்கள். கேட்டால் உதயசந்திரன் சார்கிட்ட கேட்டுக்கங்க என்று கை காட்டுகிறார்கள்’ என்று புலம்பி வருகிறார்கள்.  

கோட்டை வட்டாரத்தில் இது குறித்து மேலும் விசாரித்த போது, “முதல்வரின் நம்பர் ஒன் செயலாளரான உதயசந்திரன் தான், பல்வேறு துறைகளில் நடக்கும் விஷயங்களை முதலமைச்சரின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்கிறார்.

முதலமைச்சரின் டேஷ் போர்டு திட்டத்தை ஒருங்கிணைத்து ஒவ்வொரு அமைச்சரும் தங்களது துறை ரீதியான திட்டங்களின் தற்போதைய நிலவரங்களை அப்டேட் செய்வதையும் கண்காணித்து வருகிறார். இந்த விவகாரத்தில் கூட  முதல்வர் கணிசமான அமைச்சர்கள் மீது கோபப்பட்டார். இதற்கும் உதயச்சந்திரன்தான் காரணம், அவர்தான் போட்டுக் கொடுக்கிறார் என அமைச்சர்கள் சிலர் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

அமைச்சர் உதயநிதி சொல்லி கூட சில விஷயங்கள் உதயசந்திரனிடம் நடக்கவில்லை.  இந்த அடிப்படையில்  உதயச்சந்திரனை நேரடியாகவே சந்தித்து அமைச்சர்  உதயநிதி சில விஷயங்களை மனம் விட்டுப்  பேசியிருக்கிறார்,  

இந்த நிலையில்   முதலமைச்சரை  சந்தித்த உதயசந்திரன் தன்னை முதலமைச்சரின் செயலாளர்  பதவியில் இருந்து விடுவித்து விடுமாறும் நிதித்துறை செயலாளராக தான் பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் முதலில் முதலமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். உதய சந்திரனோ பல்வேறு சர்ச்சைகளில் தன் பெயர் தேவையில்லாமல் அடிபடுவதாகவும் அதனால் நிதித்துறை செயலாளராக பணியாற்றிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நிதித்துறை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். இவரும் உதயசந்திரனும் நல்ல புரிந்துணர்வு உள்ளவர்கள். இந்தப் பின்னணியில் முதலமைச்சரின் நம்பர் ஒன் செயலாளராக தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரியான  முருகானந்தம் பதவியேற்கலாம் என்றும்… உதயசந்திரன் நிதித்துறை செயலாளர் பதவி ஏற்க கூடும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது”என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

ஏற்கனவே முதலமைச்சரின் செயலாளர்களில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சண்முகம் இருக்கிறார். ஒருவேளை முருகானந்தமும் முதலமைச்சரின் செயலாளர் (நம்பர் 1) பதவிக்கு வந்தால் முதலமைச்சரின்  செயலாளர்களில் இரண்டு பேர் தலித் சமுதாயத்தைச்  சேர்ந்தவர்கள் என்ற வரலாறு படைக்கப்படலாம்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக