திங்கள், 1 மே, 2023

கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை .. .. பாஜக, ஜனதா தளத்தை அலறவிடும் புது கருத்து கணிப்பு

 tamil.oneindia.com - Nantha Kumar R  :; பெங்களூர்: மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட கூடுதலாக வரலாற்று வெற்றியை பெறலாம் எனவும், பாஜக பெரிய அளவில் சறுக்கலை சந்திக்கும் எனவும் தற்போது புதிய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


கர்நாடகாவை பொறுத்தமட்டில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். இதனால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மேஜிக் நம்பரான 113யை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. மேலும் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் கிங்மேக்கராக மாற ஜேடிஎஸ் கட்சியும் தயாராக இருக்கிறது.

இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை உருவாகும் என தெரிவித்தன. தற்போது பல கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. இந்நிலையில் தான் இன்று புதிய கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக C Daily Tracker சார்பில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஆளும் பாஜக பெரிய அளவில் சறுக்கலை சந்திப்பதாக இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் வரலாற்று வெற்றியை பெற வாய்ப்புள்ளதாகவும் அந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

அதாவது நடைபெற உள்ள கர்நாடகா சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளில் 44.4 சதவீத ஓட்டுகளுடன் காங்கிரஸ் கட்சி 130 முதல் 157 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் தற்போது அந்த கட்சி கூடுதலாக 77 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பாசிட்டிவ்வான விஷயமாகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடகா தேர்தல் முடிவு மேற்கூறியது படி அமைந்தால் அது நிச்சயம் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரிய உற்சாகத்தை கொடுக்கும்.

மாறாக இந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் சறுக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் தேர்தலில் பாஜக 37 முதல் 56 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018 தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சுமார் 48 தொகுதிகளை பறிகொடுக்கலாம் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவால் 30.6 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற முடியும் எனவும் இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த 2 தேசிய கட்சிகளை தவிர்த்து கர்நாடகாவில் அவ்வப்போது கிங்மேக்கராக வலம் வரும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 18 சதவீத வாக்குகள் பெறும். இதன்மூலம் 22 முதல் 34 தொகுதிகள் வரை ஜேடிஎஸ் கட்சி கைப்பற்றும். இதுதவிர 7 சதவீத வாக்குகளுடன் மற்றவர்கள் அதிகபட்சமாக 3 தொகுதிகளை கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The results of a new opinion poll have been released that the Congress party will get a historic victory in the Karnataka assembly elections to be held on May 10th and the BJP will face a big slippage.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக