சனி, 1 ஏப்ரல், 2023

செல்போன் அடிமைகளை மீட்க தனி மையம்- இதுவரை 252 பேர் குணம் அடைந்தனர்

செல்போன் அடிமைகளை மீட்க தனி மையம்- இதுவரை 252 பேர் குணம் அடைந்தனர்
   ஓமந்தூரார் அரசு மருத்துவமனை

 மாலைமலர் : சென்னை: செல்.... செல்... என்று செல்பவர்களே ஒரு நிமிடம் நில்லுங்கள்...
பொதுவாக ஆஸ்பத்திரிகளில் இதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் துறை, முட நீக்கியல், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், தோல் என்று பலவகையான நோய் சார்ந்த துறைகளை பார்த்து இருப்போம்.
ஆனால் இங்கு மட்டும் இணையதள சார்பு மீட்பு மையம் என்று ஒருதுறை தனியாக செயல்படுகிறது. இங்கு சிகிச்சை அளிக்க தனியாக மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
இணையதள சார்பு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. சுருக்கமாக சொன்னால் வாழ்க்கையே இணையத்தோடு இணைந்து விட்டது. அதிலும் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பது இங்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சி அளிக்கிறது.


சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி இருக்கைகளில் அமர்ந்து இருந்த இளம்பெண்களை பார்த்ததும் பார்ப்பதற்கு லட்சுமிகரமாக நன்றாகத்தான் இருந்தார்கள்.
ஆனால் ஒவ்வொருவரிடமும் கேட்ட போதுதான் இன்றைய தலைமுறை எவ்வளவு பெரிய ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறது என்பதை புரிய முடிந்தது.

தயவுசெய்து பெயர்களை வெளியிடாதீர்கள். எங்களால் நாலுபேர் திருந்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சொல்கிறோம் என்றார்கள். இதனால் அவர்கள் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.

ஒருவர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர், நர்சிங் படித்து வருகிறார். அவர் கூறியதாவது:-
படிப்பதற்கு, செல்போன் உதவிகரமாக இருக்கும் என்றுதான் ஆசைப்பட்டு வாங்கினேன். ஏதோ அவசர தேவைகளுக்கும், தேடலுக்கும் மட்டுமே என்றிருந்த நிலை மாறி விட்டது. தோழிகள், நண்பர்கள் மெசேஜ் அனுப்ப தொடங்கினார்கள்.

அதன்பிறகு சாட்டிங், அப்புறம் முகநூல், இன்ஸ்டாகிராம் என்று இணையத்தின் இனிமையான பக்கங்கள் ஒவ்வொன்றும் என்னை கவர்ந்தன.
மெல்ல மெல்ல இணையத்தோடு இணைந்து பொழுதெல்லாம் இணையத்தின் வசமானேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

செல்லும் கையுமாகத்தான் எப்போதும் இருப்பேன். வீட்டில் திட்டத்தான் செய்தார்கள். ஆனாலும் எப்போதும் செல்போனைத்தான் நோண்டி கொண்டிருப்பேன்.

குறைந்தபட்சம் தினமும் 12 மணி நேரம் செல்போன் பார்த்தேன். பார்க்கும் போது ஜாலியாகத்தான் தெரிந்தது.
ஒரு கட்டத்தில் எதற்கெடுத்தாலும், கோபம், எரிச்சல் வந்தது. யாரை பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் கோபம்... கோபம்... எதற்குதான் இப்படி கோபம் வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. அதன்பிறகுதான் சிகிச்சை பெற வந்தேன் என்றார்.

மற்றொரு இளம்பெண் கல்லூரி மாணவி கூறும்போது, "நான் கொஞ்சம் கொஞ்சமாக செல்லுக்கே அடிமையாகி விட்டேன் என்பது எனக்கே புரியவந்தது.

எப்போது செல்போனில் அதிகமாக மூழ்க தொடங்கினேனோ அதன் பிறகு எனது படிப்பும் மூழ்க தொடங்கியது. அரியர் விழ தொடங்கியது. கேரியர் கேள்விக்குறியானது.
செல்போனால் சீரழிகிறோம் என்பது தெரிந்தும் அதில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். அதன்பிறகுதான் இந்த மையத்தை நாடி வந்தேன் என்றார்.

இந்த மருத்துவ மையத்தை சேர்ந்த டாக்டர் மலர் மோசஸ் கூறியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் அவசியமான தீமையாகவே இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் வகுப்பு, குடும்ப உறுப்பினர்களிடம் கூட ஆன்லைன் உரையாடல் என்று எல்லாமும் இணையத்தை சுற்றியே சுழல்கிறது. இயற்கையான மனித சுபாவங்கள், உணர்வுகள், மகிழ்ச்சி எல்லாமே மழுங்கடிக்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தின் அடிமையாகிவிட்டால் தங்கள் சமூக வாழ்க்கை, கல்வி, தொழில், தூக்கம் எல்லாவற்றையும் துறந்து செல்போனிலேயே நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து உடல் பருமன் என்று பல நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர். அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை கொடுப்போம்.

ரிலாக்ஸ் தெரபி, குரூப் தெரபி ஆகியவற்றை கொடுப்போம். குரூப் தெரபி என்பது ஏற்கனவே சிகிச்சை பெற்று மீண்டவர்கள் மூலம் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வைப்போம். இதன் மூலம் அவர்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்.

யோகா பயிற்சி உண்டு. தேவைப்பட்டால் மட்டும் மருந்து வழங்குவோம்.
சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நவீன மாற்றங்கள் வளரும் தலைமுறைக்கு ஏமாற்றங்களை தருவதாகவும் மாறி இருப்பது ஆரம்பத்திலேயே தடுக்கப்பட வேண்டியது. சரியான நேரத்தில் திட்டமிட்டு இந்த மையம் உருவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதால், அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் டாக்டர் ஜெயந்தி ஆகியோரது வழிகாட்டுதல்படி இந்த மையம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

மதுவுக்கு அடிமை, மாதுவுக்கு அடிமை, புகைக்கு அடிமை, சூதாட்டத்துக்கு அடிமை என்று நாம் இதுவரை பார்த்து வந்த அடிமைகளுடன் இந்த நவீன இணையதள அடிமையும் இணைந்து வருகிறது.
அடிமையாகாமல் மாற வேண்டியதும், மாற்ற வேண்டியதும் நம் கைகளில்தான் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக